Ad

சனி, 18 ஜூலை, 2020

`ஒரு வருடம் நான் முதல்வர்!' - பிரியங்காவிடம் கோரிக்கை வைத்த சச்சின்; நீக்கிய காங்கிரஸ்

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் 4 மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமாக இருப்பது ராஜஸ்தான். அங்கு அசோக் கெலாட் முதல்வராகவும் சச்சின் பைலட் துணை முதல்வராகவும் இருந்தனர். ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே இருவருக்கும் இடையே முதல்வர் பதவிக்கான மோதல் நிலவியது. பின்னர் மேலிட உத்தரவினால் அசோக் கெலாட் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக சச்சின் பைலட் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக் கெலாட் மீது அதிருப்தி தெரிவித்தார்.

அசோக் கெலாட் - சச்சின் பைலட்

இதைப் பயன்படுத்திக்கொண்ட பா.ஜ.க, ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்தது. ஆனால், சச்சின் பைலட்டுக்கு போதுமான எம்.எல்.ஏ-க்களின் பலம் இல்லாததால் அங்கு ஆட்சி கவிழ்ப்பு முறியடிக்கப்பட்டது. இதையடுத்து ஆளும் கட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வர் பதவியிலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டார்.

Also Read: `பாலியல் குற்றச்சாட்டு; மூத்த தலைவரின் சூழ்ச்சி?’ - சச்சின் பைலட் வெளியேற்றத்தின் பின்னணி

பிரியங்கா காந்தியின் முயற்சி: 

சச்சின் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் வரை அவரை எப்படியேனும் காங்கிரஸில் பிடித்து வைக்க வேண்டும் என பிரியங்கா காந்தி மிகக் கடுமையாகப் போராடியுள்ளார். ஆனால், அதற்கு சச்சின் பைலட் போட்ட ஒரு கண்டிஷன்தான், தற்போது அவர் மொத்தமாக பதவியிலிருந்து நீக்கப்படக் காரணம் என்கின்றனர் பிரியங்கா காந்தி வட்டாரத்தினர்.

பதவி நீக்கத்துக்கு முன்பு சுமார் 3 மணிநேரம் பிரியங்காவுடன் போனில் பேசியுள்ளார் சச்சின். அப்போது, `நான் அசோக் கெலாட் என்பவரால் தாக்கப்பட்டுள்ளேன். காங்கிரஸ் எனக்கு எதிராகச் செயல்படும்போது எவ்வாறு சமரசம் பற்றிப் பேச முடியும்.

சச்சின் பைலட்

அடுத்த ஒரு வருடத்துக்கு என்னை ராஜஸ்தானின் முதல்வராக அறிவிக்க வேண்டும். அதுவும் பொது வெளியில் அனைவர் முன்னிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாக வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நான் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் நேரில் சந்திப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் அப்படியே காங்கிரஸ் மேலிடத்துக்குப் பறந்துள்ளது. இதைக் கேட்டு அதிருப்தியடைந்த மேலிடம் உடனடியாக அனைத்துப் பதவிகளிலிருந்தும் சச்சினை விடுவித்து உத்தரவிட்டது.

பிரியங்கா காந்தி தன் குறைகளைப் பற்றிக் கேட்டறிந்து சோனியா மற்றும் ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என சச்சின் நம்பியதாகவும் ஆனால், அவர் எதிர்பாராதவிதமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் வேதனையடைந்ததாகவும் சச்சின் பைலட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சச்சின் பைலட், தான் பா.ஜ.க-வில் இணையப்போவதில்லை எனக் கூறிவிட்டார் இருந்தும் அடுத்தடுத்த திருப்பங்களால் ராஜஸ்தான் அரசியல் வட்டாரம் தொடர்ந்து பரபரப்பாகவே உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sachin-pilot-asked-to-be-made-cm-of-rajasthan-source-said

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக