Ad

சனி, 18 ஜூலை, 2020

விஜயபாஸ்கரிடம் பேசிய உம்மன் சாண்டி! - குழந்தையின் சிகிச்சைக்காகப் பறந்த சிறப்பு ஆம்புலன்ஸ்

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவரின் மனைவி டீனா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டீனா பிரசவத்துக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 8 நாள்களுக்குமுன் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு முதுகுத் தண்டில் கோளாறு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். `உடனடியாக அறுவைசிகிச்சை செய்தால், இந்தப் பிரச்னையை சரிசெய்துவிடலாம். இல்லையெனில், குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

கேரளாவிலிருந்து வந்த ஆம்புலன்ஸ்

அதற்கான மருத்துவ வசதிகள், வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில்தான் உள்ளது. அங்கு செல்லவும்’ என்று அடூர் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கொரோனா பொது முடக்கத்தால், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதில் இ-பாஸ் போன்ற நடைமுறை சிக்கல் இருப்பதால், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியை நாடினர் குழந்தையின் பெற்றோர். உடனடியாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை போனில் தொடர்புகொண்டு பேசிய உம்மன் சாண்டி, சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து குழந்தையை வேலூருக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தினார் அமைச்சர் விஜயபாஸ்கர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குக் குழந்தையுடன் பெற்றோர் கேரளாவிலிருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் நேரடியான ஏற்பாட்டினால், நடுவழியில் எந்த இடத்திலும் மறிக்கப்படாமல் நேற்று காலை 8 மணிக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது.

குழந்தையை தூக்கிச்செல்லும் மருத்துவக் குழு

சுமார் 700 கிலோ மீட்டர் தூரத்தை 10 மணி நேரத்தில் கடந்துவந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மேத்யூ என்பவரை உம்மன்சாண்டி தரப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினரும் பாராட்டினர். சி.எம்.சி-யில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு இனிமேல்தான் அறுவை சிகிச்சை நடக்கவிருக்கிறது.

மருத்துவமனை தரப்பில் விசாரித்தபோது, ‘‘உம்மன்சாண்டிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் விரைவாகக் கொண்டு வந்துள்ளனர். இனிமேல்தான் அறுவைசிகிச்சை செய்ய உள்ளோம்’’ என்றனர்.



source https://www.vikatan.com/news/india/minister-vijayabaskar-who-saved-the-childrens-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக