சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ரேவதி அப்ரூவராக மாறி நடந்த சம்பவங்களைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். காவலர் முத்துராஜூம் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதனால் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான பிடி இறுகிக் கொண்டிருக்கிறது.
Also Read: சாத்தான்குளம்: ஆளுங்கட்சி பிரமுகரின் பாதுகாப்பு! -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சிக்கிய பின்னணி
காவல் நிலையத்தில் போலீஸாருடன் சேர்ந்து ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நான்கு பேர் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறைச்சாலையில் அடைத்தார்கள். காவலர் முத்துராஜிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. அதில், அவர் பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
Also Read: சாத்தான்குளம்: அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவு! -பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கும் முதல்வர்?
கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ மற்றும் காவலரிடம் நேற்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் முதல்கட்ட விசாரணை நடத்தினார்கள். சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணையின்போது மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.
“சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வருபவர்களை வழக்கமாகத் தாக்குவது போலவே ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கினோம். அவர்களுக்கு இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை சார். அதன் காரணமாக கைது செய்யப்படுவேன் என்றெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
காவல் நிலையத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் உதவிக்கு யாராவது இருக்கிறார்கள். நான் சாதாரணக் குடும்பத்தில் இருந்து பணிக்கு வந்திருக்கிறேன். காவலராகப் பணியில் சேர்ந்து பின்னர் எஸ்.ஐ தேர்வுக்குச் சென்று பணியில் சேர்ந்தேன். என் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது” எனத் தழுதழுத்த குரலில் பேசியுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவரைச் சமாதானப்படுத்தியே விசாரணையைத் தொடர்ந்திருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நால்வரையும் ஒருவாரம் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவெடுத்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/general-news/sathankulam-si-was-sad-about-the-incident-happened-in-the-police-station
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக