கொரோனா வைரஸ் தாக்கம் உலகத்தையே முடக்கியுள்ளது. வைரஸ் பாதிப்பு ஒருபுறம் என்றால், ஊரடங்கு மற்றொருபுறம் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. முக்கியமாக வெளிமாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். அந்த வகையில், இலங்கையிலிருந்து கோவை மாவட்டத்துக்கு சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிப் பெண், சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்துவந்தார்.
Also Read: கொரோனா: முழு ஊரடங்கு அறிவிப்புகள் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தியதா... கட்டவிழ்த்துவிட்டதா?
இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சந்திரமோகனா. அவரது கணவர் பாஸ்கரன். இவர்களுக்குத் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் மாதம் தாய் காந்திமதியுடன், சந்திரமோகனாவும் பாஸ்கரனும் கோவைக்கு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். அதன் மூலம், சந்திரமோகனா தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
கொரோனா வைரஸ், ஊரடங்கு காரணமாக விமானம் இல்லாததால், அவர் யாழ்ப்பாணம் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென சந்திரமோகனா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சந்திரமோகனா கூறுகையில், “என் கணவர், கடந்த மார்ச் மாதம் தாயகம் திரும்பிவிட்டார். நானும், என் தாயும் புலியகுளம் பகுதியில் ரூ.5,000-க்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கொரோனாவால் இங்கு முடங்கிக்கிடக்கிறோம். போதிய நிதி வசதியும் இல்லை. அருகிலிருப்பவர்கள் உதவியுடன் நாள்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
எனக்கும், அம்மாவுக்கும் அடுத்த மாதம் விசா முடிகிறது. எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு விமானத்தில் பயணம்செய்ய அனுமதியில்லை. மேலும், குழந்தை இங்கு பிறந்துவிட்டால், பிறப்புச் சான்றிதழ் எடுப்பதில் தொடங்கி அனைத்திலும் பிரச்னை ஏற்படும்.
Also Read: Corona Live Updates: `ஒரேநாளில் 20,903 பேருக்கு தொற்று; 379 பேர் பலி’ -இந்தியாவில் கொரோனா நிலவரம்
எனவே, என்னை உடனடியாக சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும். பலமுறை கோரிக்கை வைத்தும் எங்குமே உரிய பதில் கிடைக்கவில்லை. தமிழக அரசும் இலங்கை அரசும் இணைந்து என்னை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
சந்திரமோகனாவின் கோரிக்கையைத் தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் பேசினார். தொடர்ந்து, சந்திரமோகனா மற்றும் அவரது தாய் இலங்கை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராசாமணி கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/srilanka-pregnant-woman-locked-in-coimbatore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக