உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கடுமையாக அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதிப்படைந்த அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. கொரோனா தொற்றைக் குணப்படுத்த அதிகாரபூர்வமாக எந்த மருந்தும் இதுவரை அறிவிக்கப்படாததால் மருத்துவத் துறையும் திணறி வருகிறது. மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதஞ்சலி நிறுவனம் மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் இதனால் 100 சதவிகிதம் பலன் கிடைப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா கிட் ஒன்றையும் வெளியிடுவதாக விளம்பரம் செய்தது. பதஞ்சலியின் நடவடிக்கைகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், `கொரோனில் என்ற மருந்து கொரோனாவைக் குணப்படுத்தும் என நாங்கள் கூறவில்லை’ எனக் கூறியுள்ளது.
பதஞ்சலியின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா இதுதொடர்பாக தற்போது பேசுகையில், ``கொரோனில் மருந்தைப் பயன்படுத்துவதால் கொரோனாவைக் குணப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. நாங்கள் மருந்து ஒன்றைத் தயாரித்துள்ளோம். இதனை கொரோனாவால் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு அளித்து பரிசோதனைகளை மேற்கொண்டோம். அப்போது, நோயாளிகள் குணமடைந்தனர் என்று கூறினோம். இதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் பேசுகையில், ``கொரோனா உடலில் பரவுவதைத் தடுக்கும் மற்றும் வைரஸை எதிர்த்துப் போராடும் மருந்தை எங்களுடைய ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது. இதனை நோயாளிகளுக்குக் கொடுத்து ஆய்வுகளையும் செய்தோம். இதில், எங்களுக்கு 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளன” என்று கூறியிருந்தார்.
Also Read: `கொரோனா 100% குணம்; பதஞ்சலி மருந்து கண்டுபிடிப்பு?’ -தடைவிதித்த மத்திய அரசு
மருந்து தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும் என்றும் பாலகிருஷ்ணா குறிப்பிட்டார். இதனையடுத்து, பதஞ்சலி நிறுவனம் கொரோனில்' மற்றும் `ஸ்வசரி' என்ற இரு ஆயுர்வேத மருந்துகளை அறிமுகப்படுத்தியது. இந்த மருந்துகள் அடங்கிய `கொரோனா கிட்’ என்பதையும் அறிமுகப்படுத்தி தொடர்ந்து விளம்பரங்களையும் செய்து வந்தது. இதனையடுத்து ஆராய்ச்சி செய்த குழு, மருந்துகளின் உள்ளீட்டுப் பொருள்கள், செய்முறைகள் என அனைத்துத் தகவல்களையும் பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டது. இதனை உறுதி செய்யும் வரை மருந்துகளை விளம்பரப்படுத்தவும் தடை செய்தது.
இதுதொடர்பாக பாலகிருஷ்ணா பேசும்போது, ``கொரோனா வைரஸ் பாதிப்பைக் குணப்படுத்தும் கொரோனில் மருந்து தொடர்பான அனைத்துத் தகவல்களும் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். பாபா ராம்தேவும், ``டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்த 280 நோயாளிகளிடம் இந்த மருந்தைப் பரிசோதனை செய்ததில் 100 சதவிகிதம் சாதகமான முடிவுகள் வந்துள்ளன” என்று குறிப்பிட்டார்.
இந்தக் குழப்பங்கள் குறித்து ஆயுர்வேதத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒய்.எஸ்.ராவத் பேசும்போது, ``எங்களுடைய நோட்டீஸ்களுக்குப் பதிலளித்த பதஞ்சலி நிறுவனம், கொரோனா கிட் எதுவும் தொகுக்கப்படவில்லை என்று கூறினர். கொரோனில் பேக்கேஜில் கொரோனா வைரஸின் படத்தை மட்டுமே அச்சிட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். கொரோனில் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் பேசுகையில், ``பாபா ராம்தேவ் நாட்டுக்குப் புதிய மருந்தைக் கொடுத்திருப்பது நல்ல விஷயம். ஆனால், ஆயுஷ் அமைச்சகம் அதனை முறையாக அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து பார்த்த பிறகு அனுமதி வழங்கப்படும்” என்று கூறினார். இத்தகையை நெருக்கடியான சூழ்நிலையில்தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகப் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்ததும் தற்போது அதனை மறுத்திருப்பதும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: `கொரோனாவுக்கு மருந்து..14 நாள்களில் குணம்..விரைவில் ஆதாரங்கள்!’- `பதஞ்சலி’ பாலகிருஷ்ணன்
source https://www.vikatan.com/news/india/we-didnt-say-coronil-cure-corona-says-patanjali-balakrishna
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக