சிறுமி
திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 15 வயதுடைய சிறுமி ஒருவர் சுற்றித்திரிந்தார். அதைக் கவனித்த ரயில்வே போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தன்னுடைய வீடு சென்னை அயனாவரத்தில் இருப்பதாகவும், வீட்டை விட்டு 20.3.2020-ல் வெளியில் வந்ததாகக் கூறியுள்ளார். அப்போது திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன், என்னை பெரம்பூரிலிருந்து திருத்தணிக்கு அழைத்து வந்ததாகத் தெரிவித்தார்.
திருத்தணியில் வெங்கடேசன், தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீஸார், உடனடியாக அயனாவரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை
இன்ஸ்பெக்டர் நடராஜன், உடனடியாகச் சிறுமியை மீட்க நடவடிக்கை எடுத்தார். அயனாவரத்திலிருந்து தலைமைக் காவலர்கள் ஜெயந்தி, வேல்முருகன் ஆகியோரை திருத்தணிக்கு அனுப்பி வைத்தார். திருத்தணி சென்ற போலீஸார், சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுமி கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அயனாவரம் போலீஸார், சிறுமியையை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் தேவிகா, சிறுமியிடம் விசாரித்தார். அவர் கூறிய தகவல்களை வாக்குமூலமாகப் பெற்ற போலீஸார், சிறுமியின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியின் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் சிறுமி, பாட்டி வீட்டில்தான் தங்கியிருந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிறுமி, வெளியில் வந்துள்ளார். அப்போது திருத்தணியிலிருந்து சென்னைக்கு தச்சு வேலைக்காக வந்த வெங்கடேசன், சிறுமியைத் தன்னுடன் திருத்தணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
தொடரும் சம்பவங்கள்
இந்தச் சமயத்தில் வெங்கடேசன் வேலைக்காக ஆந்திரா சென்றுள்ளார். அப்போது வெங்கடேசனின் அம்மா சிறுமியை வீட்டைவிட்டு துரத்தியுள்ளார். அதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த சிறுமி, வெங்கடேசனுக்குத் தெரிந்த மேஸ்திரி ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த சிறுமி, ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். சிறுமி கொடுத்த தகவலின்படி வழக்கு பதிவு செய்து வெங்கடேசனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். மார்ச் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை சிறுமிக்கு கொடுமை நடந்துள்ளது’’ என்றனர்.
Also Read: புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை, கொலை! -7 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் தொடர்ச்சியாக சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துவருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பூவியாபாரி ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்து திருச்சி சோமரசன்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தீயில் எரிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் நடந்தது. அடுத்து திருச்சி மணப்பாறையில் இன்னொரு சிறுமி உயிரிழந்தார். தற்போது சென்னை சிறுமிக்கு மார்ச் மாதத்திலிருந்து ஜூலை வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சிறுமி கூறிய தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கவுன்சலிங் மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்த போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-child-abused-in-thiruttani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக