Ad

புதன், 15 ஜூலை, 2020

``ஹிப் ஹாப் ஆதியோட அந்த ட்வீட்டுக்கும் எனக்கும்..!'' - ஓவராய் கலாய்த்தாரா ஜெகன்?

`அகாடமி அவார்ட்ஸ்’தான் இணையத்தின் லேட்டஸ்ட் வைரல் டாபிக். ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன், ஹிப்ஹாப் ஆதியைப் பற்றி பேசிய ஒரு வீடியோ வைரலாக, அவரிடம் பேசினோம்.

``நீங்க பண்ண ரோஸ்ட் வீடியோதான் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு, ஒருத்தரை ரோஸ்ட் பண்றதுக்கு முன்னாடி பிரச்னைகள் வரும்னு யோசிப்பீங்களா?"

ஜெகன் கிருஷ்ணன்

``யாரையுமே இதுவரைக்கும் நான் பர்சனலா அட்டாக் பண்ணதில்லை. ஒருத்தருக்கு வேலை தெரியாது; அவர் வேஸ்ட்னு யாரையும் சொன்னதில்லை. பொதுவெளியில் இருக்கிற படைப்புகளோட அபத்தங்களை வெச்சுதான் நான் எழுதுற காமெடிகள் இருக்கும். அப்படித்தான் இதுவரைக்கும் நான் ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கேன். அதைத்தாண்டி, இப்படி பேசுனா ஏதாவது பிரச்னை வரும்னு யோசிச்சது இல்லை. இதைச் சொன்னால், சிரிப்பாங்களானு யோசிப்பேன். அதுதான் ஸ்டாண்டப் காமெடியன்களோட முதல் நோக்கம்.’’

``நீங்க அதிகமா இசையமைப்பாளர்களை வெச்சுத்தான் வீடியோ பண்ணியிருக்கீங்க; அதுக்கு என்ன காரணம்?"

``இந்த ஷோவோட கான்செப்ட் அதுதான். இந்த ஷோவைத்தாண்டி மற்ற ஷோக்களில் நான் வேற, வேற ஸ்கிரிப்ட்டை வெச்சுத்தான் காமெடி பண்ணியிருக்கேன். நான் இசையமைப்பாளர்களை வெச்சு பண்ண வீடியோக்கள் டிரெண்டானதால இப்படி ஒரு கருத்தும் சுத்திக்கிட்டு இருக்கு. நான் இதுவரைக்கும் எந்தெந்த மியூசிக் டைரக்டர்களைப் பற்றி பேசியிருக்கேனோ, அவங்க எல்லாரும் எனக்கு ரொம்பப் பிடிச்ச இசையமைப்பாளர்கள்தாம். அவங்களை ரொம்ப பிடிச்சதுனாலதான், அவங்களோட பாடல்களை அதிகமா கேட்குறேன். அப்படி கேட்குறதுனாலதான் என் ஷோவுக்கான ஸ்கிரிப்டே உருவாகுது. ஒரு இசையமைப்பாளரோட ஒரு பாட்டை மட்டும் கேட்டுட்டு அதை வெச்சு காமெடி பண்ணவும் கூடாது; அது காமெடியும் கிடையாது. நான் பல ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்களையும், டி.இமான் பாடல்களையும் கேட்டதுனாலதான், என்னால அவங்களை வெச்சு பேசுன ஸ்கிரிப்டை பண்ண முடிஞ்சது. இது பல காலமா நடக்கிற விஷயம்தான்.

நட்சத்திர கலை விழானு நடிகர்கள் எல்லாரும் ஷோ பண்ணும்போது, நடிகர்களே மற்ற நடிகர்களைக் கலாய்ச்சு காமெடி பண்ணிட்டு இருப்பாங்க. அதெல்லாம் அந்த நடிகர்களை மற்ற நடிகர்களுக்குப் பிடிக்கிறதனாலதான் நடந்தது. அப்படித்தான் இதுவும். இதைத்தாண்டி அவங்க மேல வன்மம், காழ்ப்புணர்ச்சி எல்லாம் இல்லை.’’

``ஹிப்ஹாப் ஆதி வீடியோவுக்கு வந்த விமர்சனங்களை எப்படி பார்க்கிறீங்க?"

``2 மணி நேர ஷோவை முழுசா பார்க்காமல், யாரோ அதிலிருந்து கட்பண்ணி போட்ட வீடியோவை மட்டும் பார்த்துட்டு பேசுறது எந்தவிதத்தில் சரினு தெரியலை. அதுமட்டுமல்லாமல், ஒரு காமெடி ஷோவில் பேசிய விஷயத்தை தனி மனித தாக்குதல்னு நினைக்கிறதும் தவறான விஷயம். பெருசாக்கிறதுக்கு இதில் ஒண்ணுமே கிடையாது. ஹிப்ஹாப் ஆதிக்கும் எனக்கும் பர்சனலா எந்தப் பழக்கமும் கிடையாது. அவர் பண்ண பாடல்கள் என்னோட ஃபேவரைட் லிஸ்ட்டிலும் இருக்கு. `ஆம்பள’ படத்துல `வா வா வா வெண்ணிலா’ பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். `கோமாளி’ படத்தோட `பைசா நோட்டு’ பாட்டுக்கு நான் கவர் வெர்ஷன் பண்ணியிருக்கேன். இந்த வீடியோ வந்ததுக்கு அப்புறம் ஹிப்ஹாப் ஆதி ஒரு ட்வீட் போட்டிருக்கார். அந்த ட்வீட் எனக்குத்தான்னு நான் எடுக்க மாட்டேன். அந்த ட்வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைனுதான் நினைக்கிறேன். ஏன்னா, அவர் அதுல யாரையும், எதையும் மென்ஷன் பண்ணலை. அவர் யாரை மனசில் வெச்சுக்கிட்டு இந்த ட்வீட்டைப் போட்டார்னு அவர்கிட்டதான் கேட்கணும்.’’

HIP HOP AADHI

``உச்ச நட்சத்திரங்களைக் கலாய்த்தால் பெரிய பிரச்னை வரும் என்பதால்தான் வளர்ந்து வரும் நடிகர்களைக் கலாய்க்கிறீங்கனு ஒரு பேச்சு இருக்கே?"

``அப்படி எதையுமே நாங்க பார்க்கிறதில்லை. எதுல காமெடி இருக்கு; எதுல அபத்தங்கள் அதிகமா இருக்குனு பார்த்துதான் நாங்க கன்டென்ட்டை செலக்ட் பண்றோம். மத்தபடி, எங்களுக்கு நாங்களே எந்தத் தடையும் வெச்சிக்கிறதில்லை. நாங்க எந்த செலிபிரிட்டியை வெச்சு வீடியோ பண்றோமோ, அவங்களோட ரசிகர்கள் எல்லாரும் கமென்ட்ஸ்ல, `அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தத் துறைக்கு வந்திருக்கார் தெரியுமா; அவரோட எவ்வளவு உழைப்பை இதுக்காகப் பண்ணியிருப்பார்னு தெரியுமா’னு கேட்கிறாங்க. நிச்சயமா அவங்க உழைச்சிருங்காங்க; அதை நாங்க மறுக்கலை. சினிமாவில் இருக்கிற எல்லாமே அந்த இடத்துக்கு கஷ்டப்பட்டுத்தான் வந்திருப்பாங்க. அந்த உழைப்பை நாங்க உதாசினப்படுத்தவேயில்லை. அதே மாதிரிதான், நாங்களும் இந்த ஸ்கிரிப்ட்டுக்காக உழைச்சிருக்கோம். 5 நிமிஷ வீடியோ ஸ்கிரிப்ட்டுக்காக மாதக்கணக்குல உழைச்சிருக்கோம். இவ்வளவு உழைப்பு போட்டிருக்கோம்னு ஆடியன்ஸுக்கு தெரியப்படுத்தவும் நாங்க விரும்பலை. அதுனாலதான் ஆடியன்ஸ் சீக்கிரம் கோபமாகிடுறாங்க. ஒரு வேளை அவங்க இந்த மாதிரியான ஷோக்களைப் பார்க்க பார்க்க மாறிடலாம்; இல்லைன்னா, இவனுங்க இப்படித்தான்னு கடந்தும் போயிடலாம். ஆனால், அவங்க இந்த ஷோவோட கான்செப்ட்டை புரிஞ்சுக்கணும்னுதான் ஆசைப்படுறோம். அதுக்கான முயற்சியும் எடுத்திட்டிருக்கோம்.

அகாடம்மி அவார்ட்ஸ்

பாலிவுட்ல `AIB’ வோட ஷோக்களில் செலிபிரிட்டிகளை முன்னாடி உட்கார வெச்சுக்கிட்டே அவங்களைக் கலாய்ப்பாங்க. அதுக்கு அவங்களும் நல்லா ரசிச்சு சிரிப்பாங்க. ஆனால், அதைப் பார்க்கிற ரசிகர்கள் `AIB’-யை திட்டுவாங்க. ரசிகர்கள் கோபப்படுறதுங்கிறது இயல்பான விஷயம்தான். ஏன்னா, இந்த ரோஸ்ட் கலாசாரம் ஃபாரின்ல இருந்துதான் இங்க வந்திருக்கு. அங்கெல்லாம் கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கும் மேல இதைப் பண்ணிட்டு இருக்காங்க. 50 வருஷமா ரோஸ்ட் ஷோ பண்ணி, ஆடியன்ஸ் மைண்ட்செட்டை மாற்றியிருக்காங்க. நாம திடீர்னு அதை இங்க எடுத்துட்டு வந்து, உடனே அவங்க மாறணும்னு நினைக்கிறது முட்டாள்தனம். அவங்களோட கலாசாரத்தை நம்ம மக்களுக்கு எப்படி கொடுத்தால் அதை எடுத்துப்பாங்கனு பிளான் பண்ணிதான், அதை நடைமுறைப்படுத்தணும்.’’



source https://cinema.vikatan.com/tamil-cinema/standup-comedian-jagan-krishnan-speaks-about-his-viral-video-on-hiphop-tamizha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக