Ad

புதன், 15 ஜூலை, 2020

ராஜஸ்தான்:`அழகும் ஆங்கிலமும் மட்டும் போதாது!’ - சச்சின் பைலட்டை விமர்சித்த அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்கள் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. கடந்த பல நாள்களாகவே அம்மாநிலத்தின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே அதிகாரம் தொடர்பான மோதல்கள் இருந்து வந்தன. தங்களது கட்சிக்கு உள்ளேயே ஏற்பட்ட இந்த மோதல் காங்கிரஸின் தலைமை வரை சென்று அதிகளவில் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், காங்கிரஸ் கட்சியினர் பலரின் இடையேயும் அதிருப்திகள் நிலவி வந்தன. இந்த மோதல் தற்போது உச்சத்தை அடைந்ததுள்ளது. இதையடுத்து, சச்சின் பைலட்டின் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவாளர்களுக்கும் இந்தப் பிரச்னை தொடர்பான சிக்கல்கள் எழுந்தன. இதையடுத்து. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் உட்பட இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அசோக் கெலாட்

முதல்வர் அசோக் கெலாட் பேசும்போது, ``ஆங்கிலப் புலமையுடன் பேசுவது, நல்ல மேற்கோள்களைக் கொடுப்பது மற்றும் அழகாக இருப்பது மட்டும் போதாது. நாட்டைக் குறித்து உங்களது இதயத்தில் என்ன உள்ளது என்பதுதான் முக்கியம். உங்களுடைய சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்பு என அனைத்தும் அவசியமானது. தங்கத்தால் செய்யப்பட்ட கத்தியை சாப்பிடுவதற்கு பயன்படுத்த முடியாது. நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். குதிரை பேரம் நடைபெற்றது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதற்காக ரூபாய் 20 கோடி வழங்கப்பட இருந்தது. ஆனால், குதிரை பேரம் எதுவும் நடக்கவில்லை என அறிக்கைகள் வெளியிட்டனர். பேரத்தில் ஈடுபட்டவர்களே விளக்கங்களை அளிக்கிறார்கள்” என்று சச்சின் பைலட் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

Also Read: ராஜஸ்தான்: `என்னைப் பதவியில் இருந்து நீக்க அசோக் கெலாட் யார்?’ - ஓயாத உள்கட்சி மோதல்

தொடர்ந்து பேசிய அசோக் கெலாட், ``நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். நாங்கள் புதிய தலைமுறையினரை நேசிக்கிறோம். எதிர்காலம் அவர்களுடையதாகத்தான் இருக்கப்போகிறது. ஆனால், தற்போதைய புதிய தலைமுறையினர் மத்திய அமைச்சர்களாகவும் மாநிலத் தலைவர்களாகவும் ஆகிவிட்டனர். நாங்கள் எங்களுடைய காலத்தில் செய்த பணிகளை அவர்கள் செய்திருந்தால் புரிந்துகொண்டிருப்பார்கள்” என்றும் தனது விமர்சனத்தைப் பதிவு செய்தார்.

தற்போது மாநில காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக பா.ஜ.க-வினரை அசோக் கெலாட் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே காங்கிரஸ் சட்டமன்ற உறுபினர்களை விலைக்கு வாங்க பா.ஜ.க முயற்சி செய்து வருவதாகக் கூறினார். அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நிலவும் பிரச்னைகளைப் பயன்படுத்தி மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க தலைமை திட்டமிடுவதாகவும் தனது விமர்சனத்தைப் பதிவு செய்தார். ``நாங்கள் 10 நாள்கள் சட்டமன்ற உறுப்பினர்களை ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் அதைச் செய்திருக்காவிட்டால், இப்போது மானேசரில் நடக்கும் விஷயம் அப்போதே நடந்திருக்கும்” என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

சச்சின் பைலட்

சச்சின் பைலட்டை பதவிகளில் இருந்து நீக்கியதும் ராஜஸ்தான் அரசியல் களம் இன்னும் தீவிரமானது. சச்சின் பைலட் அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்பார்ப்புகள் கிளம்பியது. பா.ஜ.க-வினர் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக ட்வீட்களையும் பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில், அவர் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பா.ஜ.க-வில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் அதை மறுத்தார். எனினும், தொடர்ந்து இதுதொடர்பான தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்கு சச்சின் பைலட் மீண்டும் விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``நான் பா.ஜ.க-வில் இணைய மாட்டேன். டெல்லியில் கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதற்காகவே நான் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகத் தகவல்கள் பரப்புகிறார்கள்” என்று தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் சச்சின் பைலட் உள்ளிட்ட அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில், கடந்த திங்கள்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

Also Read: ராஜஸ்தான்: சச்சின் பைலட் பதவிப் பறிப்பு; ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமா? - என்ன நடந்தது?



source https://www.vikatan.com/government-and-politics/politics/handsome-and-good-english-is-not-enough-ashok-gehlot-criticized-sachin-pilot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக