அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அமெரிக்கர்கள், வழக்கமாகச் சுதந்திர தின விழாவை வாணவேடிக்கைகளோடும், அமெரிக்கப் படைகளின் அணிவகுப்போடும் கோலாகலமாகக் கொண்டாடுவர். மக்கள் நாட்டின் அனைத்து வீதிகளிலும் நிறைந்திருப்பர். ஆனால், இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக, எந்தப் பெரிய நிகழ்வும் நடக்கவில்லை. 5 நிமிடங்கள் மட்டும் வாணவேடிக்கை, கடற்கரையில் சிறியளவிலான படைகளின் அணிவகுப்பு என எளிய முறையில் நடந்து முடிந்துள்ளது அமெரிக்காவின் சுதந்திர தின விழா.
சுதந்திரதினத்தையொட்டி தேசிய நினைவிடம் அமைந்துள்ள மவுன்ட் ரஷ்மோரில் அதிபர் ட்ரம்ப் நாட்டு மக்களிடம் பேசினார். அப்போது, அமெரிக்காவின் தலைவர்கள், கொரோனா வைரஸ், இனவெறிக்கு எதிரான போராட்டம் ஆகிய அனைத்தைப் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். ``சீனாவிலிருந்து வந்த வைரஸால் பாதிக்கப்படும் வரை அமெரிக்கா மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. தற்போது வைரஸ் தொடர்பான நடவடிக்கையிலும் நாம் நம்பமுடியாத அளவுக்குச் சிறப்பாகவே செயல்படுகிறோம். தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்துத் தொடர்ந்து சோதனை செய்து வருகிறோம். உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம் இங்கு எடுக்கப்படும் சோதனைகள்தான். நம் நாட்டில் கொரோனாவுக்கான மிகச் சிறந்த சோதனை வசதிகள் உள்ளன.
கொரோனாவுக்கு எதிரான உயிர்காக்கும் சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து ஆகியவற்றை நாம் விரைவில் வெளியிடுவோம். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் எங்களுக்கு உதவிய உலகெங்கிலும் உள்ள அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். கொரோனா விஷயத்தில் நம் நாட்டின் விஞ்ஞான புத்திசாலித்தனத்தை மேம்படுத்தி வருகிறோம் இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கான மருந்து கிடைத்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்கப் போராட்டம் தொடர்பாகப் பேசிய ட்ரம்ப், ``நாம் இப்போது, தீவிர இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள், அராஜக வாதிகள், கிளர்ச்சியாளர்கள், பல சந்தர்ப்பங்களில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் தவறு செய்பவர்கள் ஆகியோரை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அமெரிக்காவில் இருக்கும் கோபமடைந்த ஒரு கும்பல் நம் சட்டங்களைக் கிழிக்கவோ, வரலாற்றை அழிக்கவோ, நம் குழந்தைகளுக்கு அறிவுரை கூறவோ, நமது சுதந்திரங்களை மிதிக்கவோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நம் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும்.
Also Read: கொரோனா விளைவு: வித்தியாசமான முறையில் அமெரிக்காவின் 244-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்!
சமீபகாலமாக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. நாட்டின் அரசியல் அடித்தளத்தையே ஆட்டிப்பார்ப்பதாகப் போராட்டங்கள் உள்ளன. இனவெறிக்கு எதிரான போராட்டம், இடதுசாரி கலாசார புரட்சி என்ற பெயரில் சிலர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு அமெரிக்காவின் வரலாற்றையே அழிக்கப்பார்க்கின்றனர். போராட்டத்தின்போது தலைவர்களின் சிலைகள், நினைவுச் சின்னங்கள் உடைக்கப்படுகின்றன. தற்போதைய போராட்டக்காரர்களைவிட மிகவும் துணிச்சல் மற்றும் கொள்கை அதிகம் கொண்ட மக்களை அவர்கள் அவதூறு செய்கிறார்கள். நம் நாட்டை கட்டியெழுப்பியவர்கள் அனைவரும் ஹீரோக்கள், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகத் தலைவர்களின் சிலைகளுடன் கூடிய திறந்தவெளி பூங்கா விரைவில் திறக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/we-will-never-allow-an-angry-mob-to-erase-our-history-trump-has-said
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக