உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,12,326 ஆக உள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா நாடுகளில் இருந்தே அதிகளவில் பாதிப்பு பதிவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மற்ற நாள்களை ஒப்பிடுகையில் தற்போதைய எண்ணிக்கை உச்சமாகும். இதற்கு முன்பு கடந்த மாதம் ஜூன் 28-ம் தேதி ஒருநாள் அதிகபட்சமாக 1,89,077 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதேபோல இறப்பு எண்ணிக்கையும் ஒருநாளைக்கு ஏறக்குறைய 5,000 என்ற அளவில் பதிவாகியுள்ளது. உலகளவில் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 மில்லியனைக் கடந்துள்ளது என்றும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை அரை மில்லியனைக் கடந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகளவில் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், இதுவரை பாதிப்படைந்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ஹெச்.ஐ.வி மருந்துகளான லோபினாவிர் அல்லது ரிசோனாவிர் ஆகிய மருந்துகள் சோதனையின் அடிப்படையில் அளிக்கப்பட்டு வந்தன. இந்த மருந்துகள் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்காததால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் ஹெச்.ஐ.வி மருந்துகளின் சோதனைகளை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அளிக்கப்படும் மற்ற மருந்துகளின் சோதனையைத் தொடர்வதாகவும் கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு இந்த மருந்துகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Also Read: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளுக்குக் கடும் தட்டுப்பாடு? - சிக்கித் தவிக்கும் புற்றுநோயாளிகள்
``மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளைக் கவனிக்கும் தரத்துடன் ஒப்பிடும்போது மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், ஹெச்.ஐ.வி மருந்துகளான லோபினாவிர் அல்லது ரிசோனாவிர் ஆகிய மருந்துகள் இடைக்கால சோதனைகளின் அடிப்படையில் இறப்பு விகிதத்தை குறக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. எனவே, நோயாளிகளிடம் மேற்கொள்ளப்படும் சோதனைகள் நிறுத்தப்படுகின்றன. இதுதொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்துவார்கள்” என்று உலக சுகாதார நிறுவனம் கூறியதாக ஆங்கில ஊடகமான அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நோயாளிகளுக்கு அளிப்பதால் நல்ல பலன் கிடைப்பதாகச் சில நாடுகள் கூறியதை அடுத்து பல நாடுகளிலும் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்தது. அமெரிக்காவும் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி மருந்துகளைப் பெற்றுக்கொண்டது. இதையடுத்து, இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் இறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போது உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்து தொடர்பான சோதனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. பின்னர், மீண்டும் சோதனைகளை நடத்த தொடங்கியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு சோதனையை முற்றிலும் நிறுத்துவதாகத் தற்போது அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த மருந்து எந்தவித பலனையும் அளிக்கவில்லை என்ற செய்திகள் சுகாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரையும் கவலைக்கு ஆளாக்கியுள்ளது. எனினும், பல நாடுகளின் மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வைரஸ் பரவி வருவதால் நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Also Read: கொரோனாவின் தீவிரத்தை குறைக்க உலக நாடுகள் கையிலெடுத்த குளோரோகுயின்! - சிக்கல் என்ன? #MyVikatan
source https://www.vikatan.com/health/international/who-stops-hydroxychloroquine-related-research-report
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக