Ad

வியாழன், 23 ஜூலை, 2020

சென்னை: `என் நண்பனை ஒப்படைத்தால் செல்போனைத் தருகிறேன்' - திருடனைத் துரத்திப் பிடித்த பெண்

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கீதபிரியா (28). இவர் எம்.இ படித்துவிட்டு காஞ்சிபுரம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 20-ம் தேதி பணிக்குச் செல்ல கீதபிரியா, அசோக்நகர் 11-வது அவென்யூவில் அலுவலக பஸ்க்காகக் காத்திருந்தார். அப்போது பல்சர் பைக்கில் 2 சிறுவர்கள் வந்தனர். கண்இமைக்கும் நேரத்தில் கீதபிரியாவின் கையிலிருந்த செல்போனை பறித்துவிட்டு அவர்கள் வேகமாகச் சென்றனர். அதனால் அதிர்ச்சியடைந்த கீதபிரியா, அடுத்த நிமிடமே அவர்களைப் பிடிக்க திட்டமிட்டார். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவரிடம் விவரத்தை கீதபிரியா கூறியதும் ஆட்டோ மின்னல் வேகத்தில் பைக்கை விரட்டியது. அதிகாலை நேரம், ஊரடங்கு காரணமாக சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

செல்போன்

அதனால், ஒரு கி.மீ தூரத்திலேயே பைக்கை முந்திச் சென்று வழிமறித்து நிறுத்தினார் ஆட்டோ டிரைவர். அதனால் பைக்கிலிருந்து 2 சிறுவர்களும் கீழே விழுந்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் பைக்கில் தப்பிக்க முயன்றனர். அப்போது ஆட்டோவிலிருந்து இறங்கிய கீதபிரியா, பைக்கை ஓட்டிய சிறுவனின் சட்டையைப் பிடித்துக்கொண்டார். அதைப் பார்த்த இன்னொரு சிறுவன் செல்போனோடு ஓட்டம் பிடித்தார். கீதபிரியாவுக்கு உதவியாக ஆட்டோ டிரைவரும் அந்தச் சிறுவனின் கைகளைப் பிடித்து தப்பி ஓடவிடாமல் தடுத்தார். இதையடுத்து, கீதபிரியா என்னுடைய செல்போன் எங்கே என்று அந்தச் சிறுவனிடம் கேட்டார். அதற்கு உங்கள் செல்போன் என்னுடன் வந்தவனிடம் இருக்கிறது என்று கூறினார்.

இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையின் எண் 100-க்கு கீதபிரியா போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாகக் குமரன்நகர் போலீஸார் அங்கு வந்து சிறுவனைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். செல்போன் பறிப்பு தொடர்பாக கீதபிரியா, குமரன் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். துணிச்சலுடன் செயல்பட்ட பெண் இன்ஜினீயர் கீதபிரியா குறித்த தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர், வீரமங்கை கீதபிரியாவை நேரில் அழைத்து பாராட்டியதோடு பரிசும் கொடுத்தார்

மகேஷ்குமார் அகர்வால்

இந்தநிலையில் கீதபிரியா பிடித்துக் கொடுத்த செல்போன் திருடனுக்கு 17 வயது என்பதால் அவனைச் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் போலீஸார் சேர்த்தனர். சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த அவனிடமிருந்து 2 செல்போன்கள், திருட்டு பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அந்தச் சிறுவனின் கூட்டாளியான 16 வயதுச் சிறுவனையும் போலீஸார் பிடித்தனர். அவனிடமிருந்து கீதபிரியாவின் செல்போனை போலீஸார் மீட்டனர்.

தைரிய பெண் இன்ஜினீயர் கீதபிரியாவிடம் பேசினோம். ``அதிகாலை 5.30 மணியளவில் வேலைக்குச் செல்ல ஆபீஸ் பஸ்க்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். என்னுடைய இடது கையில் செல்போனை வைத்திருந்தேன். அப்போது அங்கு யாரும் இல்லை. இந்தச் சமயத்தில் பைக்கில் வந்த 2 பேர் செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். உடனே அவர்களைப் பிடிக்க என்ன செய்வதென்று யோசித்தேன். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் அங்கிளிடம் விவரத்தைக் கூறினேன். அவரும் பைக்கை விரட்டிக்கொண்டு வேகமாகச் சென்றார்.

செல்போன்

செல்போனைப் பறித்த இடத்திலிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள கே.கே.நகர் மருத்துவமனை அருகே ஒருவனை மட்டும் பிடிக்க முடிந்தது. இன்னொருவன் தப்பி ஓடிவிட்டான். அப்போது பிடிபட்டவன், தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினான். உடனே நான், போலீஸாரிடம் அவனை ஒப்படைத்தேன். எனக்கு தக்க நேரத்தில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் அங்கிள் மட்டும் உதவவில்லை என்றால் செல்போனைத் திருடியவனைப் பிடித்திருக்க முடியாது. நான் பிடித்தபோது அவனிடம் இரண்டு செல்போன்கள் இருந்தன. பைக்கில் சாவி இல்லை" என்றார்.

செல்போன் பறித்தவுடன் நீங்கள் அதிர்ச்சியடையவில்லையா என்று கீதபிரியாவிடம் கேட்டதற்கு, `செல்போன் என் கையிலிருந்து போனவுடன் அவர்களைப் பிடிக்க வேண்டும் என்ற யோசனை மட்டுமே இருந்ததது. அதனால்தான் செல்போனைத் திருடியவனைப் பிடிக்க முடிந்தது.'

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உங்களிடம் என்ன கூறினார் என்று கேட்டதற்கு, `வழக்கமாக செல்போனை பறித்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ச்சிதான் அடைவார்கள். ஆனால், நீங்கள் சமயோசிதமாகவும் தைரியமாகவும் விரட்டிச் சென்று அவர்களைப் பிடித்துள்ளனர். உங்களைப் போல அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்று கூறியதோடு பரிசு தொகையும் புத்தகம் ஒன்றையும் வழங்கி பாராட்டினார்.'

Also Read: சென்னையில் அதிகரித்து வரும் செல்போன் திருட்டு!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்!

செல்போனை வாங்கிவிட்டீர்களா? என்று கீதபிரியாவிடம் கேட்டதற்கு `இன்னும் வாங்கவில்லை. நீதிமன்றம் மூலம் செல்போனை வாங்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர். கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் 15,000 ரூபாய்க்கு செல்போனை வாங்கினேன். நல்லவேளை அந்தப் போன் மீண்டும் எனக்கு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது' என்றவர் இன்னொரு அதிர்ச்சி தகவல் ஒன்றைக் கூறினார்.

செல்போனைப் பறித்தவர்களில் ஒருவனை போலீஸாரிடம் ஒப்படைத்தும் கீதபிரியாவின் செல்போன் கிடைக்கவில்லை. அதனால், தன்னுடைய செல்போன் நம்பருக்கு கீதபிரியா அன்றைய தினம் போன் செய்துள்ளார். அப்போது செல்போனில் பேசிய சிறுவன், `என் நண்பனை நான் சொல்லும் இடத்துக்கு அழைத்துவந்தால் உங்களின் செல்போனைத் தருகிறேன்' என்று டீல் பேசியுள்ளார். அதற்கு கீதபிரியா சம்மதிக்கவில்லை. அந்தத் தகவலையும் போலீஸாரிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அந்தச் சிறுவனையும் போலீஸார் பிடித்து கீதபிரியாவின் செல்போனை மீட்டுள்ளனர்.

தைரிய பெண் இன்ஜினீயர் கீதபிரியாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-lady-engineer-captured-cellphone-snatcher

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக