Ad

வியாழன், 23 ஜூலை, 2020

`ராணுவ வீரர் மனைவிக்குத் துணை ஆட்சியர் பதவி’ - பணி ஆணை வழங்கிய தெலங்கானா முதல்வர்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த மாதம் நடந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் சந்தோஷ் பாபுவின் மனைவி சந்தோஷிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்டமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், சந்தோஷிக்கு பணி ஆணையை வழங்கினார்.

தெலங்கானா

எல்லையில் உயிர்நீத்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனத் தெலங்கானா முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது சந்தோஷிக்கு ஹைதராபாத்தின் துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பிரகதிபவனில் நடந்த நிகழ்ச்சியில் சந்தோஷி குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்த முதல்வர், தான் எப்போதும் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்துள்ளார்.

Also Read: India-China Face-Off: `கல்வான் இழப்பை ஏற்க மறுக்கும் சீனா!’ - அமெரிக்க உளவுத்துறை தகவல்

பின்னர் முதல்வரே, ஹைதராபாத்தில் உள்ள அதிகாரிகளை சந்தோஷிக்கு அறிமுகம் செய்து வைத்து புதிய துணை ஆட்சியருக்கு பணிகள் அனைத்தும் தெரியும் வரை ஆட்சியர் அலுவலகத்தில் இருப்பவர்கள் அவருக்கு உதவ வேண்டும் என முதல்வரே கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சந்தோஷி குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்தியுள்ளார். சந்தோஷி முதலில் வணிக வரி அதிகாரி பதவியைப் பெறத்தான் விண்ணப்பித்துள்ளார். பின்னர், அவர் படிப்புக்குத் துணை ஆட்சியர் பதவி பொருத்தமாக இருக்கும் என நினைத்ததால் அந்தப் பதவியைக் கேட்டுள்ளார். அதற்கு மாநில அரசும் சம்மதம் தெரிவித்ததால் அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தெலங்கானா

இது மட்டுமல்லாமல் மறைந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு 711 சதுர அடியில் மனை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. மனை பத்திரங்களை ஹைதராபாத் ஆட்சியர் ஸ்வேதா, சந்தோஷிக்கு வழங்கியுள்ளார். தெலங்கானா முதல்வரின் இந்தச் செயல் இணையத்தில் வைரலாகி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. மேலும் சந்தோஷிக்கும் சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Also Read: India-China Face-Off:`மே மாதம் முதலே பதற்றம்... காரணம் சீனா!' -இந்திய வெளியுறவுத்துறை



source https://www.vikatan.com/news/india/martyred-col-santosh-babus-wife-appointed-as-deputy-collector-in-telangana

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக