Ad

சனி, 4 ஜூலை, 2020

திருவள்ளூர் அதிர்ச்சி: கொல்லப்பட்ட அ.தி.மு.க பிரமுகர்! - ஸ்கெட்ச் போட்ட கும்பல் யார்?

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (35). வாயலூர் ஊராட்சி மன்ற அதிமுக கிளைச் செயலாளராக இருந்துவந்தார். இவர் அனல்மின் நிலைய பணிகளை ஒப்பந்தம் அடிப்படையில் செய்து வந்தார். ஊரணம்பேடு பகுதியில் நடந்த ஒப்பந்தப் பணிகளை பார்வையிட நேற்று காரில் சென்றார். அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் சிலம்பரசனை சுற்றி வளைத்தது. பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது.

சடலமாக சிலம்பரசன்

அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து ஓட சிலம்பரசன் முயன்றார். ஆனால், அதை தடுத்த அந்தக் கும்பல் அவரை விடாமல் வெட்டியது. அவரின் சத்தம் கேட்டு கம்பெனியிலிருந்த காவலாளி ஓடி வந்தார். மேலும், அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களும் அங்கு வந்தனர். அதைப்பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிலம்பரசனை மீட்டு மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Also Read: சாத்தான்குளம்: அதிர்ச்சி ஆடியோ; சிக்கிய சிசிடிவி காட்சி! - கைதாகும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்?

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிலம்பரசன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிலம்பரசனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிலம்பரசனின் ஆதரவாளர்கள்

கொலை நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார், விசாரித்தனர். மேலும் சிலம்பரசனை மருத்துவமனைக்கு அழைத்து வந்தவர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் சிலம்பரசன் செல்வதைப் பின்தொடர்ந்து வந்த கும்பல் அவரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சிலம்பரசனுக்கு பவித்ரா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சிலம்பரசன் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த அ.தி.மு.க-வினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன் குவிந்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரிடம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கொலை சம்பவத்துக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

ஆம்புலன்ஸ் முன் சிலம்பரசனின் ஆதரவாளர்கள்

Also Read: மணலி அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் திருப்பம்! - அரசியல் கட்சியின் மா. செ. தலைமறைவு

சிலம்பரசனின் செல்போனுக்கு வந்த போன் அழைப்புகள், கொலை நடந்த இடத்திலிருந்த செல்போன் சிக்னல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.



source https://www.vikatan.com/news/crime/thiruvallur-admk-cadre-murdered

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக