உலகம் முழுவதும் இது யானைகளுக்கு சோதனை காலம். தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில், கடந்த இரண்டு மாதங்களில் 350 யானைகள் உயிரிழந்துள்ளன. கேரளாவில், கருவுடன் இருந்த கர்ப்பிணி யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி பகுதியில் ஒரு பெண் யானை சுட்டுக் கொல்லப்பட்டது.
Also Read: இரண்டே நாள்களில் மூன்றாவது யானை பலி..! - என்ன நடக்கிறது கோவையில்?
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கோவை மாவட்டத்தில் 13 யானைகள் உயிரிழந்துள்ளன. சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி ஆகிய பகுதிகளிலும் கடந்த வாரம் யானைகள் இறப்பு பதிவாகியுள்ளன.
முக்கியமாக, கோவையில் யானைகள் அடுத்தடுத்து பலியான விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சிறுமுகை வனச்சரகத்தில் மட்டுமே மூன்று மாதங்களில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. “இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, யானைகளைப் பாதுகாக்க வேண்டும்” என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே, “10 நாள்களில் 12 யானைகள் உயிரிழந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. வனத்துறை அமைச்சர் மௌனமாக இருப்பது ஏன்?” என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியிருந்தார்.
யானைகள் இறப்பு தொடர்பாக வனத்துறை அளித்துள்ள விளக்கத்தில், “கோவை வனக்கோட்டங்களில் கடந்த ஆறு மாதங்களில் 14 யானைகள் இறந்துள்ளன. அதில், 13 யானைகள் நோய்த் தாக்குதல் மற்றும் பிற யானைகளுடன் ஏற்பட்ட மோதல் போன்ற காரணங்களால் இறந்துள்ளன. உயிரிழந்த யானைகள் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, உடற்கூறாய்வு செய்யப்பட்டு, இறந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் பகுதியில் பெண் யானையைச் சுட்டுக்கொன்ற கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Also Read: இரண்டே நாள்களில் மூன்றாவது யானை பலி..! - என்ன நடக்கிறது கோவையில்?
வனவிலங்குகளின் பிறப்பு, இறப்பு இயற்கையாக நடைபெறும். யானைகளின் இறப்பைக் குறைத்து, அதன் வாழ்விடத்தை மேம்படுத்த, யானை ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். யானைகள் இறப்பு தொடர்பாக, சமூக வலைதளங்களில் வந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது” என்று கூறப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/environment/forest-department-explains-over-coimbatore-elephants-death
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக