Ad

சனி, 18 ஜூலை, 2020

கோவை: நேற்று பெரியார் சிலை; இன்று இந்துக் கோயில்கள்! - அடுத்தடுத்த அதிர்ச்சி

கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட ஓர் பெரியார் சிலை உள்ளது. நேற்று முன்தினம் அந்தச் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த, திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கோவையில் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெரியார் சிலை

Also Read: கோவை: பெரியார் சிலைக்கு காவிச் சாயம்! - தொடரும் போராட்டம்; வலுக்கும் கண்டனம்

இதையடுத்து, சிலையை சுத்தம் செய்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாகத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

``இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் போலீஸில் சரணடைந்தார்.

கோயிலில் வைக்கப்பட்ட தீ
கோயிலில் தீ

``கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில், இந்துக் கடவுள் முருகன் குறித்து இழிவாகப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டேன்” என்று அருண் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்நிலையில், கோவையில் மூன்று இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

Also Read: நள்ளிரவில் பெரியார் சிலை சேதம்! - காஞ்சிபுரம் கிராமத்தில் குவிக்கப்பட்ட போலீஸார்

கோவை ரயில்நிலையம் முன்புள்ள விநாயகர் கோயில் மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் முன்பு மர்ம நபர்கள் டயரில் தீயைக் கொளுத்தி வீசிச் சென்றுள்ளனர். மேலும், மாகாளியம்மன் கோயிலில் வேல் சேதப்படுத்தப்பட்டு, சாமி சிலையின் புடவை எரிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதேபோல, நல்லாபாளையத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் முன்பு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து, உடைமைகளும் சேதப்படுத்தியுள்ளனர்.

கோயில்
சிசிடிவி காட்சி

கோயில் முன்பு மர்மநபர் ஒருவர் டயரை தீயில் பற்ற வைத்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவங்கள் பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்புனரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக பி.ஜே.பி மூத்தத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/3-hindu-temples-damaged-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக