Ad

சனி, 18 ஜூலை, 2020

ஓவர் `ஐஸ்' துரைமுருகன், பி.கே டீமின் `கூட்டணி' அட்வைஸ், முதல்வர் அலுவலக பீதி..! கழுகார் அப்டேட்ஸ்

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு... தி.மு.க-வில் சத்தத்தைக் காணோம்!

சமீபத்தில் திருப்போரூர் அருகே செங்காடு பகுதியில் திருப்போரூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வான இதயவர்மன் தரப்பினருக்கும் அ.ம.மு.க பின்னணிகொண்ட ரியல் எஸ்டேட் பிரமுகரான `இமயம்’ குமார் தரப்பினருக்கு பெரும் மோதல் நிகழ்ந்தது. தி.மு.க எம்.எல்.ஏ துப்பாக்கியால் சுட்டார் என்றும் புகார் கிளம்பியது. இருதரப்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், ``எது எது குறித்தோ அறிக்கைவிடும் தி.மு.க கட்சித்தலைமை இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன்? துப்பாக்கிச்சூடு நடத்திய எம்.எல்.ஏ-வை கண்டிக்காதது ஏன்? ஏற்கெனவே மதுரையில் மூர்த்தி எம்.எல்.ஏ பா.ஜ.க சார்புடைய சிலரை கடுமையாக மிரட்டியது வீடியோவாக வெளியானது; அதுபற்றியும் கட்சித்தலைமை வாய் திறக்காதது ஏன்?” என்று தி.மு.க கட்சியிலேயே நடுநிலையாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். லேட்டஸ்ட்டாக அ.தி.மு.க தரப்பில், ``தி.மு.க-வில் அதிமுக்கியப் புள்ளிகள் சிலரும் அங்கு ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கியிருக்கிறார்கள்; கட்சித் தலைமையின் மெளனத்துக்கு இதுதான் காரணம்” என்று கொளுத்திப்போட்டிருக்கிறார்கள்.

துப்பாக்கியில் சைலன்ஸர் வைக்கிற மாதிரி கட்சித் தலைமையிலும் சைலன்ஸர் வெச்சிருப்பாங்களோ!

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி

தி.மு.க-வுக்காக தேர்தல் ஆலோசனை பணிகளிலும் ஈடுபட்டுவரும் பிரசாந்த் கிஷோர் டீம் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு டிப்ஸ்களை தினசரி வழங்கிவருகிறது. இந்தநிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு 45 வயதுக்குகீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அட்வைஸ் செய்யப்பட்டிருக்கிறதாம். இதற்கிடையே கூட்டணி குறித்தும் அந்த டீம் தரப்பில் சிலர் அட்வைஸ் தந்துள்ளார்களாம். `கூட்டணியில் இருக்கும் கதர் கட்சியைக் கழற்றிவிட்டாலும் ஆபத்து இல்லை அல்லது மிகக் குறைவான தொகுதிகளை மட்டுமே கொடுத்தால் போதும்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறார்களாம் அவர்கள். அப்படி சொன்ன தொகுதிகளின் மிகக் குறைந்த எண்ணிக்கையைக் கேட்டு கட்சித் தலைமையே ஜெர்க் ஆகிவிட்டதாம்!

கதருக்கு சரியில்லை வெதர்!

சில நாள்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது; அவருக்கு கொரோனா இல்லை என்றெல்லாம் தகவல்கள் வந்தன. ``கொரோனா தொற்றுள்ளவர்களை சந்திக்க நேர்ந்துவிட்டது; நல்லவேளையாக கொரோனா உங்களுக்கு இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது. இருந்தாலும் ஒரு வாரமாவது ஓய்வில் இருங்கள்” என்று முதல்வருக்கு நெருக்கமான நண்பர்கள் அட்வைஸ் செய்தார்களாம். கூடவே, கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தனக்கு கொரோனா இல்லாவிட்டாலும்கூட முன்னெச்சரிக்கை காரணமாக ஐந்து நாள்கள் தனிமைப்படுத்திக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார்களாம். அதற்கு முதல்வரோ, ``தேர்தல் அரசியல் சூடுபிடுத்துள்ள நேரம் இது. இப்போது நான் முடங்கிவிட்டால், பயந்துகொண்டு ஓடி ஒளிந்துவிட்டதாகப் பேசுவார்கள். மேலும், ஒரு மாநில முதல்வருக்கே பாதுகாப்பு தர இயலாத சுகாதாரத்துறை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும். அதனால்தான் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்” என்று நண்பர்கள் வட்டாரத்தில் எடப்பாடி சொல்லியிருக்கிறாராம்!

அயராது உழைக்கும் அயர்ன் மேன்?!

எடப்பாடி பழனிசாமி

பாதியில் வந்தாரா நோயாளி? பீதியில் முதல்வர் அலுவலகம்!

முதல்வருக்கு கொரோனா இல்லை என்று தெரிந்துவிட்டாலும்கூட கொரோனா பீதியிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறது முதல்வர் அலுவலகம். முதல்வரின் இரண்டாம் நிலை செயலர் பதவியில் இருப்பவர் விஜயகுமார். அவரது பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு லேசாக கொரோனா தொற்று தெரிந்ததாம். பதறிப்போனவர், உடனே அவரை வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள சொல்லிவிட்டாராம் விஜயகுமார். ஏற்கெனவே அந்த நபர் கொரோனா சிகிச்சைக்கு சென்று மீண்டு வந்தவர் என்கிறார்கள். அவருக்கு சரியாக சிகிச்சை தரவில்லையா, இல்லை பாதியிலேயே வந்துவிட்டாரா என்று தீவிரமாக விசாரித்துவருகிறது முதல்வர் அலுவலகம்.

கோட்டையில் கொடிகட்டி பறக்குது கொரோனா!

ஆளும்கட்சி ஐ.பி.எஸ்... டம்மிக்கு மாற்றிய சென்ட்ரல்!

சமீபத்தில் தமிழக காவல்துறையில் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் `டம்மி’ பதவிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆளும்கட்சிக்கு நெருக்கமாக அறியப்பட்ட அந்த அதிகாரியின் இடமாற்றத்துக்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து பேசும் காக்கிகள் வட்டாரம், ``சில முக்கிய கோப்புகள் தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்குச் சென்றுள்ளன. அந்த கோப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் பல தகவல்கள் போலியாக பெரிதுபடுத்தப்பட்டவை; பதவியை தக்கவைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்ததாம். கோப்புகளைத் தயார் செய்து அனுப்பியதும் உச்சத்திலிருந்த ஒரு ஐ.பி.எஸ் அதிகாரிதான். இதன் பின்னணியிலேயே அந்த அதிகாரியை மாற்றியிருக்கிறார்கள்” என்றார்கள்!

போலி கோப்பு... வெச்சிட்டாங்க ஆப்பு!

துரைமுருகன்

சினிமாவுக்கு சிவாஜி; தி.மு.க-வுக்கு துரைமுருகன்!

நையாண்டி, கலகலப்பு, கண்ணீர் என நவரசத்தால் தி.மு.க-வில் கலக்குபவர் துரைமுருகன். ஊரடங்கு காரணமாக ஏலகிரி சொகுசு பங்களாவில் ஓய்வெடுக்கும் துரைமுருகன், இணையவழிக் கூட்டம் மூலம் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்புரை ஆற்றிவருகிறார். சமீபத்தில், நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா மற்றும் சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், கட்சித் தலைவர் ஸ்டாலினை நெக்குருக வைத்துவிட்டாராம்.

``துயரத்துக்கு மேல் துயரம். அண்ணா, கலைஞருக்கும்கூட இவ்வளவு சோதனைகள் வந்ததில்லை. ஆனால், தளபதி மகத்தான சோதனைகளைச் சந்தித்திருக்கிறார். எந்த இயக்கத்துக்கும் எந்த தலைவருக்கும் வராத இடர்பாடுகள் எதிர்கொண்டிருக்கிறார். எப்படித்தான் இவற்றை எல்லாம் அவரால் தாங்கிக்கொள்ள முடிகிறதோ? இதற்கு மேல் ஒரு பெரிய துயரம் கிடையாது. வந்தாலும், அது பெரிய கோடு பக்கத்தில் விழுகிற சின்ன கோடாகத்தான் இருக்கும்” என்றாராம். இதைக் கேட்ட உடன்பிறப்புகள், ``என்ன தலைவர் சம்பந்தமில்லாமல் பேசுகிறார். இப்போது தளபதிக்கு என்ன துயரம் வந்துவிட்டது... நாவலரையும் அன்பு அண்ணனைப் பற்றியும் பேச வேண்டிய இடத்தில் தளபதிக்கு ஓவராக `ஐஸ்' வைக்கிறாரே... சீக்கிரமா அவருக்கு பொதுச் செயலாளர் பதவி கொடுத்துடுங்கப்பா... நடிப்புல சிவாஜி கணேசனை மிஞ்சிட்டாரேப்பா” என்று கமென்ட் அடித்துள்ளார்கள்!

பொத்தாம் பொதுவா பேசுனா பொதுச்செயலாளர் பதவி கிடைச்சிடும்னு நினைச்சிருப்பாரோ!

போலீஸுக்கு `ஒதுங்க' இடமில்லை!

சென்னையில் அயனாவரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் எலெக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பதற்காக போலீஸார் ஷிப்ட் முறையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், அங்கெல்லாம் அவர்களுக்கு கழிப்பறை வசதி எதுவும் இல்லை. அக்கம்பக்கத்தில் ஹோட்டல்கள், கடைகளில் சங்கடத்துடன் கேட்டு கழிப்பறை செல்லும் நிலை உள்ளது. தவிர, நகரம் முழுவதும் இருக்கும் பெண் காவலர்களின் நிலைமை இன்னும் கொடுமை.

இதுபற்றி கூறும் போலீஸார் சிலர், ``சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் இருந்தபோது மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் வைக்கப்பட்டன. துறையிலிருந்து இதற்காக நிதி ஒதுக்கப்பட்டாலும் கணிசமான தொகையை ஆங்காங்கே இருக்கும் தொழில் நிறுவனங்கள் பகிர்ந்துகொண்டன. அதுபோல ஆங்காங்கே இருக்கும் நிறுவனங்களிடம் ஸ்பான்ஸர் பெற்றும் துறையிலிருந்து நிதி ஒதுக்கியும் பிரத்யேகமாக `போலீஸ் டாய்லெட்’ வைக்கலாமே” என்று ஆலோசனை தருகிறார்கள்! இதுபற்றி பேசும் போலீஸ் உயரதிகாரிகளோ, ``நீங்கள் சொல்வது உண்மைதான். சமீப காலமாக சென்னையில் மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் போலீஸாருக்கு என்றே மொபைல் டாய்லெட் வாகனங்களை இயக்கிவருகிறோம். இவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து, திட்டத்தையும் விரிவுப்படுத்துகிறோம்” என்றார்கள்.

ரொம்ப அர்ஜென்ட்... சீக்கிரம் பண்ணுங்கப்பா!

ஒரு கோடி ஹவாலா பணம்! வருமானவரித்துறை தூக்கம்

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் அருகே போலீஸ் சோதனைச்சாவடியில் வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்துள்ளார்கள். ஆந்திர மாநில எம்.எல்.ஏ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்தக் காரில் கணக்கில் வராத சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த அந்த காரின் பதிவு எண் கோவை மாவட்டத்துக்குரியது. பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இதுபற்றி சுறுசுறுப்பாக விசாரித்த வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென்று அமைதியாகிவிட்டார்களாம். போலீஸ் தரப்பில் வருமான வரித்துறையினரிடம் கேட்டால், `கொரோனா காரணமாக ரெய்டு நடத்த முடியவில்லை. கொரோனா முடிந்தப்பிறகு பார்த்துக்கொள்கிறோம்’ என்று கொட்டாவி விடுகிறார்களாம்!

ஆந்திரா மீல்ஸ் அதிகம் சாப்பிட்டிருப்பார்களோ!

தொடரும் இடமாற்றம்... கல்லா கட்டும் சேலம் பிரமுகர்!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இடமாற்றங்கள் சத்தமில்லாமல் தொடர்கிறதாம். முதல்வரின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த ஒரு பிரமுகர்தான் இதை வைத்து பெரியளவில் கல்லா கட்டுகிறாராம். அதிகாரிகளும் அவரை நம்பி பணத்தைக் கொட்டிவருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால்தான், சமீபத்தில் 30-க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது மீண்டும் `பசை’யுள்ள இடங்களிலேயே அவர்கள் பணியமர்த்தப்பட்டனாராம். இதேதான் ஐ.ஏ.எஸ் இடமாற்றங்களிலும் நடக்கிறது. ``கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே முக்கியப் பதவிகளில் மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் நீடிக்கிறார்கள்” என்று கொந்தளிக்கிறார்கள் பிற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

``சொந்தக் கட்சிக்காரனுக்கு பாதுகாப்பு இல்லை!”

கோவையில் உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் ஊழலை சமூக ஆர்வலரான டேனியல் ஜேசுதாஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிகொண்டுவருவது வழக்கம். இவர் தி.மு.க பிரமுகராக இருந்தாலும், சொந்தக் கட்சியில் நடக்கும் தவறுகளையும் வெளிப்படையாக விமர்சிப்பார். இதற்கிடையே, அ.தி.மு.க ஆட்சியில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக, தி.மு.க-வினர் போராட வேண்டும் என்று தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் கருத்து கூறிவந்தார்.

ஆனால், கோவை தி.மு.க-வில் அமைச்சர் வேலுமணி `ஆதரவாளர்கள்’ அதிகம் என்பதால் அவரது கருத்து எடுபடவில்லை. இந்த ஆதங்கத்தையும் டேனியல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துவந்தார். இந்தநிலையில்தான் மதுக்கரை தி.மு.க புள்ளி ஒருவர் கட்சியினரிடம், டேனியலை கடுமையாக திட்டியதுடன் `கையைக் காலை எடுத்துடுவேன்’ என்று எச்சரிக்கை விடுத்தாராம். இதற்கு அ.தி.மு.க தரப்பினரோ, `எங்க கட்சிக்கு எதிராக பேசுபவருக்கு சொந்தக் கட்சியிலேயே பாதுகாப்பு இல்லை’ என்று கொளுத்தி போடத் தொடங்கியுள்ளார்கள். இதுகுறித்து கட்சித் தலைமையிலும் காவல்துறையிலும் புகார் அளிக்கவிருக்கிறாராம் டேனியல்!

ஸ்லீப்பர் செல் ஜாக்கிரதை!

வேலுமணி

காப்பர் டி கட்டாயம்... ஊட்டியில் கொதிக்கும் தாய்மார்கள்!

ஊட்டி அரசு மருத்துவமனையில் பிரசவம் முடித்த தாய்மார்கள் யாரேனும் தங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தால், கொரோனாவை காரணம் காட்டி `48 நாள்கள் கழித்துதான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடியும்’ எனக் கூறுவதுடன், டெலிவரி முடித்த மறுநாளே காப்பர்-டி பொறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனராம்.

``48 நாள்களுக்காக எதற்குப் பொருத்த வேண்டும்?” என யாரேனும் கேள்வி கேட்டால், ``அரசின் மகப்பேறு பணப்பலன் வேண்டும் என்றால் `காப்பர் - டி’ பொருத்தித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் 48 நாளுக்கு டிஸ்சார்ஜ் செய்ய மாட்டோம்” என மிரட்டி சம்மதிக்க வைக்கின்றனராம்.

ரேசன் கடையில் சர்க்கரை வாங்கணும்னா டீத்தூள் வாங்கணும்னு கட்டாயப்படுத்துவாங்க... அப்படி இல்லை இருக்கு இந்தக் கதை!

சிவகங்கை குடிமராமத்து டெண்டர்... கதருடன் கூட்டு சேர்ந்த காவி!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம், பாகனேரி ஊராட்சியில் சுமார் 26 கண்மாய்களில் தமிழக அரசின் குடிமராமரத்து திட்டத்தின்கீழ் மராமத்து பணிகள் செய்யப்படுகின்றன. இந்த டெண்டரை எடுத்திருப்பது ஆளுங்கட்சி புள்ளிகள் இல்லையாம். மாவட்டத்தின் `கதர்’ வேட்டி பிரமுகர் ஒருவரும் `காவி’ வேட்டி பிரமுகர் ஒருவரும் சேர்ந்தே டெண்டர் பணிகளை எடுத்திருக்கிறார்களாம். ``பிசினஸ் என்று வந்துவிட்டால் தேசிய கட்சிகள் கூட்டு போட்டு நமக்கே டஃப் ஃபைட் கொடுக்கிறார்களே” என்று பொங்குகிறார்களாம் ஆளுங்கட்சியினர்!

காசு... பணம்... துட்டு... கதர்... காவி!

மணல்

திருவையாறு மணல் அள்ளும் விவகாரம்... குரல் கொடுக்காத தி.மு.க எம்.எல்.ஏ!

தி.மு.க-வில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும், திருவையாறு தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருப்பவர் துரை.சந்திரசேகர். தொகுதியில் ஆற்று மணல் அள்ளுவது தொடர்பான எந்தப் பிரச்னை வந்தாலும் இவர் அதைக் கண்டுகொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அவர் தொகுதிக்குட்பட்ட கல்லணைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிக்கு நிரந்தத் தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், `துரை.சந்திரசேகர் மணல் குவாரிக்கு எதிராகப் பேசுவதும் இல்லை; போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும் இல்லை; ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் கொடுக்காததன் மர்மம் என்ன?’ என்று கொந்தளிக்கிறார்கள் தொகுதி மக்கள்.

மணலுக்குள் ஒளிந்திருக்கும் மர்மமென்ன?



source https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugu-updates-on-duraimurugan-dmk-alliance-eps-and-other-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக