ரஜினியின் ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்தை உறுதி செய்த முன்னோடித் திரைப்படங்களுள் ஒன்று ‘முரட்டுக்காளை’. இதே வருடத்தில் வெளியான ‘பில்லா’ அதற்கான தடயத்தை ஏற்கெனவே அழுத்தமாக அறிவித்தது என்றால் அதை உறுதியாக வழிமொழிந்த திரைப்படம் ‘முரட்டுக்காளை’.
பாரம்பரியம் மிக்க சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்முடன் ரஜினி இணைந்த முதல் திரைப்படம் இது. ஒரு முறை எஸ்.பி.முத்துராமனும் ரஜினியும் ஏவிஎம் ஸ்டூடியோவிற்குச் சென்ற போது மெய்யப்ப செட்டியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார் ரஜினி.
கமலும் ரஜினியும் இணைந்து நடித்து தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. “ஏவிஎம் நிறுவனத்திற்கு ஏன் அப்படியொரு படத்தை இயக்கித் தரக்கூடாது?” என்று மெய்யப்பச் செட்டியார், இயக்குநர் முத்துராமனை கேட்க அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார். ரஜினிக்கும் ஏவிஎம் நிறுவனத்தில் நடிக்க விருப்பமாகவும் கவுரமாகவும் இருந்தது.
ஆனால் இந்தச் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களுக்குள் மெய்யப்பச் செட்டியார் மறைந்து போனார். ஏமாற்றம் அடைந்த முத்துராமனும் இந்தத் திட்டத்தை அப்போதைக்கு ஒத்தி வைத்தார். சில காலத்திற்குப் பிறகு ஏவிஎம் சரவணன், முத்துராமனைச் சந்தித்து "அப்பச்சியின் வாக்கு நிறைவேறாமல் போகக்கூடாது. படத்தை ஆரம்பியுங்கள்” என்றார்.
ஆனால், இந்தச் சமயத்தில் முட்டுக்கட்டையைப் போட்டவர் கமல்ஹாசன். "ரஜினியும் நானும் இணைந்து நடிப்பதை தவிர்க்க நினைக்கிறோம்” என்றார். கமலின் இந்த முடிவு ஒருவகையில் புத்திசாலித்தனமானது. இருவரும் இணைந்து நடிப்பதை விடவும் தனித்தனியாக நடித்தால் சம்பளம் இருவருக்குமே கூடும். ஏனெனில் அவர்களின் சந்தை மதிப்பு அப்படியாக வளர்ந்து கொண்டிருந்த சமயமது.
ரஜினியின் கால்ஷீட் கைவசம் உடனே இருந்ததாலும் பஞ்சு அருணாச்சலம் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்ததாலும் ஏவிஎம்மின் வழக்கப்படி எளிமையான பூஜையுடன் ‘முரட்டுக்காளை’யின் படப்பிடிப்பு உடனே துவங்கியது.
கிராமத்து இளைஞன் வேடம் என்பதால் தனது வழக்கமான சிகையலங்காரம் இல்லாமல் படம் முழுவதும் தலையில் வித்தியாசமான முறையில் ‘விக்’ வைத்து ரஜினி நடித்த ஒரே திரைப்படம் இது. (அந்தக் காலக்கட்டத்தின் படி).
‘முரட்டுக்காளை’ - அதிரிபுதிரியான சூப்பர் ஹிட்டாக மாறும் என்பதை ரஜினி உட்பட எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஏவிஎம் சிறிது கால இடைவெளிக்குப் பிறகு தயாரித்த இந்தப் படம் பம்பர் ஹிட் ஆனது.
இந்த இடத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனைப் பற்றி சொல்லியாக வேண்டும். கமல், ரஜினி போன்றவர்கள் உச்சநட்சத்திரங்களாக மாறுவதற்கு எஸ்.பி.முத்துராமனின் படங்கள்தான் அடித்தளமாக இருந்தன. இந்த நன்றியை இருவருமே மறக்கவில்லை. சூப்பர் ஸ்டார்களை உருவாக்குபவராக இருந்தாலும் அடிப்படையில் மிக மிக எளிமையான மனிதர் முத்துராமன். துளிகூட ஈகோ இல்லாதவர். முன்னணி நடிகர்கள், துணை நட்சத்திரங்கள் என்று எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் மரியாதையை சரிசமமாக வழங்குபவர். இனிமையான, கண்ணியமான சொற்களை மட்டுமே எப்போதும் பேசுபவர்.
குடும்பம் போல பழகி நட்சத்திரங்களின் மனோபாவத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப வேலை வாங்கி விடுவார். இவரது எளிமை காரணமாகவே இவரை மறுத்துப் பேசவும் எவருக்கும் துணிச்சல் வராது.
வெகுசன திரைப்படங்களை உருவாக்குவதில் மாஸ்டர் என்று எஸ்.பி.முத்துராமனைச் சொல்லலாம். ஏற்கெனவே வெற்றியடைந்த ஒரு படத்தின் அவுட்லைனை மாத்திரம் எடுத்துக் கொண்டு அதை அப்படியே உருமாற்றி சுவாரஸ்யமான புதிய சினிமாவாக ஆக்கி விடுவதில் வல்லவர். ‘பெரிய இடத்துப் பெண்’ திரைப்படத்தின் கதைக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு ‘சகல கலா வல்லவன்’ என்கிற மெகா ஹிட் படமாக்கினார்.
ரஜினியையும் கமலையும் வைத்து இரண்டு படங்களை சரவணன் இயக்கச் சொன்னார் அல்லவா? அதன்படி முரட்டுக்காளையைத் தொடர்ந்து கமலை வைத்து இயக்கிய படம்தான் ‘சகலகலா வல்லவன்’.
ஆனால் எஸ்.பி.முத்துராமனை, வெகுசன இயக்குநராக மட்டுமே சுருக்கி விடவும் முடியாது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’ போன்ற கதையம்சமுள்ள குடும்பச் சித்திரங்களையும் அதன் ஜீவன் கெடாமல் இயக்கிய தகுதியுடையவர்.
கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தின் பங்களிப்பு ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் முக்கியமானது. தமிழ் சினிமாவின் முதல் ‘Script doctor’ என்று இவரைச் சொல்லலாம். ஒரு படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ந்து அதில் பல புதிய அம்சங்களைப் பொருத்தி பட்டி, டிங்கரிங் பார்த்து இன்னொரு புதிய ப்ராடக்ட் ஆக மாற்றி விடுவதில் வல்லவர். எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் அதிக திரைப்படங்களுக்கு திரைக்கதை – வசனம் எழுதியிருக்கிறார். இவர் கதாசிரியர் மட்டுமல்ல, இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பல முகங்களைக் கொண்டவர்.
தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு ஸ்டைலையும், வித்தியாசமான மேனரிசத்தையும் செய்து ரசிகர்களைக் கவர்ந்து விடுவதில் ரஜினி தனித்தன்மையுடையவர். இது போன்ற சில விஷயங்கள் அவர் செய்தால் மட்டுமே எடுபடும். மற்றவர்களால் எளிதில் நகலெடுக்க முடியாத ஸ்டைல் அது. ‘சூப்பர் ஸ்டார்’ என்னும் அந்தஸ்தைப் பெறுவதற்கு ரஜினி கடந்து வந்த பாதை அத்தனை எளிதானதல்ல. மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுவதற்காக தன்னுடைய தனித்தன்மையான உடல்மொழியை ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் மெனக்கெட்டு வேறுபடுத்திக் காட்டினார். அவர் வேகமாக தமிழை உச்சரிப்பது விமர்சனத்திற்கு உள்ளானாலும் அதுவே ஒரு ஸ்டைலாக ஆனது. ரசிகர்கள் அதையும் கொண்டாடினார்கள்.
இந்த வகையில் ‘முரட்டுக்காளையிலும்’ ரஜினியின் பிரத்யேகமான ஸ்டைல் இருந்தது. "சீவிடுவேன்” என்று கையை ‘எஸ்’ போல வளைத்துக் காட்டிய பாணி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘மாரி’ தனுஷின் ‘செஞ்சிடுவேன்’-க்கு முன்னோடி ஸ்டைல் அது.
இந்தத் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஜெய்சங்கர் வந்த கதையே சுவாரஸ்யமானது. நடிப்பு விஷயத்தில் முன்னே பின்னே இருந்தாலும் ஹீரோ என்னும் தோற்றத்தில் மிக வசீகரமானவர் ஜெய்சங்கர். அழகான தலைமுடியும், கச்சிதமான உடல்தோற்றமும் என ஒரு ஹீரோ ‘லுக்’ அவரிடம் அற்புதமாக இருந்தது.
ஜெய்சங்கர் ஹீரோவாக நீண்ட காலம் நடித்து ஓய்ந்து போயிருந்த சமயம் அது. கைவசம் சில படங்கள் மட்டுமே இருந்தன. எதிர்காலம் எப்படியிருக்குமோ என்கிற யோசனையில் இருந்தார். இந்தச் சூழலில் ஜெய்சங்கரை வில்லனாக ‘முரட்டுக்காளையில்’ போட்டால் வித்தியாசமாக இருக்கும் என்று கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம் நினைத்தாலும், "ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறவரை.. எப்படி வில்லன் வேடத்திற்கு அழைப்பது?" என்று தயங்கியிருக்கிறார்.
ஆனால், ஏவிஎம் சரவணன் தந்த உத்வேகத்தில் ஜெய்சங்கரை அழைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ஜெய்சங்கரின் குணாதிசயத்தைப் பற்றி சற்று சொல்ல வேண்டும். எஸ்.பி.முத்துராமனைப் போலவே ஜெய்சங்கரும் துளியும் ஈகோ இல்லாதவர். நண்பர்களுக்காக பல விஷயங்களைச் செய்வார்; விட்டுத்தருவார். அவருக்குச் சம்பளமாக தரப்பட்ட பல காசோலைகள் வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கின்றன. அந்தக் காசோலைகளே அவரிடம் ஒரு பெட்டி நிறைய அப்படியே இருக்குமாம். அவற்றை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்திக் கேட்காத அளவிற்கு பெருந்தன்மையான மனம் கொண்டவர் ஜெய்சங்கர்.
‘தன்னை வில்லனாக நடிக்க கேட்கிறார்களே...' என்கிற தயக்கம் முதலில் ஜெய்சங்கருக்கு இருந்தாலும் பஞ்சு அருணாச்சலம், சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியவர்கள் தனது நலம் விரும்பிகள் என்கிற ஒரே காரணத்திற்காக உடனே ஒப்புக் கொண்டார் ஜெய்சங்கர். ஹீரோ ரஜினிக்கே இது ஆச்சரியமான செய்திதான். பதிலுக்கு தன் பெருந்தன்மையை நிரூபித்தார் ரஜினி. திரைக்கதை முதற்கொண்டு போஸ்டர்கள் வரை ஹீரோவிற்கு நிகரான முக்கியத்துவம் ஜெய்சங்கருக்கு தரப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளை ரஜினி வைக்க, அதன்படியே செய்யப்பட்டது.
வில்லனாக இருந்து ஹீரோவானவர் ரஜினி. இதன் எதிர்முனையில் ஹீரோவாக இருந்து வில்லனாக நடிப்பவரைப் பற்றி ரஜினி சரியாக புரிந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் கூட ஜெய்சங்கர் சிறைக்குச் செல்லாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்யுமளவிற்கு ஜெய்சங்கரின் பாத்திரம் முக்கியத்துவம் உடையதாகவும் மரியாதைக் குறைவின்றியும் சித்திரிக்கப்பட்டது.
வடஇந்தியப் பெண்களை தமிழ் சினிமாவின் ஹீரோயின்களாக நடிக்க வைக்கும் டிரெண்டிங் எண்பதுகளிலேயே துவங்கி விட்டது. பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகளில்’ அறிமுகமான ரதி அக்னிஹோத்ரிதான் ‘முரட்டுக்காளை’யின் ஹீரோயின்.
இவர் கிராமத்துப் பெண் போல் இல்லையே என்கிற லாஜிக்கையெல்லாம் படத்தை உருவாக்கியவர்களோ, ரசிகர்களோ யோசிக்கவில்லை. அவரது அழகும் அபாரமான வளைவுகளும் அவர்களை யோசிக்க விடவில்லை போல. டப்பிங் குரல் பின்னணியில் ஒலித்தாலும் ஒரு சம்பிரதாயமான நடிகையாக நடித்தார் ரதி.
நகைச்சுவை நடிகர்களை கருவேப்பிலை போல காமெடி டிராக்கில் பயன்படுத்திக் கொள்வதே தமிழ் சினிமாவின் பொதுவான வழக்கம். ஆனால் ‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் சுருளிராஜனுக்கு ஒரு பிரத்யேகமான பிளாஷ்பேக்கை இணைத்தது கதாசிரியரின் திறமை என்றே சொல்லலாம். வில்லனின் கூடவே இருந்து அவனைப் பழிதீர்த்துக் கொள்ளும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார் சுருளிராஜன்.
பொதுவாக நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர வேடங்களில் இணையும் போது அதன் தரமும் வலிமையும் உயரும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. தனது வழக்கமான நகைச்சுவைப் பாணியோடு, பண்ணையாரால் தன் குடும்பமே கொல்லப்பட்டதை கண்ணீரோடு நினைவுகூரும் போது பார்வையாளர்களை நெகிழ வைத்து விடுவார் சுருளிராஜன்.
வில்லன் ஜெய்சங்கரின் வலதுகை அடியாளாக, கையில் மாட்டுக் கொம்புடன் மிரட்டும் தோற்றத்தில் நடித்திருந்தவர் கன்னட நடிகர் சாந்தாராம். தமிழில் இவரை பாலசந்தர் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். யதார்த்தமான பாத்திரங்களை திறம்பட கையாள்வதில் வல்லவர் இவர்.
ரஜினியின் தம்பிகள் நால்வர். அதில் ஒய்.ஜி.மகேந்திரனின் காமெடி சற்று சிரிக்க வைத்தது. ராஜப்பாவும் இன்னொரு தம்பியாக நடித்திருந்தார். ஜெய்சங்கரின் தங்கையாகவும் ரஜினியை விரும்புபவராகவும் சுமலதா நடித்திருந்தார். வில்லனின் சதிக்கு உதவி செய்யும் அசட்டுத்தனமான போலீஸ்காரர்களாக தேங்காய் சீனிவாசனும் கே.கண்ணனும் நடித்திருந்தார்கள். மூத்த காவல்துறை அதிகாரியாக எஸ்.ஏ.அசோகன் வந்து போனார்.
‘முரட்டுக்காளை’யின் கதை என்பது பல தமிழ் சினிமாக்களில் வந்த அதே நைந்து போன கதைதான். ஒரு பணக்கார பண்ணையாரின் மகளை ஏழை கதாநாயகன் காதலிப்பான். பண்ணையாரின் சூழ்ச்சிகளை வெற்றிகரமாக முறியடித்து காதலியைக் கைபிடிப்பான்... இதுதான் வழக்கமான கதை.
இதில் பல ஜோடனைகளை இணைத்தார் பஞ்சு அருணாச்சலம். ஹீரோ ஏழை என்றில்லாமல் வில்லனுக்கு நிகரான பணக்காரனாகவும் ஊரில் செல்வாக்கு உடையவனாகவும் இருந்தான். (ஆனால் படத்தில் ரஜினி இருக்கும் வீட்டைப் பார்த்தால் அடுத்த வேளை சோற்றுக்கு லாட்டரி அடிப்பது போலவே இருக்கும். ‘அவர் எளிமையானவர்’ என்பது போல் சொல்லி லாஜிக்கை காப்பாற்றி விட்டார்கள்).
வில்லனின் தங்கைக்கும் ஹீரோவிற்கும் இடையில் காதல் மலரும் வழக்கமான விஷயம் இதிலும் நிகழும். ஆனால் அவள் தன் தம்பிகளைத் தன்னிடமிருந்து பிரித்து விடுவாளோ என்று ஹீரோவிற்கு எழும் சந்தேகம் காரணமாக அந்தக் காதல் முறிந்து போகும். பண்ணையாரிடமிருந்து தப்பி வரும் அபலைப் பெண்ணைக் காப்பாற்றி அவளைத் திருமணம் செய்து கொள்வார் ரஜினி. வழக்கம் போல் வில்லனின் சதிகளுக்கு முதலில் இரையாகி பின்பு அவற்றை வெற்றிகரமாக முறியடிப்பார்.
‘முரட்டுக்காளை’ திரைப்படம் வழக்கமான வெகுசன கதையைக் கொண்டிருந்தாலும் அது வெற்றிகரமான திரைப்படமாக மாறியதற்கு பிரதான காரணமாக இயக்குநர் எஸ்.பி. முத்துராமனைச் சொல்ல வேண்டும்.
அதையும் தாண்டி தொழில்நுட்ப ஏரியாவில் இருந்தவர்களின் அசாதாரண திறமைகளைப் பற்றியும் கட்டாயம் சொல்லியாக வேண்டும்.
இந்த வரிசையில் முதன் முதலில் சொல்லப்பட வேண்டியவர் இளையராஜா. சொல்லி சொல்லி சலித்துப் போனாலும், எண்பதுகளின் பொன்னான காலக்கட்டத்தையும் இளையராஜாவின் அற்புதமான இசையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அதிலும் இது கிராமத்துப் படம் என்பதால் ராஜாவிற்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
படத்தின் துவக்கத்திலேயே தாரையும் தப்பட்டையும் உறுமியும் இணைந்து முழங்க கிராமிய இசை களைகட்டிவிடும். ‘அடடா.. ஒரு நல்ல கமர்சியல் படத்தைப் பார்க்கப் போகிறோம்’ என்று ஆரம்பத்திலேயே ஓர் உற்சாகத்தை பார்வையாளர்களின் மனங்களில் ஏற்படுத்தி விடுவார் ராஜா. அந்த உற்சாகம் படம் முடியும் வரைக்கும் நீடிக்கும்.
வழக்கம் போல் இந்தத் திரைப்படத்தின் ஆல்பமும் மெகா ஹிட் ஆகியது. மஞ்சு விரட்டில் காளையை அடக்கிய பின்பு உற்சாக ஆரவாரத்துடன் ரஜினி பாடி வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாடல் ரஜினிக்கு ஒரு டிரேட் மார்க் அடையாளமாக மாறியது.
இந்த வகையான பாடலுக்கு எப்போதுமே எஸ்.பி.பி + ரஜினிதான் பொருத்தமான கூட்டணி. ஆனால் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மலேசியா வாசுதேவன். உற்சாகம் துளி கூட குறையாமல் பாடி அசத்தியிருப்பார் வாசுதேவன். பாடலின் இடையில் குலவை சத்தத்தையெல்லாம் இணைத்து ஒரு கிராமத்து திருவிழாவின் ‘மூடை’ அப்படியே கொண்டு வந்திருப்பார் இளையராஜா.
இந்த ஆல்பத்தின் மிக இனிமையான பாடல் என்று ‘எந்தப் பூவிலும் வாசமுண்டு’ பாடலைத்தான் சொல்ல வேண்டும். இந்தப் பாடலின் மெட்டு, Georges Bizet என்கிற பிரெஞ்சு இசைக்கலைஞர் உருவாக்கிய இசைக்குறிப்பிலிருந்து தூண்டுதல் பெறப்பட்டிருக்கிறது என்கிறார்கள். (L'Arlésienne Suite Number one, 4th Movement, called "Carillon"). இதை தமிழ் திரைக்கேற்ப மிக அருமையாக உருமாற்றியிருப்பார் இளையராஜா.
எதிர்க்காற்று முகத்தில் ஆவேசமாக மோத ஒரு மலையின் உச்சியில் ஏறிக் கொண்டிருக்கும் உற்சாக மனநிலையை இந்தப் பாடல் தரும். எஸ்.ஜானகியின் அருமையான ஹம்மிங் மற்றும் இசையோடு துவங்கும் இந்தப் பாடல் மலை மீது ஏறி விரிந்த வெளியை புத்துணர்ச்சியோடு காணும் அனுபவத்தைத் தரும். தனக்கு அடைக்கலம் தந்த நாயகனுக்கு உருக்கத்துடனும் பிரியத்துடனும் நாயகி நன்றி சொல்லும் பாடல் இது.
இதைப் போலவே ‘புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை’ பாடலிலும் ஜானகியின் குரல் வளம் அபாரமாக வெளிப்பட்டிருக்கும். இதன் துவக்கத்தில் வரும் ஹம்மிங் அத்தனை அருமையானது. எஸ்.பி.சைலஜா பாடியிருக்கும் ‘மாமேன்.. மச்சான்.. பாடலில் தன்னை நிராகரிக்கும் நாயகனை நோக்கிய இறைஞ்சலும் தவிப்பும் அருமையாகப் பதிவாகியிருக்கும்.
ஹீரோ மாறுவேடத்தில் நாயகியுடன் இணைந்து வில்லனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பாடும் ‘கோடானு கோடி கண்ட செல்வனைப் பாடுங்க’ என்கிற பாடலில் பல ரகமான வாத்தியங்களை இசைக்க விட்டு அசத்தியிருப்பார் ராஜா. மலேசியா வாசுதேவனும் சுசிலாவும் அற்புதமாகப் பாடியிருப்பார்கள். 'ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதில்தான் சுகம்.. சுகம்’ என்கிற எம்.ஜி.ஆர் பாடலின் பாணியில் இதன் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அதிகம் கவனிக்கப்படவில்லை.
சண்டைக்காட்சிகள் உட்பட பல இடங்களில் இளையராஜாவின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரம் போலவே இயங்கி காட்சிகளின் மேலதிக தரத்திற்கு துணையாக நின்றிருக்கும்.
தொழில்நுட்ப வரிசையில் இரண்டாவதாக குறிப்பிடப்பட வேண்டியவர் கேமிராமேன் பாபு. இவரைப் போல் பாடப்படாத கதாநாயகர்கள் தமிழ் சினிமாவில் அதிகம். வெகுவாக கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
ஒரு வெகுசன திரைப்படத்திற்கு உரிய ஷாட்கள் என்பதைத் தாண்டி ஒளிப்பதிவாளரின் அபாரமான ரசனையையும் கலைத் திறமையையும் படம் முழுவதும் பார்க்கலாம். ‘இரண்டு பேர் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றால் அவர்களின் குளோசப்பிற்கு தரும் முக்கியத்துவத்தை பின்னணியில் இருக்கும் நிலப்பரப்பிற்கும் தந்திருப்பார் பாபு. அழகியல் உணர்வுடன் உருவாக்கப்பட்ட பல வைட் ஆங்கிள் ஷாட்கள் படத்திற்கு கூடுதல் அழகைச் சேர்த்தன.
கிராமம் சார்ந்த திரைக்கதை என்பதால் வயல்வெளியும் தோப்பும் நிறைந்த பச்சைப் பசேல் இடத்தை படக்குழு தேடியிருக்கிறது. இறுதியில் பொள்ளாச்சி என்கிற அழகிய நிலப்பரப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மலையும் ஆறும் நிறைந்த அழகான இடம் இது. பிற்பாடு பல தமிழ் சினிமாக்களின் படப்பிடிப்பு வாகனங்கள் பொள்ளாச்சியை நோக்கி அணிவகுத்ததற்கு விதை போட்ட படம் ‘முரட்டுக்காளை’தான். பாபுவின் காமிரா இந்த நிலப்பரப்பின் அழகை பல இடங்களில் அற்புதமாகப் கைப்பற்றியிருக்கிறது. ‘கமர்சியல் படம்தானே...’ என்கிற மெத்தனம் இல்லாமல் ஒளிப்பதிவாளருக்கு இருந்த தனிப்பட்ட ரசனை இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
மஞ்சு விரட்டுக் காட்சிகள், பாடல் காட்சிகள், குறிப்பாக சண்டைக்காட்சிகள் (அந்த ட்ரெயின் ஃபைட்டை மறக்க முடியுமா?!) போன்றவற்றில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஓடும் டிரெயினில் நடக்கும் சண்டையானது ஆங்கிலப்படங்களின் பாதிப்பில் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்திலேயே நான்கு கேமிராக்களை பயன்படுத்தி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சண்டைக்காட்சி. பட்ஜெட்டை மீறிப் போனாலும் காட்சிகள் பிரம்மாண்டமாக வர வேண்டும் என்கிற காரணத்தினால் செலவைப் பற்றி தயாரிப்பு நிறுவனம் கவலைப்படவில்லை. ரஜினியும் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் ‘டூப்’ போடாமல் நடித்தார்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களில் அடுத்தவராக ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்தைச் சொல்ல வேண்டும். ஸ்டண்ட் துறையில் மிகவும் சீனியர் இவர். தமிழ் உட்பட இந்திய மொழிகளில் வெளியான பல சினிமாக்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 1500-ஐ தாண்டுகிறது. மாடர்ன் பிக்ஸர்ஸில் இணைந்து பணியாற்றிய இவரின் முதல் திரைப்படம் ‘தாமரைக்குளம்’ (1959). கடைசியாக பணியாற்றியது ‘தலைநகரம்’ (2006).
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர்களாக விளங்கும் விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், ராம்போ ராஜ்குமார், ஃபெப்ஸி விஜயன் உட்பட பலர் இவரின் சீடர்கள்தான்.
‘முரட்டுக்காளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற மாந்தோப்பில் நடக்கும் கம்புச் சண்டை, வில்லனின் அடியாளுடன் நடக்கும் உக்கிரமான சண்டை, ரேக்ளா வண்டி சேஸிங் சண்டை, ஓடும் டிரையினில் நடக்கும் பரபரப்பான சண்டை ஆகிய அனைத்துமே ஜூடோ ரத்னம் மாஸ்டரின் அசாதாரணமான திறமைக்குச் சான்று.
அந்தக் காலத்தின் இளம் ரசிகர்கள் பரபரப்பான சண்டைக்காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருப்பதை முக்கியமாக நினைத்தார்கள். "மாப்ள.. இந்தச் சண்டைக்காட்சிக்கு மட்டுமே டிக்கெட் செலவு சரியாப் போச்சுடா” என்று ரசிகர்கள் உற்சாகமாக பேசிக் கொள்ளுமளவிற்கு சில சண்டைக்காட்சிகள் அவர்களின் மனதில் நின்றன. அவற்றில் ஒன்று ‘முரட்டுக்காளை’. ஒவ்வொரு சண்டைக்காட்சியுமே ஏனோ தானாவேன்று சம்பிரதாயமாக கடக்காமல் நிறுத்தி நிதானமாக பல நிமிடங்கள் வருமாறு சிரத்தையாக அமைத்திருந்தார்கள்.
இந்த வரிசையில் அடுத்ததாக எடிட்டர் ஆர்.விட்டலின் பங்களிப்பை நிச்சயம் சொல்ல வேண்டும். கிராமத்தில் நடந்த அசலான மஞ்சு விரட்டுக் காட்சிகளையும் வில்லனின் முன்னிலையில் ஹீரோ மாட்டை அடக்கும் காட்சிகளையும் அருமையாக மேட்ச் செய்திருப்பார். போலவே ஹீரோவின் க்ளோசப் ஷாட்டுக்களை பிசிறடிக்காதவாறு இணைத்திருப்பார். மறுபடியும் அதேதான். கிளைமாக்ஸ்ஸில் வரும் ட்ரெயின் ஃபைட் இன்றளவும் பேசப்படுவதற்கு ஒளிப்பதிவாளர், ஸ்ட்ண்ட் மாஸ்டர் ஆகியோரோடு இணைந்து எடிட்டரும் குறிப்பிடப்பட வேண்டியவர்.
'முரட்டுக்காளை’ இன்றைக்குப் பார்த்தாலும் சுவாரஸ்யம் குறையாத படம். ரஜினியின் சாகச காட்சிகளும், பஞ்சு அருணாச்சலத்தின் திறமையான திரைக்கதையும் ராஜாவின் அருமையான பாடல்களும் முத்துராமனின் அபாரமான இயக்கமும் இந்தப் படத்தை மிகச் சிறந்த வெகுசன திரைப்படத்தின் உதாரணமாக காட்டுகின்றன.
என்றாலும் படம் ஓரளவிற்கு மேல் சுவாரசியத்தை இழந்து தனது கட்டுப்பாட்டை தவற விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக ‘ட்ரெயின் ஃபைட்டைச்’ சொல்ல வேண்டும் என்றாலும் படத்தை பிரம்மாண்டமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக அந்தக் காட்சிகள் திணித்தது போல் ஆகி விட்டது.
கிளைமாக்ஸ் ஃபைட் முடிந்தவுடன் உடனே படமும் ‘மங்கலகரமாக’ முடிய வேண்டும் என்பது ஒரு மரபு. ஆனால் இந்தச் சண்டைக்குப் பிறகு, வில்லனின் முன்னிலையில் மாறுவேடத்தில் ஹீரோ மரு வைத்துக் கொண்டு ஆடிய பாடல் எல்லாம் பொறுமையைச் சோதித்து விட்டது எனலாம்.
இப்போதெல்லாம் ஒரு ‘மெகா ஹிட்’ படத்தை ரீமேக் செய்து கொத்துப் பரோட்டாவாக ஆக்குவது என்பது அபத்தமான வழக்கமாகி விட்டது. ‘முரட்டுக்காளை’யும் இதற்கு விதிவிலக்கில்லை. சுந்தர்.சி ஹீரோவாக நடிக்க 2012-ல் வெளிவந்த இதன் ரீமேக் வடிவத்தை பார்வையாளர்கள் ஏற்கவில்லை. இந்த ரீமேக்கில் திருநங்கை வேடத்தில் விவேக் செய்த பல ஆபாசமான கொனஷ்டைகளும் வசனங்களும் முகம் சுளிக்க வைத்தன.
அதிகாரபூர்வமான ரீமேக் ஒருபுறம் இருந்தாலும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் பாத்திரங்களையும் அதன் தன்மைகளையும் சுடும் வழக்கமும் இன்னொரு புறம் இருந்தது. அஜித் நடித்து 2014-ல் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தில் தம்பிகளுக்காக திருமணம் செய்து கொள்ளாத அண்ணன், அவனது நான்கு சகோதரர்கள் என்கிற பாத்திரப்படைப்பு ‘முரட்டுக்காளை’யின் தூண்டுதலில் இருந்துதான் பெறப்பட்டிருக்க வேண்டும். இந்த நகல் மிக அப்பட்டமாகத் தெரிந்தது.
குறைகள் இருந்தாலும் ஒரு வெகுசன திரைப்படத்தை எவ்வாறு சுவாரசியமாகவும் வணிக ரீதியான வெற்றியாகவும் உருவாக்குவது என்பதற்கு இன்றைக்கும் சாட்சியமாக விளங்குகிறது ‘முரட்டுக்காளை’.
கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக ஒரு முக்கியமான புகாரை பதிவு செய்தேயாக வேண்டும். அதுவரை தமிழ் சினிமாத்துறையில் பெரும்பாலும் வணிக ரீதியான திரைப்படங்களே வெளியாகிக் கொண்டிருந்தன. மிக அரிதாகவே வணிக அம்சங்கள் அதிகமில்லாத, கலை சார்ந்த மாற்று முயற்சிகள் நடந்தன.
இந்தச் சூழலில் எண்பதுகளின் காலக்கட்டத்தை மாற்று முயற்சிகளின் ‘பொற்காலம்’ எனலாம். பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரைய்யா என்று ஒரு குறிப்பிட்ட வரிசை இயக்குநர்கள், இந்தப் பொன்னுலகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், இந்தச் சமயத்தில் வெளிவந்த ‘முரட்டுக்காளை’ ‘சகலகலா வல்லவன்’ போன்ற வெகுசன திரைப்படங்களின் பிரம்மாண்டமான வெற்றி, இந்தப் பொன்னுலகத்தை கொடூரமாக கலைத்துப் போட்டது. கமர்சியல் படங்களின் உருவாக்கம் இதன் பின்னால் மூர்க்கமாகப் பெருகியது.
எந்தவொரு கலைத்துறையிலும் வணிக ஆக்கங்கள் ஒருபுறமும் கலை சார்ந்த முயற்சிகள் இன்னொருபுறமும் இணைக்கோடாக உருவாவதுதான் நல்ல சூழல். ஆனால் தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களே அதிகம் உருவாகின்றன.
ஒருவேளை எண்பதுகளின் பொற்காலம் இன்றும் தொடர்ந்திருந்தால் உலக அரங்கில் பல கவனிக்கத்தக்க தமிழ்த் திரைப்படங்கள் இருந்திருக்கும். இதெல்லாம் திட்டமிட்டு நடப்பதில்லை என்றாலும் அந்த மாற்று முயற்சிகளை மறைமுகமாக ஒழித்தது என்கிற புகார், ‘முரட்டுக்காளை’ போன்ற கமர்சியல் திரைப்படங்களின் மீது இன்றளவும் இருக்கிறது.
இந்தப் படத்தை முதலில் பார்த்த உங்களின் அனுபவத்தை கமென்ட்டில் பகிருங்கள்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/revisiting-1980-superhit-commercial-movie-murattu-kaalai-nostalgia-series
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக