தொடர் விபத்துகள்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில், மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்.எல்.சி என்று அழைக்கப்படும் ’நெய்வேலி நிலக்கரி நிறுவனம்’. அனல்மின் நிலையம் 1 மற்றும் விரிவாக்கம், அனல்மின் நிலையம் 2 மற்றும் விரிவாக்கம், என்.என்.டி.பி (Neyveli New Thermal Power Project) என 5 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனமான இதில், நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.
இத்தனை ஆயிரம் பேர் பணிபுரியும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், மின் உற்பத்தியில் அக்கறை காட்டும் என்.எல்.சி நிர்வாகம், அதில் சிறிதளவுகூட தொழிலாளர்களின் பாதுகாப்பில் காட்டுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதன் விளைவாக அடிக்கடி பாய்லர்கள் வெடித்துச் சிதறுவதும், அப்பாவி தொழிலாளர்கள் உடல் கருகிப் பலியாவதும் தொடர்கதையாகிவருகிறது. சுமார் 3,000 தொழிலாளர்கள் பணிபுரியும் 2-வது அனல்மின் நிலையத்தில் மட்டும் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தீயில் கருகிய தொழிலாளர்கள்
கடந்த ஏப்ரல் மாதம் 7-ம் தேதி, அங்கிருந்த பாய்லருக்குள் நிலக்கரியை அனுப்பும்போது பாய்லர் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில், நிரந்தரத் தொழிலாளிகளான சர்புதீன் மற்றும் பாவாடை, ஒப்பந்தத் தொழிலாளிகளான சண்முகம், பாலமுருகன், சொஸைட்டி தொழிலாளர்களான அன்புராஜ், ஜெயசங்கர், மணிகண்டன், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 8 தொழிலாளர்கள் தீயில் கருகி படுகாயமடைந்தனர். சர்புதீன், சண்முகம், பாலமுருகன், பாவாடை உள்ளிட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்கு முந்தைய வருடமும் அதேபோன்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அந்த விபத்துக்கான காரணம் குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இன்றும் அதேபோன்று 5-வது யூனிட்டில் இருக்கும் பாய்லர் வெடித்ததில் 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். அந்த விபத்தில் இதுவரை பத்மநாபன், அருண் குமார், வெங்கடேசன், நாகராஜன், சிலம்பரசன் என 6 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்திருக்கின்றனர். தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். படுகாயமடைந்தவர்கள், திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனர்.
என்.எல்.சி நிர்வாகத்தின் அலட்சியம்?
கடந்த முறை ஏற்பட்ட விபத்தின்போது, ``உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காததுதான் தொடர் விபத்துகளுக்கு காரணம்’’ என்று குற்றம் சுமத்திய தொழிற்சங்கங்கள், ``விபத்துக்குள்ளான அனல்மின் நிலையம் 30 ஆண்டுகள் பழமையானது என்பது முக்கியமான காரணங்களில் ஒன்று. அதேபோல், வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படும் பழுதுபார்க்கும் பணியையும், தெர்மலில் நிலக்கரியை சுத்தம் செய்யும் பணியையும் ஒழுங்காக மேற்கொள்ளாமல், உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு நிர்வாகம் செயல்படுவதால்தான் இப்படியான விபத்துகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டும் இதேபோல இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதற்குப் பிறகு, `பெல்’ போன்ற பெரிய நிறுவனத்தைக் கொண்டு அந்தப் பழுதை சரிசெய்யாமல், சிக்கன நடவடிக்கைக்காக உள்ளூர் ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு பார்த்ததால்தான், தொழிலாளர்கள் தொடர்ச்சியாக உயிரிழக்கின்றனர்” என்றும் குற்றம்சாட்டியிருந்தன.
உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்?
கடந்த ஏப்ரல் மாதம் நடைப்பெற்ற விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அமைத்திருப்பதாகக் கூறியிருந்தது என்.எல்.சி நிர்வாகம். ஆனால், அந்த விசாரணை முடிவதற்குள், மீண்டும் அதேபோன்று, அதே இடத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது என்.எல்.சி நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது என்று குமுறுகின்றனர், உயிரிழந்தவர்களின் உறவினர்கள்.
Also Read: `வெடித்துச் சிதறிய பாய்லர்; தீயில் சிக்கிய 8 தொழிலாளர்கள்!’- பதறவைத்த நெய்வேலி தீ விபத்து
திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர் சக தொழிலாளர்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/5-workers-killed-and-17-workers-injured-by-boiler-blast-in-nlc-at-cuddalore-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக