தேனி மாவட்டம் மேகமலை அடிவாரத்தில் உள்ள சுருளியாறு மின்நிலையத்திலிருந்து 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் மலைகள் வழியாக கயத்தாறு வரை உயர்மின் அழுத்தக் கம்பி மூலம் மின்சாரம் கொண்டுசெல்லப்படும். கடந்த 1957-ம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த மின் வழித்தடம். காலப்போக்கில், மின்கம்பிகள் மிகத் தாழ்வாக வந்துவிட்டன. காட்டுப்பகுதி வழியாக மின் கம்பிகள் செல்வதால், அவற்றை சரிசெய்வது மின்சாரத்துறைக்கு பெரிய வேலையாகவே இருந்தது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை அடுத்தடுத்து ஒரு குட்டி யானை உட்பட ஐந்து யானைகள், தாழ்வாகச் செல்லும் அந்த மின்கம்பி உரசியதால் பரிதாபமாக உயிரிழந்தன.
Also Read: மேகமலை தேயிலைத் தோட்டத்தில் யானை இறப்பு − வனத்துறையினர் ஆய்வு
உடனடியாக சுருளியாறு டு கயத்தாறு மின் வழித்தடத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அடுத்தடுத்து யானைகள் மின் கம்பியில் உரசி பலியானது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், ``7 அடி உயரத்தில் மின் கம்பிகள் தாழ்வாக இருந்ததால், 12 அடி உயரம் கொண்ட யானைகள் அதில் சிக்கி பலியாகின்றன. எனவே, வனத்திற்குள் செல்லும் மின் கம்பிகளை முறைப்படுத்த வேண்டும்” என்று அம்மனுவில் கோரப்பட்டது. விசாரணையின் முடிவில், மின் கம்பிகளை உயர்த்துவதாக நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தது தமிழ்நாடு மின்சார வாரியம்.
இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆன நிலையில், இது வரை மின்சாரக் கம்பிகளை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் வன விலங்கு ஆர்வலர்கள், தற்போது மின் கம்பியில் மின்சாரம் செல்லவில்லை என்றாலும், அது தாழ்வாக இருப்பது யானைகளுக்கு ஆபத்துதான் எனவும் கூறுகின்றனர்.
Also Read: எழில் கொஞ்சும் மேகமலை படங்கள்!
இதுதொடர்பாக மேகமலை வன உயிரினக் காப்பாளர் போன்ஸ்லே சச்சின் துக்காராமிடம் பேசினோம். “மின்சாரத்துறைக்கு இப்போதுவரை நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறோம். ஆனால், அவர்கள்தான் இன்னும் பணியை ஆரம்பிக்கவில்லை” என்றார்.
மின்சார வாரிய அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ”மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் டெண்டர் கேட்டது. அவர்கள் கேட்ட தொகை பெரியதாக இருந்ததால், மின்சார வாரியம் மறுத்துவிட்டது. மேலும், காட்டிற்குள் 10 உயர் மின் அழுத்தக் கோபுரங்களைச் சரிசெய்து, அதன் உயரத்தை அதிகரிக்க வேண்டும். அந்தக் காலத்தில் எப்படி வேலை செய்தார்கள் எனத் தெரியவில்லை. இப்போது டெண்டர் கேட்டு வருபவர்கள், ஹெலிகாப்டரில்தான் பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும் என்று கூறுகின்றனர். உயர் அதிகாரிகளும் இப் பணியை முடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். விரைவில் பணி தொடங்கிவிடும்” என்றார்.
source https://www.vikatan.com/news/environment/current-situation-of-meghamalai-electric-wire-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக