Ad

வெள்ளி, 24 ஜூலை, 2020

கந்த சஷ்டி விவகாரம்: `இனியும் பொறுக்க மாட்டோம்!’ - காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கொரோனா பாதிப்பு, ஓ.பி.சி ஒதுக்கீடு போன்ற மிகப்பெரிய விவகாரங்களுக்கு மத்தியிலும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கந்த சஷ்டி கவசம் குறித்த சர்ச்சை. கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல், கந்த சஷ்டி குறித்து வெளியிட்ட ஓர் வீடியோவுக்கு மாநிலம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே இந்த விவகாரத்தில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

கறுப்பர் கூட்டம்

இதுதொடர்பாக, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, சர்ச்சையான அந்த வீடியோவும் நீக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அதுகுறித்தான விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ``கவசம் என்பது முருகப்பெருமானுக்கு மட்டுமல்ல. எல்லா தெய்வங்களுக்குமே கவசம் பாடப்பட்டுள்ளது. முருகனை தமிழ் கடவுள் என்று போற்றி புகழ்கிறோம். தமிழகத்தில் மிகப்பெரிய புலவர்கள் முருகனுக்கு பாடல்கள் எழுதியுள்ளனர். கந்தசஷ்டி கவசத்தை மிகவும் அருவருக்கத் தக்க பாடல் என்று வீடியோவில் ஒருவர் சொல்வது அநியாயமானது.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர

இது இந்து மதத்தைக் கிள்ளி பிரச்னையை ஏற்படுத்தி, நாட்டின் அமைதியைக் குலைக்கும் செயல். இதைத் தட்டிக்கேட்பதற்கு ஆள் இல்லாமல், காவி கொடிகளுடன் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே போராடும் என்று வசைபாடுபவர்களின் பேச்சு நிறுத்தப்பட வேண்டும்.

இந்து மதத்தை இதுபோன்று இழிவுபடுத்தும் செயல்களில் யாராவது ஈடுபட்டால் அவர்களின் நாக்கை துண்டிப்பதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்துக்களின் மனம் மிகவும் வேதனையடைந்துள்ளது. மேலை நாடுகளில் உள்ள முருகனின் பக்தர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எந்த மதத்தைக் கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு, விஞ்ஞான ரீதியாக முன்னேறிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதுபோன்ற பிரச்னைகள் தேவையில்லை.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர

ஆனால், இந்து மக்கள் மீது அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. முருகனை இழிவுபடுத்தினால் முத்துராமலிங்க தேவரின் பக்தர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வன்முறைகள் தடுக்க வேண்டுமென்றால், இனி இதுபோல ஒரு சம்பவம் நடக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/kamatchipuram-athinam-sivalingeshwara-condemned-over-kantha-shashti-kavasam-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக