Ad

சனி, 4 ஜூலை, 2020

"நீங்கள் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர்!"- சிறைக்குள்ளும் தொடரும் சாத்தான்குளம் ஸ்ரீதரின் அத்துமீறல்

சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையிலும் தனது அதிகார தோரணை காட்டியதால் அதிர்ந்து போன சிறை அதிகாரிகள் அவரை மதுரை சிறைக்கு மாற்றியுள்ளனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் வர்த்தகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் குறித்து தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல்துறை ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கண்ணன், உள்ளிட்ட ஐந்து பேரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு விவகாரத்தில் முதலில் ஆய்வாளர் ஸ்ரீதர் பெயர் சேர்க்கப்படவில்லை. தனது பெயர் எப்படியும் இந்த வழக்கில் சேர்க்கப்படும் என்பதை அறிந்த ஸ்ரீதர் தனக்கு நெருக்கமான ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவரிடம் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளார். அதோடு ஆளும்கட்சியின் ஆசியுடன் இந்த வழக்கிலிருந்து விடுபட்டு விடவும் திட்டமிட்டார். ஆனால், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடந்ததால் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி காவல்துறை. தன்னை கைது செய்யாமல் இருக்க, தனது சொந்த மாவட்டமான தேனிக்குச் செல்லும் வழியில் சி.பி.சி.ஐ.டி காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார் ஸ்ரீதர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்

Also Read: சாத்தான்குளம்: பென்னிக்ஸ் கையில் சிக்கிய செல்போன் ஆதாரம்? - பின்னணியில் முக்கியப் பிரமுகர்?

கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவல்துறையினரும் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்படும் முன்பே உதவி ஆய்வாளர் ரகுகண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், ஸ்ரீதர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டது முதலே தனது அதிகாரத்தைச் சிறை அதிகாரிகளிடம் காட்டி மிரட்டியிருக்கிறார்.

இதுகுறித்து சிறைத்துறையினர் உயரதிகாரிகளிடம் புலம்பியிருக்கிறார்கள். “ஆய்வாளர் என்ற முறையில் சிறையில் அவருக்குத் தனி செல்தான் கொடுத்தோம். ஆனால் இரவில் தனது செல்லை மூடக் கூடாது என்று முதலில் பிரச்னை செய்தார். சிறை விதிப்படி யாராக இருந்தாலும் கதவை மூடிவைக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்துச்சொல்லியும் அவர் கேட்க மறுத்துவிட்டார்.

சாத்தான்குளம்

அதேபோல் சிறை காவலர்களிடம், ‘நீங்கள் எல்லாம் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர். இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தால் உங்களைத் தூக்கி உள்ளே வைத்து விடுவேன்’ என்று ஒருமையில் பேசியிருக்கிறார். அதோடு, ‘இந்தச் சிறையில் மூச்சு அடைக்கிறது. எனக்கே இப்படி மூச்சடைத்தால் அந்த இருவருக்கும் எப்படி மூச்சடைத்திருக்கும்... நான் உங்களிடம் ஒப்படைத்து இரண்டு நாள்கள் கழித்துத்தான் அவர்கள் இறந்துள்ளார்கள். அவர்கள் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று சிறை கண்காணிப்பாளரிடம் இரவு பிரச்னை செய்துள்ளார்.

சாப்பாடு கொடுக்கச் சென்றால், ‘சூப்பிரண்டென்ட்டை எனக்குச் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுங்கள். அவரைவிட நான் உயரதிகாரி. நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று நேற்று இரவு முதல் தொடர்ந்து சிறைக்காவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார் ஸ்ரீதர். மேலும், "நான் வெளியே வந்தால் உங்கள்மீது தனிநபர் வழக்கு தாக்கல் செய்து உங்கள் வேலையைக் காலி செய்துவிடுவேன்” என்ற மிரட்ட சிறைத்துறையினர் செய்வதறியாது நின்றுள்ளார்கள்.

ஒருகட்டத்தில் இதுகுறித்து சிறைத்துறை மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. “சிறைக்குள் வந்தால் அதிகாரி என்றெல்லாம் கிடையாது. அவரும் ஒரு கைதி என்பதை அவருக்குத் தெளிவுபடுத்துங்கள்” என்று சொல்ல, அதை ஸ்ரீதரிடம் காவலர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே பாதுகாப்பில் இருந்த சிறைக்காவலர்களிடம் ஒருமையில் பேசி, “என்னை மதுரை சிறைக்கு உடனடியாக மாற்றுங்கள். இங்கு எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள்” என்று மிரட்ட, அதிர்ந்து போன அதிகாரிகள் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவலர்களையும் மதுரை சிறைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்

சனிக்கிழமை மாலை இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஐந்து பேரையுமே மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். இவரது நடவடிக்கைகளைப் பார்த்த இவருடன் கைதாகியிருந்த காவலர்கள், “இவரால்தான் இப்போது நாங்கள் உள்ளே இருக்கிறோம். இப்படி எங்களையும் டார்ச்சர் பண்ணித்தான் சிறை வரை கொண்டுவந்து விட்டார்” என்று புலம்பியிருக்கிறார்கள். ஸ்ரீதர் வெறும் காவல் ஆய்வாளர் என்கிற போர்வையில் மட்டும் அதிகாரம் செலுத்தவில்லை. பல நேரங்களில், “என் பின்னால் யார் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று சிறைத்துறையினரிடம் கோபப்பட்டுள்ளார். ஆளும்கட்சியின் சக்தி வாய்ந்த நபர், இவர் பின்னால் இருக்கிறார் என்பதாலே சிறைக்குள்ளும் இவரது அதிகாரம் வேலைசெய்கிறது என்று புலம்புகிறார்கள் சிறைத்துறை காவலர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/sathankulam-sridhar-controversial-activities-in-prison

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக