,கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்து வரும் நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 1.30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறிவருகிறது. இதனிடையே, `ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்’ போராட்டம், தேர்தல் தொடர்பாக நடக்கும் பிரசாரக் கூட்டங்கள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் என அனைத்தும் பாதிப்பு எண்ணிக்கையைக் கடுமையாக அதிகரிக்கும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துவருகின்றனர். எனினும், பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் மீது தொடக்கம் முதலே இருந்துவருகின்றன.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மட்டும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கிய நாள் முதல், ஒரே நாளில் இவ்வளவு அதிகமான பாதிப்புகள் இதற்கு முன் ஏற்படவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முகக்கவசங்களை அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் என எந்தவொரு வழிமுறையையும் பின்பற்றாவிட்டால், இந்த பாதிப்பு ஒருநாளைக்கு 1 லட்சம் என்கிற அளவில் பாதிப்பு அதிகரிக்கும் என தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜூன் முதல் வாரம் முதல், அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் சுமார் 22,000 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுவந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அதிகரித்துவந்த பாதிப்பு எண்ணிக்கை ஜூன் மாதக் கடைசி ஏழு நாள்களில் இருமடங்காக அதிகரித்து, சுமார் 40,000 பாதிப்புகள் கண்டறியப்பட்டுவந்தன.
Also Read: கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா
பிரேஸிலில் மட்டும்தான் இதற்கு முன்புவரை ஒரேநாளில் 50,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 49,286 பாதிப்புகள் கண்டறியப்பட்டன. அதிக பாதிப்புக்குக் காரணமாக ட்ரம்ப், ``பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகத்தான் செய்யும்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அரிசோனா, கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா மற்றும் டெக்ஸாஸ் ஆகிய பகுதிகளில் இருந்தே கண்டறியப்படுகின்றன. நாட்டின் மக்கள்தொகையில் 30 சதவிகிதம் பேர் இப்பகுதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நான்கு மாகாணங்களும், கூடுதலாக இன்னும் 10 மாகாணங்களும், ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்துள்ளன.
அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனங்களின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் இயக்குநர், டாக்டர் ஆண்டனி ஃபாசி, ``வேகமாகப் பரவிவரும் வைரஸைத் தடுக்க, நாடு தழுவிய அளவில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தினசரி கண்டறியப்படும் பாதிப்பு எண்ணிக்கை 1,00,000 ஆக அதிகமாகும். அதிகம் பாதிப்படைந்த பகுதிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தாமல் அனைத்து பகுதிகளிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த வைரஸ் ஒட்டுமொத்த நாட்டையும் ஆபத்தில் தள்ளியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த வார இறுதியில் வரும் அமெரிக்க சுதந்திர தினம், கடற்கரைகளில் கூடும் மக்கள் கூட்டம், சில தளர்வுகள் ஆகியவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுப்பதோடு, தங்களது கவலையையும் பதிவு செய்துள்ளனர்.
அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``நான் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது முகக்கவசங்களை நிச்சயமாக அணிவேன். நாடு முழுவதும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஏனெனில், நாட்டில் பல இடங்கள் உள்ளன. அங்கு, மக்கள் நீண்ட இடைவெளியில் தங்கிவருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
Also Read: `ஜெர்மனியில் குறைப்பு; இந்தியாவுக்கு ஆதரவாகப் படைகள்!’ - சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா?
source https://www.vikatan.com/news/world/50000-people-affected-by-corona-in-single-day-at-us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக