Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

பா.ஜ.க, பா.ம.கவுக்கு கல்தா, வாக்குச்சாவடிக்கு `500'... அ.தி.மு.கவின் பக்கா ப்ளான்! #2021TNElection

2017 பிப்ரவரி 16-ம் தேதி, எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றபோது, அவர் வெற்றிகரமாக மிச்சமிருக்கும் நான்கு ஆண்டுகளுக்கும் முதல்வராக நீடிப்பார் என யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. இதோ, ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் எனத்தான் அப்போது பலர் ஆருடம் சொன்னார்கள். ஆனால், அனைத்தையும் பொய்யாக்கி முதல்வராக நான்காவது ஆண்டில் பயணித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தனக்கென ஒரு பாணியைக் கடைபிடித்துவரும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வியூகங்களிலும் அதிரடி காட்டத் தொடங்கியிருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் நலம் விசாரித்தல், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சமாளித்தல் என பல வேலைகளுக்கு மத்தியில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் காய் நகர்த்தல்களையும் தொடங்கிவிட்டார் எடப்பாடி. கடந்த வாரம் அதிமுகவின் சீனியர் தலைவர்களுடன் இதுகுறித்து விவாதித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னென்ன என விரிவாகப் பார்ப்போம்.

எடப்பாடி பழனிசாமி

50 சதவிகிதம் லட்சியம்... 45 நிச்சயம்

2016 சட்டமன்றத் தேர்தலில், தன்னிச்சையாக 41 சதவிகித வாக்குகளைப் பெற்ற அதிமுக, 2019 நாடாளுமன்றத் தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலிலும் படு வீழ்ச்சியைச் சந்தித்தது. சரிபாதியாகக் குறைந்தது வாக்கு சதவிகிதம். அதனால் இந்தமுறை வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதற்கான சில அதிரடித் திட்டங்களைத் தீட்டியிருக்கிறது அ.தி.மு.க. அதன்படி, ``ஒரு வாக்குச் சாவடியில் சுமார் 800 வாக்குகள் வரை இருக்கும். அதில், 100 அ.தி.மு.க உறுப்பினர்களைத் தேர்தெடுப்பது. அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, ஒருவருக்கு குறைந்தது பத்துப்பேர் எனப் பிரித்துக்கொள்வது. எப்போதும் அவர்களுடன் தொடர்பில் இருந்து அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத் தந்து தேர்தல் நேரத்தில் அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க கேன்வாஸ் செய்து வாக்குகளைப் பெறுவது'' எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஒருவர் கேன்வாஸ் செய்யும் பத்துப்பேரில், ஐந்து பேர் வாக்களித்து விட்டாலே போதும் ஒரு வாக்குச்சாவடிக்கு 500 வாக்குகளைப் பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டமாகப் போய் ஒவ்வொருவரிடமும் வாக்குக் கேட்பதை விட இது போன்று தனிப்பட்ட முறையில் கேன்வாஸ் செய்வது பலனளிக்கும். கொரோனா கட்டுப்பாடுகளால் நேரடியாகக் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பிருக்குமா எனத் தெரியாத நிலையில் இந்தத் திட்டம் நிச்சயமாகக் கைகொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த வியூகப்படி, 50 சதவிகித வாக்குகள் லட்சியம், ஆனால், குறைந்தது 45 சதவிகித வாக்குகளைக் கைப்பற்றிவிட்டாலே அசால்ட்டாக வெற்றிபெற்று விடலாம் என கணக்கு போடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு, சீனியர் தலைவர்கள் முதல், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளின் வரை சரியான ஒத்துழைப்புத் தரவேண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்படி பழனிசாமி.

ராமதாஸ்

 மெகா கூட்டணி ப்ளான்!

கண்டிப்பாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்ககூடாது என்பதே அதிமுகவில் இருக்கும் பெரும்பாலான சீனியர் தலைவர்களின் கருத்தாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா,ஜ..கவின் மீதிருந்த எதிர்ப்பலையால்தான் நாம் படுதோல்வியைச் சந்தித்தோம் என விவாதிக்கப்பட்டிருக்கிறது. ``நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்குத்தான் ஆதரவளிக்கப் போகிறோம்... காங்கிரஸுடனா சேரப் போகிறோம்? ஆனால், தேர்தல் நேரத்தில் விலகி இருப்பதே நல்லது'' என முதல்வரே பிரதமர் மோடியிடம் சொல்லியிருப்பதாக கட்சி வட்டாரத்துக்குள் பேச்சு உலவுகிறது. அதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்கிறார்கள் சீனியர் நிர்வாகிகள். அதேபோல, ``மாற்றி மாற்றிப் பேசுகிறார் ராமதாஸ். திமுகவுடன் சேர்வதற்கும் பா.ம.க பேசிவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ம.கவின் வாக்குகள் நமக்குப் பெரிதாக உதவவில்லை; அதனால் பா.ம.கவையும் கூட்டணியில் வைத்துக்கொள்ள வேண்டாம்'' எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வட தமிழகத்தில் பா.ம.கவால் ஏற்படும் வாக்கிழப்பைச் சமாளிக்க வி.சி.கவை எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடவேண்டும் எனவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. திருமாவளவன் கூட்டணிக்குள் வருவது, பட்டியலின மக்களின் வாக்குகளைப் பெறுவதுவரை கண்டிப்பாக உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. தவிர, பா.ஜ.க, கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டால், இரண்டு கம்யூனிஸ்ட்களையும் ஈசியாகக் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் எனவும் யோசிக்கிறார்கள். ஒருவேளை, பா.ஜ.க, பா.ம.க என இரு கட்சிகளும் தி.மு.க கூட்டணிக்குச் சென்றுவிட்டால், வி.சி.கவும் இரண்டு கம்யூனிஸ்ட்களும் அந்தக் கூட்டணியில் கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். இயல்பாகவே அவர்கள் நம் கூட்டணிக்கு வந்துவிடுவார்கள். நமக்கு வேலை மிச்சம். நிச்சயமாக போனமுறை போன்று மக்கள் நலக்கூட்டணி எனப் பலப்பரிட்சையில் ஈடுபடமாட்டார்கள் என்றும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

முதல்வர் எடப்பாடியுடன் திருமா

அதேபோல, தென் தமிழகத்தில் பட்டியலின மக்களின் வாக்குகளைக் கவர புதிய தமிழகத்தை அப்படியே கூட்டணியில் நீடிக்கச் செய்துவிட்டால் போதும். அவ்வப்போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், அவருக்கு உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுத்துவிட்டால் அமைதியாகிவிடுவார் எனவும் பேசப்பட்டிருக்கிறது. தவிர, பா.ஜ.கவை கூட்டணியை விட்டு விலக்கிவிட்டாலே இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம். இஸ்லாமிய அமைப்புகளையும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டால், ஏற்கெனவே சி.ஏ.ஏ விஷயத்தில் இருக்கும் அதிருப்தியையும் துடைத்துவிடலாம் எனவும் அ.தி.மு.க தரப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில், ஏற்கெனவே கூட்டணியில் இருக்கின்ற, தே.மு.தி.க, த.மா.கவுடன் புதிதாக வி.சி.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளையும் இணைத்து மெகா கூட்டணி அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை.

Also Read: ``தி.மு.க நிர்வாகிகளுக்கு அடுத்த அசைன்மென்ட்'' - ஐபேக் ஐடியாவில் அதிரடித் திட்டங்கள்!

கோட்டா சீட் இல்லை

இந்தமுறை, இ.பி.எஸ்ஸுக்கு, ஓ.பி.எஸ்ஸுக்கு, அவருக்கு இவருக்கு என கோட்டா சீட் முறை கண்டிப்பாக இல்லை. அதேபோல தொகுதியில் நல்ல பெயர் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கும் நிச்சயமாக சீட் இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலப் பொறுப்புகளில் உள்ள 10-20 பேருக்கு சீட் தவிர, மற்ற அனைத்து இடங்களும் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பான கட்சி வேலை செய்யும் நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்க என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொறுப்பில் இல்லாவிட்டாலும் பல வருடங்களாக கட்சியில் இருந்து கடுமையான கட்சி வேலை செய்பவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

ஆபரேஷன் `சின்னம்மா'

``வயது மூப்பு, உடல்நிலை ஆகிய காரணங்களால் கண்டிப்பாக சசிகலா வெளியில் வந்தாலும் நமக்கு எதிராக தடாலடியான செயல்பாடுகளில் இறங்கமாட்டார். அவருக்குத் தேவையான விஷயங்களை நாம் செய்துகொடுத்தாலே போதும், சின்னம்மாவைச் சமாளித்துவிடலாம். டிடிவியையும் சின்னம்மா ஆதரிக்க மாட்டார். சமீபமாக இருவருக்குமிடையே டெர்ம்ஸ் சுத்தமாகச் சரியில்லை. ஆரம்பம் முதலே டிடிவி தனியாக கட்சி ஆரம்பித்தது சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. சசிகலாவுக்கு விட்டு வைத்திருந்த பொதுச்செயலாளர் பதவியையும் அவரே எடுத்துக்கொண்டார். அவைத்தலைவராக ஆக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக அந்தம்மா விரும்பமாட்டார்.

ஆறு மாதமாக இருவருக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லை. `சசிகலாவை கட்சியிலும் ஆட்சியிலும் சேர்க்கமாட்டோம்' என ஜெயக்குமார் வெளிப்படையாக பேசியபிறகும் தினகரன் அது குறித்து இதுவரை திறக்கவில்லை. அதனால், சசிகலா வெளியில் வந்தாலும் அது எங்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்தம்மா வெளியில் வந்து அமைதியாக இருந்துவிட்டாலே, தினகரனையும் எளிதாக டீல் செய்துவிடுவோம். அதனால், இந்தத் தேர்தலிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிப்போம்'' என்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர் நிர்வாகிகள்.

ஆயிரம் திட்டங்களை வியூகங்களை வகுத்தாலும் யாரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதை ஜனநாயகத்தின் மன்னர்களான மக்கள்தான் முடிவுசெய்யவேண்டும். மக்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-strategies-to-tackle-2021-tamilnadu-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக