Ad

சனி, 4 ஜூலை, 2020

குமரியின் கோயம்பேடாக மாறிய வடசேரி சந்தை - போலீஸ், வியாபாரிகள் 40 பேருக்கு கொரோனா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கொரோனா அதிவேகமாகப் பரவி வருகிறது. ஆரம்பத்தில் கடற்கரை கிராமங்களில் கொரோனா பரவாமல் இருந்தது. இந்தநிலையில் தூத்தூர் கடற்கரைக் கிராமத்தில் நர்ஸிங் மாணவி ஒருவருக்கு கொரோனாத் தொற்று காண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவர் மூலம் அந்தக் கிராமத்தில் பலருக்கும் கொரோனா பரவியது. அதைத்தொடர்ந்து சில கடற்கரைக் கிராமங்களில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மேலும், மாவட்டத்தில் பரவலாக வெவ்வேறு கிராமங்களில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு இரண்டு நாள்கள் அடைக்கப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திலும் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது. இந்தநிலையில், நாகர்கோவிலில் பழைமையான வடசேரி சந்தையில் வியாபாரிகள், காவலர்கள் என 40 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிகக் காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அதில், ஈத்தாமொழியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததால், அவருக்கு சளி மாதிரிகள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வியாபாரிகளின் மாதிரிகள் சோதனை செய்துபார்த்தபோது 10 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து வடசேரி சந்தை மூடப்பட்டது. மேலும், சந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என  அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் போலீஸ், ஊர்க்காவல் படையினர்,  வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. போலீஸ் மற்றும் ஊர் காவல் படையினருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வடசேரி காவல் நிலையம் மூடப்பட்டது.

Also Read: கொரோனா: `கான்டாக்ட் ட்ரேஸிங்கில் செய்த தவறுகளே காரணம்’ - உலக சுகாதார நிறுவனம்

சென்னை கோயம்பேடு மார்க்கெட், சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதுபோல், வடசேரி சந்தை மூலம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கொரோனா பரவிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வியாபாரிகளிடம் மேலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், கொரோனா பதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. வடசேரி சந்தைக்கு வந்து சென்றவர்களின் பட்டியல் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மாநகராட்சியின் கண்காணிப்பு இல்லாததால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும், மாஸ்க் அணியாமலும் அதிகமாகக் கூடியதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

வடசேரியில் ஆய்வு செய்யும் நாகர்கோவில் மாநகர கமிஷனர் ஆஷா அஜித்

வடசேரி சந்தைக்கு சென்றுவந்த பொதுமக்கள் இப்போது கொரோனா பீதியில் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்த வடசேரி சந்தை வியாபாரிகள் தங்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தாலும் அவர்கள் 14 நாள்கள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 324 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் என குமரி மாவட்டத்தில் மொத்தம் 327 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 613 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்றுபேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/40-tested-corona-positive-related-to-vadasery-market-in-nagercoil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக