சமூக ஆர்வலர்
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், செல்வராஜ் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (42). இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்தார். இவரின் மனைவி சங்கீதா. இந்தத் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. மகேந்திரன், அந்தப் பகுதியில் சமூக சேவையிலும் ஈடுபட்டுவந்தார். நேற்று மாலை மகேந்திரன், வீட்டின் முன் ஒரு ஆட்டோவில் தண்ணீர் கேனை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது 4 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டினர். அதிர்ச்சியடைந்த மகேந்திரன், அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகில் உள்ள மளிகைக் கடைக்குள் தஞ்சம் புகுந்தார். ஆனாலும், விடாமல் துரத்திச் சென்ற அந்தக் கும்பல் கடைக்குள் வைத்தே மகேந்திரனை வெட்டி கொலை செய்தது. மகேந்திரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்கு திரண்டனர். பொதுமக்கள் கூடியதும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
கொலை
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மகேந்திரனை மீட்ட பொதுமக்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்தச் சம்பவம் குறித்த திருநின்றவூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை சம்பவம் குறித்து விசாரித்தனர். மருத்துவமனையில் மகேந்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினர்.
இதையடுத்து, மகேந்திரனின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரித்தபோது மகேந்திரன் கொலைக்கான காரணம் தெரியவந்தது. சமூக சேவையில் ஈடுபட்டு வந்த மகேந்திரன், தவறுகளைத் தட்டிக்கேட்டதாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read: தஞ்சாவூர் அதிர்ச்சி: டாஸ்மாக் கடை வாசலில் இறைச்சிக் கடைக்காரர் வெட்டிக் கொலை!
இதுகுறித்து திருநின்றவூர் போலீஸார் கூறுகையில், ``டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவந்த மகேந்திரன், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துவந்துள்ளார். அவ்வப்போது சமூகசேவையில் ஈடுபட்டுவந்த மகேந்திரன், தான் குடியிருந்த இடத்தில் தவறு செய்தவர்களைத் துணிச்சலாகத் தட்டிக்கேட்டு வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மகேந்திரன், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞரையும் கண்டிதுள்ளார். அப்போது இளைஞர் தரப்பினருக்கும் மகேந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.
Also Read: சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை
இதுதொடர்பான புகாரில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகேந்திரனால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள், அவரைப் பழிவாங்க காத்திருந்துள்ளனர். அதன்படி தனியாக நின்றுகொண்டிருந்த மகேந்திரனை வம்புக்கு இழுத்த இளைஞர்கள் அவரை வெட்டி கொலை செய்துள்ளனர். மகேந்திரனைக் கொலை செய்த இளைஞர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.
மகேந்திரன் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்ட தகவலைக் கேட்டு அங்கு வந்த அவரின் மனைவி கதறித் துடித்தார். பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன் ஓட ஓட சமூக சேவகர் விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநின்றவூர் செல்வராஜ் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/chennai-social-activists-murdered-in-thiruninravur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக