Ad

புதன், 8 ஜூலை, 2020

கராத்தே தியாகராஜனின் அறிக்கைப் போரில் ஸ்டாலினுக்கு நெருக்கடி!

அ.தி.மு.க தரப்பு ஒருபுறம் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க, மற்றொருபுறம் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜனும் அறிக்கை போர்க்களத்தில் இறங்கியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் துறையில் பணி முறைகேடு தொடர்பாக இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கைவிட்டார். அதற்கு வேலுமணி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தி.மு.க முதன்மைச் செயலாளர் நேரு ``கொரோனாவிலும் கொள்ளையடித்து தன் கஜானாவை நிரப்பிக்கொள்ளும் இழிபிறவியான வேலுமணிக்கு எங்கள் தலைவர் பற்றி விமர்சிக்க எந்த துப்பும் இல்லை... அருகதையும் இல்லை” என்று கடுமையாக வேலுமணியை சாடி அறிக்கை வெளியிட்டார். இது அ.தி.மு.க தலைமையைக் கடுமையாகச் சூடாக்கியிருக்கிறது. இந்த அறிக்கை குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் வேலுமணி அதன்பிறகு அமைச்சர் உதயகுமார் மூலம் பதில் அறிக்கை விட முடிவு செய்துள்ளனர்.

அந்த அறிக்கையை உதயகுமார் ஒப்புதலோடு நமது அம்மா ஆசிரியர் மருது அழகு ராஜை தயார் செய்யச் சொல்லியதாக கூறப்படுகிறது. புதன்கிழமை மாலை பதினோரு பக்க அளவில் வெளியான அந்த அறிக்கை, கடுமையான குற்றச்சாட்டுகளை தி.மு.க மீதும் அதன் தலைவர் ஸ்டாலின் மீதும் வைத்திருந்தது. அந்த அறிக்கையில், `400 கோடி அளவில் டியூஷன் வாத்தியார் வைத்திருக்கும் உலக அறிவாளி ஸ்டாலின்' என்று அறிக்கையின் ஆரம்பத்திலே கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் முதலமைச்சரின் மகன் என்பதைப் பயன்படுத்திக்கொண்டு எழுபதுகளிலே கூர்க்காவை தாக்கிவிட்டு, காவல்நிலையத்துக்குப் பிடித்துச் செல்லப்பட்டவர்'' என்றும் விமர்சித்துள்ளார். இத்துடன் இங்கு குறிப்பிட இயலாத அளவுக்கு தரம்தாழ்ந்த வார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆர்.பி. உதயகுமார்

அதேபோல், ``உத்தரவு போட்ட எசமானுக்காக வெறிபிடித்துக் குரைத்திருக்கும் கே.என்.நேரு தரம் தாழ்ந்த அறிக்கைகளை விடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்'' என்று நேருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிக்கை வெளியானதும் தி.மு.க தரப்பும் கடுமையான கோபத்தில் இருக்கிறது. தரம் தாழ்ந்து தலைவரையும், தலைவர் குடும்பத்தையும் இந்த அறிக்கையில் விமர்சித்திருக்கிறார்கள் என்று பதிலடி கொடுக்க தி.மு.க காத்திருந்த நேரத்தில் அடுத்த சிக்கல் கராத்தே தியாகராஜன் வடிவில் தி.மு.கவுக்கு வந்துள்ளது.

சென்னை முன்னாள் மாநகரத் தந்தையும் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான கராத்தே தியாகராஜன், உதயகுமார் அறிக்கை வந்த அடுத்த சில மணிநேரத்தில் தனது பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சென்னை மாநகரத் தந்தையாக ஸ்டாலின் இருந்தபோது அவரது நடவடிக்கை சட்டத்தை மீறி எந்த அளவுக்கு இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில், ``சென்னை மாநகராட்சியின் முதன்மைப் பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையகத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி எப்படி நியமித்தார்? என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நியமனத்துக்கு தமிழக அரசாணை பெறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நியமனத்துக்கு ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கேட்டுள்ளார்.

கராத்தே தியாகராஜன்

ஸ்டாலின் மாநகரத்தந்தையாக இருந்தபோது அவரது நெருங்கிய நண்பரான ராஜா சங்கர் என்பவரை ``மேயருக்கான சிறப்பு அதிகாரி - பாலங்கள்“ என்ற புதிய பதவியை உருவாக்கி நியமித்தார். அந்த நியமனத்திற்கு எந்த அரசாணையும் கிடையாது. ஸ்டாலின் தலைமையில் இரண்டு மன்ற உறுப்பினர்களுடன் இருந்த நியமன குழு மட்டுமே அதற்கு ஒப்புதல் வழங்கியது. ஆனால் ராஜா சங்கர் மாநகரத்தந்தைக்கு இணையான அந்தஸ்தில் இருந்தார். டெண்டர் முதல் அனைத்து பணிகளுக்கும் மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும் இவரிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்று சர்வ வல்லமையான பதவியை எப்படி வழங்கினார்கள். இதற்கு எந்த வகையான விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று ஸ்டாலின் சொன்னால் நல்லது” என்று முடித்துள்ளார்

தி.மு.க ஆட்சியில் அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது அரசின் அனுமதி இல்லாமலே வெளிநாட்டுக்குச் சென்றார் என்று சில மாதங்களுக்கு முன்பாக ஒரு அறிக்கை விட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார் கராத்தே தியாகராஜன். காங்கிரஸ் கட்சியிலிருந்தபோதே தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான மனநிலையிலிருந்த கராத்தே தியாகராஜன் இப்போது நேரடியாக ஸ்டாலினை எதிர்த்து அறிக்கை போர் நடத்துவதை அ.தி.மு.கவும் ரசிக்க ஆரம்பித்துள்ளது.

ஸ்டாலின், கராத்தே தியாகராஜன்

ரஜினிக்கு நெருக்கமான நபராக வலம்வரும் கராத்தே தியாகராஜன் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க பல்வேறு திட்டங்களை வகுத்துவருகிறார். அதன் வெளிப்பாடுதான் ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வருவது என்கிறார்கள். ஒரே நாளில் அடுத்தடுத்த அறிக்கை தாக்குதலால் அப்செட்டாகியுள்ளதாம் தி.மு.க தலைமை.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-and-karate-thiagarajan-simultaneously-target-mk-stalin-via-statements

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக