Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

`இந்திய மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டது குற்றம்!’- சர்வதேச நீதிமன்றம்

கேரள மாநிலம், கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே, இந்திய கடல் எல்லைக்குட்பட்ட அரபிக்கடல் பகுதியில், கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரடி என்பவருக்குச் சொந்தமான செயின்ட் ஆண்டனி  விசைப்படகில் 11 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில், `என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர், மீன்பிடிப் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையைச் சேர்ந்த அஜீஸ்பிங்க், கேரளாவில் வசித்துவந்த குமரி மாவட்டத்தின் ராஜாக்கமங்கலம் துறையைச்  சேர்ந்த ஜெலஸ்டின்  ஆகிய இருவரும் மரணமடைந்தனர். அந்த துப்பாக்கிச் சூட்டில், படகில் இருந்த ஒன்பது மீனவர்கள் காயமடைந்தனர்.

இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கரையிலிருந்து 22 கடல் மைல் தூரத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததால், இந்திய கடலோரக் காவல் படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்தது. மேலும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலி கப்பலின் மாலுமிகளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகியோர் மீது, கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடலோர காவல் குழுமத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகியோரிடம் கொச்சியில் வைத்து விசாரணை நடைபெற்றது. இந்தியாவின் கடல் எல்லை 21 கடல் மைல் மட்டும்தான். ஆகவே, இந்த துப்பாக்கிச்சூடு வழக்கை இந்தியாவுக்கு விசாரிக்க அதிகாரமில்லை என கேரள மாநிலம் எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனுத்தாக்கல் செய்தது. எர்ணாகுளம் நீதிமன்றமோ, இந்தியாவின் கடல் எல்லை 200 கடல்மைல் வரை உள்ளது என்று இத்தாலியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இறந்த குமரி மீனவர் அஜீஸ்பிங்க்

அதன்பின், இத்தாலி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இத்தாலி அரசு நெதர்லாந்து நாட்டில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தை நாடி, இந்த துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்க இந்தியாவுக்கு அதிகாரம் இல்லை, அவர்களது கடல் இல்லை 21 கடல் மைல் மட்டுமே என்று வாதிட்டது. இந்திய அரசு, 200 கடல் மைல் வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல்பகுதி. ஆகவே, இவ்வழக்கை விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என வாதிட்டது.

இதையடுத்து, சர்வதேச நீதிமன்றம் 200 நாட்டிக்கல் மைல் வரை இந்தியாவின் சிறப்புப் பொருளாதார கடல்பகுதி என உறுதி செய்ததுடன், இந்தியாவின் கடலுக்குள் நுழைந்து இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டது குற்றம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. அதேநேரம், இத்தாலி மாலுமிகளுக்குத் தண்டனை விதிக்க முடியாது எனவும் சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், கொல்லப்பட்ட மீனவர்களுக்கும் காயம்பட்ட மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டை இந்திய அரசு, இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தேவைப்பட்டால் ஒரு வருடத்துக்குள் இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடினால், இழப்பீடு இத்தாலி அரசிடமிருந்து பெற்றுக் கொடுக்கப்படும் அல்லது வழக்கு முடிந்ததாகக் கருதப்படும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில்

இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கூறுகையில், ``2012-ம் ஆண்டு, இத்தாலி அரசுப் படைவீரர்களால் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு தலா நூறு கோடி ரூபாய் இழப்பீடும், காயம்பட்ட ஒன்பது மீனவர்களுக்கு தலா பத்து கோடி ரூபாய் இழப்பீடும் பெற்றுக்கொடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இத்தாலி அரசிடம் இழப்பீடு கோரி, இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அந்த பேச்சுவார்த்தையின்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, உரிய நிவாரணத்தை காலதாமதமின்றி மீனவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/india/italy-marines-have-immunity-in-india-world-court-in-indian-fishermen-shooting-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக