Ad

வியாழன், 23 ஜூலை, 2020

`அலட்சியத்தால் அதிகரிக்கும் மரணங்கள்?’ - அமெரிக்காவை எச்சரிக்கும் 150 பேர்

உலகிலேயே கொரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்கின்படி நேற்று வரை அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,28,741ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,44,072 ஆகவும் உயர்ந்துள்ளது. எனவே, அமெரிக்காவில் மீண்டும் கடுமையான ஊரடங்கு அறிவித்து மக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்க வேண்டும் எனப் பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்கா

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், அறிவியலாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என 150-க்கும் அதிகமானவர் அமெரிக்காவில் மீண்டும் ஊரடங்கு பிறபிக்க வேண்டும் என்றும் கொரோனா பரவலின் வீரியம் குறித்தும் ஒரு கடிதம் எழுதி அதில் அனைவரும் கையெழுத்திட்டு, அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசால் முடிந்த வரை விரைவில் ஊரடங்கைத் திரும்பப் பெறக் கூடாது இதுதான் நம் நாட்டுக்கு மிகச் சிறந்த விஷயமாக இருக்கும். இதனால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

Also Read: கொரோனா: `நிமிடத்துக்கு 43 பேர்; மணிக்கு 2,600 பேர்!’ - பாதிப்பால் திணறும் அமெரிக்கா

இப்போதே கொரோனாவுக்கு நம் மக்கள் பலரை பலிகொடுத்துவிட்டோம். இதே நிலை தொடர்ந்தால் வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் அமெரிக்காவைச் சேர்ந்த 2 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பார்கள். நம் நாட்டின் பல மாகாணங்களில் மக்கள் மதுக்கடைகளுக்குச் செல்கின்றனர், முடி வெட்டிக்கொள்கின்றனர், உணவகத்துக்குச் சாப்பிட செல்கின்றனர், பச்சை குத்திக் கொள்கின்றனர், மசாஜ் செய்கின்றனர். இவை அனைத்துமே அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள். எனவே இவற்றைத் தடுத்து பார்சல் உணவுப் பொருள்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.

அமெரிக்கா

அமெரிக்காவில் இந்த ஆண்டு நிகழ்ந்த மரணங்களுக்கு கோவிட் 19 தான் முதல் காரணமாக உள்ளது. பல மாகாணங்களில் அதிகமாக பாசிட்டிவ் வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பொருளாதாரத்தையும் நாட்டையும் பாதுகாப்பாக மீண்டும் திறப்பதற்கான ஒரே வழி வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி பொதுசுகாதார வல்லுநர்கள் மிகவும் அவசியமானதாகக் கருதும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ள அனைவரையும் சோதிக்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள பாசிட்டிவ் நோயாளிகளின் தொடர்பு தடமறிதலை அதிகப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். அத்தியாவசியமற்ற அனைத்து வணிக நடவடிக்கைகளையும் மூட வேண்டும். மருந்து அல்லது உணவுப் பொருள்கள் வாங்க மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டும். எல்லா சூழ்நிலைகளிலும் மக்கள் முகமூடி அணிவதைக் கட்டாயப்படுத்த வேண்டும். அரசு இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் இதன் விளைவு வைரஸ் பரவலின் துன்பத்திலும் அதிகரிக்கும் மரணங்களிலும் எதிரொலிக்கும்” என அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா: `சீனாவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றுமா?’ - அதிபர் ட்ரம்ப் பதில்



source https://www.vikatan.com/news/international/150-medical-experts-signed-a-letter-urging-leaders-to-shut-down-the-country

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக