கிராமங்களை அடிப்படையாகக் கொண்டது தேனி மாவட்டம். கடந்த மாதம் 24-ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அப்போதும் சரி, மாநில ஊரடங்கு அமலில் இருக்கும் இப்போதும் சரி, கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இதனால், சமீபகாலமாகத் தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதாகவும், கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் சமூக ஆர்வலகர்கள்.
அவர்கள் கூறும் போது, ``கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நேரத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் எல்லைகளை, கிராம மக்கள் அடைத்தனர். வெளி ஆட்கள் உள்ளே வரக்கூடாது என்றும், உள்ளூர் ஆட்கள் வெளியே செல்லக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்தனர். ஏதாவது அவசரத் தேவைக்காக வெளியே சென்றுவிட்டு வந்தால், மஞ்சள் வேப்பிலை கலந்த தண்ணீரால் கை, கால்களை கழுவிய பின்னரே ஊருக்குள் அனுமதித்தனர். அதனால், கிராமங்களில் பாதிப்பு இல்லாத நிலை இருந்தது.
Also Read: `அது எங்களிடம் இல்லை' -கொரோனா செலவினம்; தமிழக சுகாதாரத்துறையின் அதிர்ச்சி பதில்
ஆனால், சமீபகாலமாக கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. இதனால், கிராமப்புற மக்கள், அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கம்பம், ஆண்டிபட்டி ஆகிய நகரங்களை அடுத்துள்ள கிராமங்களில் தொற்று பரவி வருகிறது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நகராட்சிப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துவது போல, கிராமங்களையும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும்” என்றனர்.
இதையடுத்து, நம்மிடம் பேசிய கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர், “கிராமங்களில் கடந்த 1-ம் தேதி முதல் கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 7-ம் தேதி வரை ஒவ்வொரு கிராமமாக முகாம் அமைத்து, கிராமத்தில் உள்ள முதியவர்கள், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இருதயநோய் உள்ள நபர்களுக்கு சோதனை செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுவருகிறது. கோவிட் கேர் சென்டர் உத்தமபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாகக் கம்பத்தில் அமைக்கப்பட உள்ளது. இப்படி தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது” என்றார்.
Also Read: தேனி:`வனத்துறை செய்வது கொஞ்சம்கூட சரியில்லை!' -கொதிக்கும் மேகமலை விவசாயிகள்
தேனி மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று ஒரேநாளில் 126 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டே நாள்களில் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தொடும் எனக் கூறப்படுகிறது.
source https://www.vikatan.com/news/tamilnadu/corona-virus-spread-in-theni-villages
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக