கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம்தொட்டு வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,173 ஆக உள்ளது. இந்த நிலையில் பெங்களூரு, ஹனுமந்த் நகரைச் சேர்ந்த 65 வயதான முதியவர் ஒருவருக்குக் கடந்த சில நாள்களாக கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன. இதற்காக எடுக்கப்பட்ட சோதனை முடிவு நேற்று காலை கிடைத்துள்ளது. அதில் அவருக்கு பாசிட்டிவ் எனத் தெரியவந்துள்ளது.
அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதும், குடும்பத்தினர் ஆம்புலன்ஸை வரவழைக்க காலை முதல் முயற்சி செய்தனர். கடைசியில் மாலை 4 மணிக்கு வருவதாக ஆம்புலன்ஸ் தரப்பினர் கூறியுள்ளனர். தங்கள் வீட்டு வாசலுக்கு ஆம்புலன்ஸ் வந்தால் அக்கம்பக்கத்தினர் பயப்படுவார்கள் என்பதால் வீட்டின் தெருமுனையில் ஆம்புலன்ஸைக் காத்திருக்கச் சொல்லியுள்ளனர். 4 மணிக்கு தெருமுனைக்கு ஆம்புலன்ஸ் வருவதால் முதியவரைச் சிறிது தூரம் நடக்கவைத்து அழைத்து வந்தனர். நடக்கத் தொடங்கிய அவர், அடுத்த சில நிமிடங்களில் சாலையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை சாலையின் ஓரத்தில் வைத்துக்கொண்டு, மொத்த குடும்பமும் ஆம்புலன்ஸ் வருகைக்காகக் காத்திருந்துள்ளது. மாலை 4 மணிக்கு வருவதாகக் கூறிய ஆம்புலன்ஸ் இரவு 7 மணிக்குத்தான் வந்துள்ளது. அதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடல் சாலையிலேயே கிடத்தப்பட்டிருந்தது. முதியவர் வீதியில் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெங்களூரு மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள அக்கம்பக்கத்தினர், “காலை முதல் ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்காக முதியவர் குடும்பத்தினர் போராடினர். ஆனால், மாலை வரை எந்த ஆம்புலன்ஸும் கிடைக்கவில்லை. ஆட்டோவிலாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என நினைத்தனர். அந்த நேரத்தில் வேறு எந்த வாகனமும் கிடைக்கவில்லை. இறுதியாக மாலை 7 மணிக்குத்தான் ஆம்புலன்ஸ் வந்தது. அதற்குள் முதியவர் சாலையில் விழுந்து உயிரிழந்துவிட்டார்” என வேதனையுடன் கூறியுள்ளனர்.
Also Read: கொரோனா:`துணைப் பதிவாளருக்குத் தொற்று!’ - மூடப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், “முதியவரின் வீட்டு வாசலுக்கு ஆம்புலன்ஸ் வர வேண்டாம் எனத் தெரிவித்துவிட்டனர். அதனால் அவரது வீட்டிலிருந்து 40 அடி தொலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. அவர் நடந்து வரும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த அந்த முதியவர் அதிர்ச்சியுடனும் பதற்றத்துடனும் இருந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அவரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
பிறகு, ஆம்புலன்ஸ் வந்ததும் இறந்த முதியவரின் உடல் விக்டோரியா மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ``இந்த விவகாரத்தில் எங்கு தவறு நடந்தது என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்" என பெங்களூரு கமிஷனர் அனில் குமார் கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/65-years-old-bengaluru-man-with-covid-19-dies-on-road
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக