Ad

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

``இந்த அப்பாவிச் சிறுமி என்ன செய்தாள்?” - பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலில் சோகம்

பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையே பல காலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு நாடுகளுக்கிடையில் அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களும் நடைபெறும். இந்த நிலையில் இஸ்ரேல் திடீரென பாலாஸ்தீனம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு மீது நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில், 5 வயது சிறுமி உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் 5 வயது சிறுமியும் உயிரிழந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாத்தா, தன்னுடைய பேத்தியின் மரணம் குறித்து கண்ணீர் ததும்பக் கேள்வியெழுப்பியிருக்கிறார். `மிடில் ஈஸ்ட் ஐ’ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், அந்தச் சிறுமியை அடக்கம் செய்ய அவளை ஒரு வெள்ளைத்துணியில் சுற்றியிருந்தனர். அப்போது அந்தச் சிறுமியின் தாத்தா, ``அவள் நர்சரிக்குச் செல்ல வேண்டுமென்று கனவு கண்டாள். அவளுக்கு ஒரு பை மற்றும் துணி வேண்டும். இந்த அப்பாவிச் சிறுமி என்ன செய்தாள்... அவள் என்ன ராக்கெட்டுகளின் பொறுப்பாளராக இருந்தாளா அல்லது சண்டையிட்டாளா?” எனக் கண்ணீருடன் கேட்டார். ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மேலும் இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல், `போராளிகளை குறிவைத்துத்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது' எனத் தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/5-year-old-girl-dead-by-israels-air-missile-attack-on-palestine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக