Ad

புதன், 1 ஜூலை, 2020

ப்ளாஸ்மா தெரபி கொரோனா சிகிச்சையில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? #VikatanExplainer

இந்தியாவில், கோவிட்-19 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் `ப்ளாஸ்மா தெரபி' எனும் உயிர்காக்கும் சிகிச்சை முறையைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு, பூரண குணமடைந்தவர்களின் உடலில் உள்ள ப்ளாஸ்மாவில் ஆன்டிபாடிகள் இருக்கும். அதை எடுத்து, நோய் பாதித்துள்ளவர்களின் உடலில் செலுத்தும்போது, அந்த ஆன்டிபாடிகள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி அழிக்கும். இதுதான் ப்ளாஸ்மா தெரபி.

corona (Representational Image)

ப்ளாஸ்மா தெரபி சிகிச்சையின்மூலம் பூரண குணம் கிட்டுவதால், உலக அளவில் இது கொரோனாவுக்கு எதிரான உயிர்காக்கும் சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து விளக்குகிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் நீரிழிவு நோய் மேலாண்மை துறைத் தலைவர் டாக்டர் தர்மராஜன்.

``கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், கொரோனாவுக்கு மருத்துவத்துறையில் பல்வேறு முறைகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. என்றாலும், அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற கேள்விக்கு விடை இல்லை.

டாக்டர் தர்மராஜன்

நாட்டில், நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இந்தச் சூழலில், நாம் மாற்று சிகிச்சை முறைகளை நாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தற்போது மேலை நாடுகளில், நோய்த்தொற்றுக் காலங்களில் மேற்கொள்ளப்படும் உயிர் காக்கும் ப்ளாஸ்மா சிகிச்சையை இப்போது நாமும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம்.

கேரள மாநிலத்தில் இந்த ப்ளாஸ்மா தெரபி, பல கொரோனா தொற்றாளர்கள் குணமடைய உதவியதை நாம் அறிவோம், தற்போது, தமிழகத்திலும் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.

ப்ளாஸ்மா சிகிச்சை முறையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுமையாகக் குணமடைந்த ஒரு நோயாளியின் உடலின் ப்ளாஸ்மாவில் உள்ள ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு அணுக்கள்) பிரித்தெடுக்கப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்று நோயாளிக்குச் செலுத்தப்படுகிறது. அது, பாதிக்கப்பட்ட நோயாளியின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கொரோனா வைரஸை அழிக்கிறது. இதன்மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நம்மால் குணப்படுத்த முடிகிறது.

plasma (Representational Image)

ஒருவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆன்டிபாடியால் குணமடைந்த ஒருவர், தானும் மற்றவருக்கு ப்ளாஸ்மா தானம் செய்யலாம். இது ஒரு தொடர் சிகிச்சை. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவந்த இந்த சிகிச்சைமுறை, பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, தற்போது இந்தியாவில் அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சிகிச்சைக்கான செலவு அதிகம் என்றாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களை இதன்மூலம் கொரோனாவின் பிடியிலிருந்து மீட்க முடியும்'' என்றவரிடம், ப்ளாஸ்மா தெரபி சிகிச்சையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நீரிழிவு நோயாளிகளின் ஆன்டிபாடிகளை சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாது என்றும், பயன்படுத்தலாம் என்றும் மருத்துவத்துறையில் மாறுபட்ட வாதங்கள் முன்வைக்கப்படுவது குறித்து கேட்டோம்.

Also Read: தவறான முறையில் எடுக்கப்படும் ஸ்வாப் டெஸ்ட்... பிரச்னைகளும் தீர்வுகளும்!

``இந்த ப்ளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு, கொரோனாவிலிருந்து பூரண குணம்பெற்ற யார் வேண்டுமானாலும் மற்றவரின் சிகிச்சைக்கு ப்ளாஸ்மா தானம் செய்யலாம். கொரோனாவிலிருந்து குணமடைந்த நீரிழிவு நோயாளிகள், மற்றவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை தானம் செய்யக்கூடாது என்பது தவறான கருத்து. தங்களின் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களின் உடலிலிருந்து ஆன்டிபாடிகளைத் தானம் செய்யலாம்.

Plasma treatment (Representational Image)

அதே நேரம், சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களின் நோய் எதிர்ப்பு அணுக்களுக்கு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி அவற்றை அழிக்கும் அளவுக்கு திறன் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகத்தான், மருத்துவர்கள் பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளை இந்த சிகிச்சைக்கு உட்படுத்துவதில்லை.

Also Read: `பதஞ்சலியின் Coronil-ல் கொரோனா என்ற வார்த்தையே இல்லை!' - தடைக்கான காரணம்

பொதுவாகவே, நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாதென்று ஒரு கருத்து பரவலாக இருந்துவருகிறது. அது முற்றிலும் தவறு. நீரிழிவு நோயாளிகள், ரத்த தானம் செய்யலாம் தவறில்லை. ஆனால், ரத்த தானம் செய்யும்போது அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல்தான் ப்ளாஸ்மா தெரபி சிகிச்சையிலும். நீரிழிவு நோயாளிகளும் தானம் செய்யலாம். ஆனால், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க வேண்டும். அப்போதுதான் அது மற்றவர்களுக்குப் பயன்படும்.

நீரிழிவு நோய் (Representational Image)

என்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைந்த நீரிழிவு நோய் இல்லாத ஆரோக்கியமான ஒரு நபரின் உடலிலிருந்து எடுக்கப்படும் ரத்த அணுக்கள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த அணுக்களைவிட, பல மடங்கு வீரியத்துடன் நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நாம் விரைவான மீண்டெழுதலை எதிர்நோக்கும் சூழலில், அவர்களின் ரத்த அணுக்களைவிட நல்ல ஆரோக்கியமான நபர்களின் ரத்த அணுக்களையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, கொரோனாவிலிருந்து குணமடைந்த 20 - 35 வயதினரின் ரத்த அணுக்களில், வீரியம் மிக்க நோய் எதிர்ப்பு அணுக்கள் இருக்கும் என்பதால், சிறப்பாகப் பலன் அளிக்கும். உயிரிழப்பைத் தடுக்கலாம்.

வரும் நாள்களில், ஒருவேளை நோய்ப்பரவல் மிகத் தீவிரமடைந்து இறப்பு விகிதம் அதிகரிக்கும் சூழலில், ப்ளாஸ்மா தெரபி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.



source https://www.vikatan.com/health/healthy/how-plasma-therapy-helps-patient-to-recover-from-covid-19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக