Ad

வியாழன், 16 ஜூலை, 2020

ஒரு காலத்துல ஒஹோன்னு வாழ்ந்தேன்; ஆனா இன்னைக்கு? - இப்படிக்கு தாத்தாவின் பீரோ #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஆளாளுக்கு எனக்கு இந்த பீரோ வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர் தாத்தாவின் 3 மகன்கள், 2 மகள்கள் உட்பட. இவர்கள் பேசுவதை அந்த பீரோ, வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. எல்லாம் துரு ஏறி இருக்கும், தன் நிலைதான் காரணம் என்று எண்ணியது. ஒரு இடத்தில் கூட சிறு பெயிண்ட் கூட இல்லை. 75 ஆண்டு வைரவிழா கண்ட பீரோ. இப்போ வரும் பீரோக்கள் எல்லாம் என்ன? இந்த பீரோ பக்கத்தில் நிற்க முடியுமா?

Representational Image

இரும்பு உலோகத்தால் கம்பீரமாக அரசன் போன்று நின்று கொண்டிருந்தது. குறைந்தது 20 பேர் சேர்ந்தால் தான் தூக்கமுடியும். அப்படி ஒரு கணம். அந்த 20 பேரும் தம் கட்டியபடி ``புடி...புடி விட்றாத" என்று பல்லைக் கடித்துக்கொண்டுதான் தூக்கவேண்டும். ``ஏலேலோ...ஐலசா! ஏலேலோ...ஐலசா" தான் பாடவேண்டும்; கணம் தெரியாமல் இருப்பதற்கு. ஆனால், இன்றைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு தெரியும் இந்தப் பாட்டு?

அப்படி பாடித்தான் 75 வருடத்திற்கு முன்பு இந்த பீரோவை வீட்டின் உள்ளே நிலைநாட்டினார்கள். அப்போது உள்ளவர்கள் இயற்கை முறையில் விளைந்த உணவுகளைச் சாப்பிட்டு வலிமை படைத்தவராக இருந்தனர்.தூக்கமுடிந்தது. ஆனால் இப்போது உள்ளவர்களின் வலிமை? அதற்கு பயந்தேதான் இப்பொழுது தாத்தாவின் மகன்கள், மகள்கள் எங்களுக்கு வேண்டாம் என்று ஒருவருக்கொருவர் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் விவாதத்தை அந்த துருப்பிடித்த பீரோ வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தது

75 வருடத்திற்கு முன்பு தாத்தா திருமணத்திற்கு மனைவி வீட்டில் குடுத்த சீதனம் தான் இந்த பீரோ. அப்பொழுது நல்ல பரவசமூட்டும் வண்ணங்களுடன் அழகாய், அற்புதமாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. மனைவி வீட்டில் அவர் அப்பா இந்த பீரோவை வாங்குவதற்கு கடை உரிமையாளரிடம் பெரும் பேரமே பேசவேண்டியிருந்தது. ஒரு வழியாக பேசி விலை மடிந்த சந்தோஷத்தில் பணத்தைக் கொடுத்தார். உரிமையாளர் அவரின் மகளை வாழ்த்தி பீரோவை ஒப்படைத்தார். இப்படி வந்த இந்த பீரோவின் நிலைதான் இன்று தலைகீழானது?

எதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் மவுசு இல்லை போலும். நம்மை யாராவது ஒரு குழந்தை போன்று தூக்கிச் செல்ல மாட்டார்களா என்று இன்றுவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது பீரோ.

Representational Image

தாத்தா இறந்து ஒரு வருடம் கடந்து விட்டது. இந்த ஒரு வருடமும் தாத்தா அரவணைப்பு இல்லாமல் ஒரு அனாதையாகத்தான் இருந்து வருகிறது. பின்னே 75 வருடம் பந்தம் தாத்தாவுக்கும் இந்த பீரோவுக்குமானது. தாத்தா தனது 98-வது வயதில் இந்த பீரோவை தனியாக விட்டுச் சென்றுவிட்டார். தாத்தா இருந்தவரை ஒரு குழந்தையைப் பேணிக்காப்பது போன்று பாதுகாத்து வந்தார். அந்தக் காலத்தில் இந்த பீரோவில் எங்கேயாவது பெயிண்ட் விட்டுப்போயிருந்தால் உடனே பதறியடித்துக்கொண்டு கடைக்கு சென்று பெயிண்ட் வாங்கி வந்து விடுபட்ட இடத்தில் எல்லாம் கோட்டிங் கொடுப்பார். அதைப்பார்த்து இந்நாள் இருக்கும் மகன்கள், மகள்கள் எல்லோரும் சந்தோசப்படுவர். ஆனால் இப்பொழுது "உனக்கு வேண்டாம், எனக்கு வேண்டாம் என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: ராமு தாத்தா: `காசு இல்லைனாலும் உட்காரவைச்சு சோறு போடுவாரு!’ - மரணத்தால் கலங்கும் மதுரை

இவர்கள் பால்யகாலத்தில் 'எனக்கு இந்த ரேக் தான் வேணும்... எனக்கு இந்த ரேக் தான் வேணும்! உனக்கு முன்னாடி நான்தான் பொறந்தேன்' என்று ஆளாளுக்கு போட்டிப் போட்டுக்கொண்டு மல்லு கட்டுவர். அப்புறம் வீட்டில் பஞ்சாயத்து கூட்டுவர். பின்னே 5 தங்கங்களையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவர வேண்டுமே. இப்படியெல்லாம் இந்த பீரோ அழகிய சண்டைகளை அன்போடு சந்திக்கும். சண்டை ஓய்ந்த பிறகு அவரவர் ரேக்கைச் சுத்தமாக வைத்து துணிமணிகளை அழகாய் மடித்து வைப்பர். துணிகள் மேல் பாசி உருண்டையை போட்டு வைப்பர் வாசத்திற்கும், பூச்சிகள் அண்டாமல் இருப்பதற்கும்.

Representational Image

ஆயுதபூஜை வந்தால் பீரோவை சுத்தமாக துடைத்து பொட்டு வைத்து அழகு பார்ப்பர். ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் எடுக்கும் புதுத்துணிகள், பிறந்தநாளுக்கு புதுத்துணிகள் என எல்லாவற்றையும் பாதுகாத்து வைப்பர். வேறு ஏதாவது விசேஷத்திற்கு போட்டுக்கொள்வதற்கு. அம்மா, அப்பா துணிகளுக்கு இடமிருக்காது. இவர்களின் துணிமணிகள் தான் ஆக்கிரமித்திருக்கும். காலப்போக்கில் மகன்கள், மகள்கள் திருமணம் ஆனவுடன் அப்புறம் தான் அம்மாவும், அப்பாவும் துணிகளை வைக்கலாயினர். பின்னால் மனைவியையும் 68-வது வயதில் காலன் கடத்திப்போக, பீரோவில் உள்ள பெயிண்ட் உரிவது போன்று தாத்தாவின் உடலில் தோளின் சுருக்கம் கூடிக்கொண்டே போனது.

பீரோ உணர்த்திய காலத்தின் படிப்பினை

தாத்தாவின் துணிகளை மட்டும் கடந்த வருடம் வரை தாங்கிக்கொண்டிருந்தது. தாத்தா இருந்திருந்தால் இந்த பீரோவுக்கு இந்த நிலை இன்று வந்திருக்குமா? விவாதம் நடைபெற்ற இடத்தில் ஒரு முடிவு எட்டப்பட்டது. தாத்தாவின் 2-வது மகன் பீரோவை எடுத்துக்கொள்வதாக கூறினார். பீரோ மகிழ்ச்சி கொண்டது. சபை கலைக்கப்பட்டது.

ஆனால் துரதிருஷ்டவசமாக பீரோ மீண்டும் தாத்தா வீட்டிலேயே தொடர்ந்து 3 மாதமாய் அனாதையாக கடந்து கொண்டிருந்தது. எப்பொழுது தூக்கிச் செல்வர்களோ என்று காத்து நிற்கிறது. அதற்கு விடிவுகாலம் தூக்க ஆள் கிடைக்காமல் போனதே?

Representational Image

வந்து பார்ப்பார்கள் முடிந்தளவு தம் கட்டுவார்கள் அப்புறம் மூச்சிறைத்து பயந்துபோய் மயக்கம் வராத குறையாக "ஆள விட்டா போதும்டா சாமி" என்று ஓடிவிடுவர். இப்படி தான் 3 மாதமும் கடந்து போனது. பின் ஒரு வழியாக ஒருநாள் ஆட்கள் எல்லோரும் செட் ஆகினர். அந்தக் காலத்தில் தூக்கியது போன்று 10 பேர் இல்லை.மொத்தம் 20 பேர்.அதற்கே வாயில் நுரை தள்ளியது. ஒரு வழியாக 2-வது மகன் வீட்டில் பீரோ சந்தோசமாய் வந்து சேர்ந்தது.

பேசியதைவிட சற்று கூடுதலாக வேலையாட்கள் பணம் கேட்டனர். 2-வது மகனும் அவர்கள் தூக்கி வந்த கஷ்டத்தைப் பார்த்து கேட்ட பணத்தைக் கொடுத்தார். இந்த பீரோவை வண்டியில் இருந்து இறக்கி வீட்டிற்குள்ளே தூக்கி போகும்போது தெருவில் உள்ள மக்கள் எல்லோரும் கூடிவிட்டனர்.

"ஆடுறா ராமா...ஆடுறா ராமா" என்று குட்டிக்கரணம் போடும் குரங்கு போல் இந்த வேடிக்கை பார்க்கும் கும்பலிடம் நம் நிலை ஆளாகிவிட்டதே என்று வருந்தியது பீரோ. எனினும் வருத்தத்தைத் தூக்கியெறிந்து விட்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் கொண்டது. "இத்தனை நாட்களாக தாத்தா இல்லாமல் அனாதையாக இருந்தோம்...இப்பொழுது மீண்டும் உறவு கிடைத்துள்ளதே" என்ற மகிழ்ச்சி.

பீரோவைப் பார்த்து 2-வது மகன் கல்லூரி போய்க்கொண்டிருக்கும் தன் மகள் ராஜஸ்ரீயிடம் அதன் பெருமைகளை எடுத்து கூறினார். பால்யகால நினைவலைகள் வந்தது. தன் ரேக்கை மகளிடம் காட்டினார். தீபாவளி, பொங்கல் துணிகளை எங்கு வைப்பேன் என்று காட்டி சிலாகித்துப் பேச ஆரம்பித்தார்.

Representational Image

பெரியப்பா, சித்தப்பா, அத்தைங்க எல்லாரும் எங்க வைப்பாங்க,எப்படி ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு கொண்டு ரேக்கை சுத்தமாக வைத்து கொள்வோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

இது எல்லாம் மகள் ராஜஸ்ரீயை வெகுவாக கவர்ந்தது. அவளுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தாத்தா விட்டுச் சென்ற இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணினாள். அதன்படி கல்லூரிக்குப் போய்வந்து படிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும், இரவு, பகல் பாராமல் இன்டர்நெட்டில் டிசைன்ஸ், கலர்ஸ் எல்லாம் பார்த்து, பார்த்து புதுப்பொலிவாக்கினாள். அவளின் தீவிர ஒன்றரை மாத உழைப்புக்குப் பின் அழகாய், அற்புதமாய் காட்சி தந்தது அந்த துருப்பிடித்த பீரோ.

பேத்தியின் மூலமாய் இன்று இன்றைய பீரோக்களுக்கு சவால் விடும் அளவுக்கு மிளிர்ந்து கொண்டிருந்தது. ராஜஸ்ரீயின் அப்பாவுடன் பிறந்த உடன் பிறப்புகள், அவர்களின் பிள்ளைகள் என எல்லோரும் வந்து பார்த்து அதிசயித்து போயினர். உடன்பிறப்புகள் எல்லோரும் "நாங்க சின்ன வயசுல பாத்த மாதிரி அழகா இருக்கு, இல்லை... இல்லை அதவிடவே சூப்பரா இருக்கு என்று அவளைப் பாராட்டினர்.

Representational Image

ராஜஸ்ரீ அவளின் தோழிகளுக்கு தாத்தா பீரோவை பழையநிலையில் இருந்ததையும், இப்போது பொலிவுபெற்றதையும் வாட்சாப்பில் அனுப்பினாள். தோழிகள் மெய்சிலிர்த்தனர். உடனே தோழிகள் பீரோவின் வரலாறுடன் அதன் போட்டோவை சமூகவலைத்தளங்களில் பகிர படு வைரலானது.

பீரோவின் போட்டோவை அவரவர் முகப்புத்தகத்திலும், வாட்சாப்பிலும் ப்ரோபைலாக வைத்தனர். ட்விட்டரிலும் ட்ரெண்டிங்கில் ஆனது. தன்னை உலகமே பார்த்து சந்தோசப்படுவதப் எண்ணி மகிழ்ந்தது பீரோ.

இல்லை... தாத்தா பீரோ மகிழ்ந்தது.

- செந்தில் வேலாயுதம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-grand-fathers-bureau

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக