நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இளம் சிறார் நீதிமன்றக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் நீதிபதியாக பாக்கியராஜ் இருந்து வருகிறார். குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்கள், இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, பின்னர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
சிறார்களைப் பராமரிக்க தேவையான தொகையை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மூலம், இளம் சிறார் நீதிமன்ற குழுமம் பெற்று வருகிறது. இந்த மையத்தில் பணியாற்றிவரும் பெண் தட்டச்சர் ஒருவர், நீதிபதியின் கையெழுத்தை போலியாகப் போட்டு பண மோசடியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, மாவட்டக் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சாந்தகுமாரி காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: Corona Live Updates: சாத்தான்குளம்: எஸ்.எஸ்.ஐ பால்துரை, 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா!
ஆனால், இந்தக் குழுவில் உள்ள மற்றொரு பெண் உறுப்பினரே காசோலையில் கையொப்பம் போட்டுவிட்டு தற்போது மறுப்பதாகவும் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் தட்டச்சர் கூறுகையில்,``ஒன்பது மாதத்துக்கான நிலுவைத் தொகையே 99,000 ரூபாய்தான். ஆனால், நான் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொகையை போலி கையெழுத்திட்டு மோசடி செய்ததாக திசை திருப்புகின்றனர். ஆனால், இந்தக் குழுவில் உள்ள மற்றொரு பெண் வழக்கறிஞர் ஒருவர், போலியாகக் காசோலையில் கையெழுத்து போட்டுவிட்டு தற்போது நாடகமாடி வருகிறார். இதுகுறித்து உண்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
போலி கையெழுத்து சர்ச்சை குறித்து காவல்துறையினர் கூறுகையில்,``1 லட்ச ரூபாய்க்கான காசோலையில் நீதிபதியின் கையெழுத்துப் போட்டு, பணம் பெற முயன்றுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், முதல்கட்ட விசாரணையில் நீதிபதி இந்தக் கையெழுத்தை போடவில்லை எனத் தெரியவந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணையை துவக்கியுள்ளோம் " என்கின்றனர்.
ஊட்டியில் நீதிபதி ஒருவரின் கையொப்பம், போலியாக போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/fake-signature-issue-in-ooty-juvenile-justice-board
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக