கொரோனா ஊரடங்கு காரணமாக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் அங்கு காய்கறி வியாபாரம் நடைபெற்று வந்தது. நூற்றுக்கும் அதிகமான கடைகள் இருந்த அந்தப் பகுதியில் சிலருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது.
கொரோனா பாதிப்பு காரணமாக பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதனால் அந்தப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
Also Read: `அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்!’ - ஊட்டியைப் பதறவைத்த நள்ளிரவு தீ விபத்து
பேருந்து நிலையத்தின் உள்ளே ஏடிஎம் மையங்கள் இயங்கி வந்தன. அங்கிருந்த இந்தியன் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் திடீரென தீப்பற்றியது. கொழுந்துவிட்டு எரிந்த தீயைக் கண்டு அங்கு பணியில் இருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பதறினார்கள்.
தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரம் எரிந்து சேதம் அடைந்தது. பின்னர் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
தீ விபத்து காரணமாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய்கள் எரிந்து சேதமடைந்திருக்கக் கூடும் என்பதால் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வந்த பின்னரே சேதத்தின் மதிப்பு தெரியவரும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
பற்றி எரிந்த தீயின் காரணமாக பேருந்து நிலையத்தின் உள்ளே புகை மூட்டமாகக் காட்சியளித்தது. சுவர்களிலும் கரும்புகையால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அதைச் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
source https://www.vikatan.com/news/accident/fire-breaks-out-in-atm-center-in-nellai-bus-stand
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக