Ad

செவ்வாய், 7 ஜூலை, 2020

விழுப்புரம்:`புள்ளைங்களைப் பார்க்காம இருக்க முடியல!’- அதிர்ச்சி கொடுத்த கொரோனா நோயாளி

1,233 பேருக்கு கொரோனா:

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1,233 கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. அதில் 797 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மற்றவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வழுதுரெட்டியில் உள்ள ஹெச்.எம்.சி.ஏ சுகாதார வளாகத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை

சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்திருக்கும் தென்கோடிப்பாக்கத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கூலித் தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கடந்த 22-ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மனைவி, குழந்தைகளுடன் தூக்கம்:

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அந்த நபர் மருத்துவமனையில் இருந்து மாயமானார். அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவர்களும் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். அதனைத் தொடர்ந்து, மாவட்டம் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களில் சல்லடையாக அலசினர் சுகாதாரப் பணியாளர்களும், காவல்துறையினரும்.

கொரோனா

ஒரு வேளை அந்த நபர் தனது வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்று நினைத்த காவல்துறை தலைமை, கிளியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து அவரது வீட்டிற்குச் சென்று பார்க்கும்படி உத்தரவிட்டது. அதன்படி போலீஸ் நள்ளிரவு அந்த நபரின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

’பொண்டாட்டி புள்ளைங்களை பார்க்காம இருக்க முடியல’

உடனே அவரை வளைத்துப் பிடித்த போலீஸார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றது ஏன் என்று கேட்ட போலீஸாரிடம், “பொண்டாட்டி புள்ளைங்களை பார்க்காம இருக்க முடியல. மனசு ரொம்ப பாரமா இருந்துச்சி. அதான் என் ஃபிரண்டு கிட்ட வண்டி கேட்டேன். அந்த வண்டியில வீட்டுக்குப் போயி பொண்டாட்டி குழந்தைங்க கூட பேசிட்டு, சாப்பிட்டு தூங்கிட்டேன்” என்று கூறி மிரள வைத்திருக்கிறார். தொடர்ந்து அந்த நபருக்கு அறிவுரை வழங்கிய சுகாதாரத்துறை அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில்தான் நேற்று மதியம் மீண்டும் அந்த நபர் மருத்துவமனையில் இருந்து மாயமானார். அதனால் மீண்டும் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தது மருத்துவமனை நிர்வாகம்.

Also Read: `டி.ஜி.பி உங்க லைனுக்கு வருவார்!' -போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி

அதையடுத்து மீண்டும் அந்த நபரின் வீட்டுக்குச் சென்று போலீஸார் சோதனையிட்டனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டையைத் துவக்கியிருக்கிறது போலீஸ். அதேசமயம் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தினால்தான் இரண்டாவது முறை கொரோனா நோயாளி தப்பிச் சென்றிருக்கிறார் என்று புலம்பி வருகின்றனர் விழுப்புரம் மாவட்ட போலீஸார்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/corona-patient-escaped-from-hospital-to-meet-his-family-in-villupuram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக