Ad

செவ்வாய், 7 ஜூலை, 2020

கொரோனா: `62 முறை டயாலிசிஸ்!’ கைவிடப்பட்டவரைக் காப்பாற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர், கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் இவர், இதுவரையிலும் 62 முறை டயாலிஸிஸ் செய்து கொண்டுள்ளார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளச் சென்றபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால், தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று கைவிரித்துவிட்டனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை

தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் செய்வதறியாது தவித்தவர்கள், புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தனர். சிகிச்சைக்காக, அந்த இளைஞர் ராணியார் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனாவிற்கான மருத்துவச் சிகிச்சையுடன், புதிய டயாலிசிஸ் மிஷின் வரவழைக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாகச் சிகிச்சை பெற்று வந்தவர், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

Also Read: விழுப்புரம்:`புள்ளைங்களைப் பார்க்காம இருக்க முடியல!’- அதிர்ச்சி கொடுத்த கொரோனா நோயாளி

இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ``டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொண்டு வரும் இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைத்தோம். கொரோனா நோயாளிக்காகவே, பிரத்யேகமாக டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் வகையிலான அமைப்பை ராணியார் மருத்துவமனையில் ஏற்படுத்தியுள்ளோம். கடந்த 10 நாள்களில் அந்த இளைஞருக்கு 2 முறை டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கொரோனா சிகிச்சையும் அளித்துள்ளோம். தற்போது அந்த இளைஞர் பூரண குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தில் டயாலிஸிஸ் சிகிச்சை, கொரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முதல் நபர் இந்த இளைஞர்தான். டாக்டர்கள், செவிலியர்களின் முழு முயற்சியால் சாத்தியமாகியிருக்கிறது" என்றார்.

இளைஞர்

Also Read: `நான் வெளிய வந்துட்டேன்; வந்து கூட்டிட்டுப் போ!’ - கோவையைப் பதறவைத்த கொரோனா நோயாளி

குணமடைந்த இளைஞரிடம் கேட்டபோது, ``நாங்கள் விவசாயக் கூலி குடும்பம்தான். எப்படியாவது எனக்குச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பா பலரிடம் கடன் பெற்று, 5 லட்சம் வரையிலும் தனியார் மருத்துவமனையில் செலவு செய்தார். மதுரையில் தொடர்ந்து சிகிச்சைக் கொடுக்க முடியாதென்று சொன்னபோது, ரொம்பவே கஷ்டப்பட்டோம். என்ன செய்வதென்று தெரியாத நேரத்தில்தான் புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அதற்கப்புறம் எந்த கஷ்டமும் இல்லை. மருத்துவர்கள் சிறப்பாகவே சிகிச்சை அளிச்சாங்க. குறிப்பாக, ரொம்பவே ஆறுதல் கொடுத்தாங்க. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை என்னைக்கும் மறக்க மாட்டேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/pudukottai-government-doctors-saved-youth-with-corona-and-dialysis-problem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக