மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள். குறுவை சாகுபடிக்கான நடவுப் பணிகளே இன்னும் நிறைவடையாத நிலையில், இப்பொழுதே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இனிவரும் நாள்களில் பாசனத்திற்கு தண்ணிர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை சமாளிக்க, தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு, கர்நாடகம், சட்டப்படி தர வேண்டிய காவிரிநீரை பெற தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனக் காவிரி உரிமை மீட்புக்குழு உறுப்பினர் பெ.மணியரசன் வலியுறுத்துகிறார்.
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய அவர், ``மேட்டூர் அணையில் காவிரியின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. டெல்டா குறுவை பாசனத்திற்கு ஒரு நாளைக்கு 1.25 டி.எம்.சி. அளவுக்குத் தண்ணீர் இப்பொழுது திறந்துவிடப்படுகிறது. இதுவும் கடைமடைப் பகுதிக்கு போய்ச் சேரவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. மேட்டூர் அணையில் இப்பொழுதுள்ள நீர் மட்டம் 84.3 அடி. நீரின் அளவு 46.45. டி.எம்.சி. குறுவை நடவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. இன்னும் 65 நாள்களுக்கு குறுவைக்குத் தண்ணீர் தேவைப்படும். இப்பொழுதுள்ள நீரின் வரத்தும், மேட்டூர் அணையில் உள்ள நீரின் இருப்பும் இதே விகிதத்தில் குறைந்து வந்தால், குறுவை சாகுபடியைக் காப்பாற்ற முடியாத அவலம் ஏற்படும் நிலை உள்ளது.
Also Read: மண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்!
ஜூன் மாதத்திலிருந்து கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கு, தமிழ்நாடு அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. ஜூன் மாதம் 9.23 டி.எம்.சி-யும், ஜூலை முதல் வாரத்தில் 7.84 டி,எம்,சி-யும், இரண்டாவது வாரத்தில் 7.84 டி..எம்.சி-யும் என மொத்தம் 24.91 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்தான், இந்த ஆண்டு, மேட்டூர் அணையில் ஜூன் மாதம் 100 அடி தண்ணீர் தேங்கியிருந்தது. மேட்டூர் அணையின் நீரை மரபுப்படி ஜூன் 12-ம் தேதி, முதலமைச்சரே வந்து திறந்துவிட்டார். அதில் காட்டிய பேரார்வத்திற்குப் பிறகு, ஜூன், ஜூலைக்குரிய தண்ணீரைப் பெறுவதில் அக்கறை காட்டப்பட்டதாகத் தெரியவில்லை.
கடந்த 11.06.2020 அன்று காணொலிக்காட்சி வழி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் முடிவில், ஜூன், ஜூலை மாதங்களுக்குரிய தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிட்டிருப்பதாக ஆணையத் தலைவர் ஆர்.கே. ஜெயின் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் கூடுதல் பொறுப்பாக தலைமை வகிக்கும் அதிகாரிகள், 2018-லிருந்து ஒவ்வொரு கூட்டத்திலும் இவ்வாறு, `கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறார்கள்’. ஆனால், ஒருதடவை கூட கர்நாடக அரசு அதை செயல்படுத்தியதில்லை. இப்போதும் செயல்படுத்தவில்லை. முந்தைய ஆண்டில் கர்நாடகம் மிகையாகத் திறந்துவிட்ட வெள்ள நீரை, அதற்கு அடுத்த ஆண்டு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீர்க் கணக்கில் சேர்க்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம், தனது ஆணையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
Also Read: கடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி?
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையையும் குறுவை சாகுபடியையும் நினைவில் வைத்திருக்கிறாரா என்ற ஐயம் ஏற்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்துடனும், கர்நாடக அரசிடமும் தொடர்பு கொண்டு, சட்டப்படி ஜூன், ஜூலைக்குத் திறக்க வேண்டிய தண்ணீரைப் பெற்று குறுவை சாகுபடியைக் காப்பாற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/tn-government-should-ask-karnataka-over-cauvery-water-share-of-june-july-urges-farmers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக