தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கோவையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் கோவையில் ஒரு நீதிபதி, பெண் காவலர், டாஸ்மாக் ஊழியர் உட்பட 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 25 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Also Read: கொரோனா: `100 ஆண்டுகளில் முதல்முறை; 6 வார லாக்டௌன்’ - 2-ம் அலையின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா
இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், மருத்துவமனையில் இருந்துத் தப்பி வெளியேறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் சிறுநீரக சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, அவர் நேற்று மாலை இ.எஸ்.ஐ மருத்துவமனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே வந்துவிட்டார். வெளியே வந்தவுடன், தன் மகனுக்கு போன் செய்து, `நான் ஆஸ்பத்திரில இருந்து வெளிய வந்துட்டேன். வந்து என்ன கூட்டிட்டு போ’ என்று கூறியுள்ளார்.
Also Read: பன்றிக்காய்ச்சல் பாதையில் கொரோனா! - 13 மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை...
இதையடுத்து, அந்த நபரின் மகன் ஆத்மா அறக்கட்டளைக்கு அழைத்து, `எனது தந்தை யாருக்கும் தெரியாமல் வெளியே வந்துவிட்டார். நீங்கள் இருக்கும் பகுதியில்தான் உள்ளார்’ எனக் கூறி, அவரின் புகைப்படத்தை அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து, சிங்காநல்லூர் போலீஸாருடன் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் அந்த நபரை தேடினார்கள். ஒருவழியாக, அவரைக் கண்டுபிடித்து, இஎஸ் ஐ மருத்துவ மனைக்கு தகவல் தெரிவித்தனர்.
பிறகு, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் அமர்ந்திருந்த இடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-corona-patient-escapes-from-esi-hospital
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக