மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் அமைந்துள்ளது தாராவி. இது ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கிருக்கும் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியபோது, அது தாராவியையும் விட்டுவைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தாராவியில், முதல் பாசிட்டிவ் கேஸ் உறுதியானது. இது மும்பை மாநகராட்சிக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொரோனாவின் தடுப்பு நடவடிக்கையாக முதலில் கூறப்படுவது சமூக இடைவெளிதான். ஆனால், தாராவியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கடினம். மேலும், அங்குள்ள மக்களுக்கு முறையான கழிவறை வசதிகள் இல்லாததும், பெரும் சவாலான விஷயமாகப் பார்க்கப்பட்டது. தாராவியில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், அங்கு எளிதில் வைரஸ் பரவிவிடும் என மும்பை மாநகராட்சி அஞ்சியது. அவர்கள் எண்ணியதை போலவே ஏப்ரல் இறுதிக்குள் தாராவியைச் சேர்ந்த 400-க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அடுத்த ஒரு மாதத்தில் அதாவது மே மாதம் இறுதிக்குள் அங்கு வைரஸ் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது. 50-க்கும் அதிகமான உயிரிழப்புகள் நிகழ்ந்திருந்தன. தாராவி, கொரோனாவுக்கு எதிரான மும்பையின் போராட்டத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதப்பட்டது. ஆனால், இவை அனைத்தையும் மாற்றி கொரோனா பரவலைத் தடுத்து சாதித்துக் காட்டியுள்ளனர் தாராவி மக்கள். நேற்று அங்கு ஒரே ஒரு பாசிட்டிவ் கேஸ் மட்டுமே பதிவாகியுள்ளது, இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியமாகியுள்ளது. இதனால், தாராவி மக்களும் மும்பை மாநகராட்சியும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மிகவும் எளிதாக இது நிகழ்ந்துவிடவில்லை, மும்பை மாநகராட்சியின் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளும் தாராவி மக்களின் முழு ஒத்துழைப்புமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தாராவியில் கொரோனா பரவல் அதிகமானவுடனேயே, அந்தப் பகுதி முழுமையாகத் தடை செய்யப்பட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவர்கள் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அங்கு கொரோனா தடுப்புக்கு 4T என்ற நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
Also Read: கொரோனா: தப்பிக்குமா தாராவி... தமிழர்கள் நிலை என்னவாகும்? - எச்சரிக்கையில் மும்பை மாநகராட்சி!
டிரேசிங் (tracing) - தொற்று பாதையைக் கண்டறிவது, டெஸ்டிங் (Testing) - பரிசோதனை மேற்கொள்வது. ட்ராக்கிங் (tracking) - தொற்றுக்குள்ளானவர்களைக் கண்காணிப்பது. ட்ரீட்மென்ட் (Treatment) - சிகிச்சையளிப்பது ஆகிய முறை செயல்படுத்தப்பட்டது. முதியோர்கள், ஏற்கெனவே நோய் உள்ளவர்கள் முன்கூட்டியே சோதனை செய்யப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். அறிகுறி இல்லாமல் வைரஸ் உறுதியானவர்கள், லேசான பாதிப்பு இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்க ராஜீவ் காந்தி விளையாட்டு மைதானம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
தாராவியில் வீடு வீடாகச் சென்று சோதனை செய்யப்பட்டதால் ஆரம்பத்திலேயே தொற்று கண்டுபிடிக்கப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 2,335 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 80-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,734 பேர் வைரஸில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 352 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில்தான், அங்கு நேற்று ஒருவருக்கு மட்டும் கொரோனா உறுதியாகியுள்ளது.
Also Read: `தாராவியிலிருந்து நெல்லைக்கு..!' - கொரோனா அச்சத்தால் மும்பையைவிட்டு வெளியேறும் தமிழர்கள்?
source https://www.vikatan.com/news/india/mumbais-dharavi-reports-only-one-positive-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக