உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சமீபத்தில் நடத்த 8 போலீஸாரின் கொலை சம்பவம் மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைத்தது. கான்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமானவர் ரவுடி விகாஸ் தூபே. இவர் மீது 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கொலை முயச்சி வழக்குத் தொடர்பாக போலீஸார் தன்னை கைது செய்ய வருவதை முன்னரே அறிந்த ரவுடி தூபே, கான்பூரில் தான் மறைந்திருக்கும் கிராமத்துக்குள் நுழையும் வழியெல்லாம் தடுப்புகளை அமைத்துள்ளார், அதையும் மீறி கிராமத்துக்குள் சென்ற காவலர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.
ரவுடி தூபேவால் கொல்லப்பட்ட காவலர்களுக்குச் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அனைவரது உடலிலிருந்தும் போலீஸார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ரவுடி விகாஸ் தூபேவையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய 25 சிறப்புப் படைகளை அமைத்துள்ளது உத்தரப்பிரதேச காவல்துறை. இவர்களின் தொடர் விசாரணையில் தூபே தொடர்பான பல விஷயங்கள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
Also Read: உ.பி கொடூரம்: `நள்ளிரவில் திடீர் தாக்குதல்’ -8 காவலர்களை சுட்டுக்கொன்ற ரவுடிகள்
இதற்கிடையில் இரு நாள்களுக்கு முன்னர் விகாஸ் தூபேவின் கூட்டாளிகளில் ஒருவராக தயா சங்கர் அக்னிஹோத்ரி என்பவரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையில், தூபேவை கைது செய்யத் தனிப்படை விரைகிறது என்ற தகவலை சௌபேர்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலரே ரவுடிக்கு தெரியப்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் சௌபேர்பூர் காவல்நிலையம் உயர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, ரவுடிக்கு தகவல் தெரிவித்த வினய் தூபே என்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ரவுடி விகாஸ் தூபேவையும் அவரது கூட்டாளிகளையும் தேடும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரவுடி தூபேவுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான அமர் தூபேவை இன்று அதிகாலை, சிறப்புப் படை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுள்ளனர். 8 போலீஸார் கொலை செய்யப்பட்ட வழக்கில் விகாஸ் தூபேவுக்கு அடுத்த இடத்திலிருந்த அமர் தூபேதான் தற்போது என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.
Also Read: உ.பி போலீஸார் கொலை: `ரவுடிக்கு வந்த போன்கால்’ - அதிர்ச்சி கொடுத்த வாக்குமூலம்
அமர் தூபே, விகாஸ் தூபேவின் வலது கையாகவும் நிழலாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அமர் தூபே, எப்போதும் ஆயுதங்களுடன் இருப்பார் அவர்தான் விகாஸ் தூபேவின் காவலராகவும் 8 போலீஸார் கொலை சம்பவத்துக்கு மூளையாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர் தூபே இருக்கும் இடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ. 25,000 சன்மானம் வழங்கப்படும் எனத் தனிப்படை போலீஸார் முன்னதாக அறிவித்திருந்தனர். அப்படி கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர், ஹிமாசலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள அர்தரா என்ற கிராமத்தில் மறைந்திருப்பதாகத் தனிப்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அம்மாநில போலீஸாரின் உதவியுடன் நேற்று நள்ளிரவு அந்த கிராமத்துக்குள் நுழைந்த உ.பி தனிப்படை போலீஸார், அமர் தூபேவை சுற்றி வளைத்துள்ளனர். அப்போது ரவுடி அமர், போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க தன்னிடம் இருந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் காவலர்கள் ரவுடி அமர் மீது என்கவுன்டர் செய்துள்ளனர். ரவுடிக்கும் காவலர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிஸ் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.
இது பற்றி பேசியுள்ள உ.பியின் ஏ.டிஜி.பி பிரஷாந்த் குமார், ``ரவுடி விகாஸ் தூபேவின் நெருங்கிய கூட்டாளி அமர் தூபே சிறப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவர் மறைந்திருந்த இடத்திலிருந்து தானியங்கி துப்பாக்கி மற்றும் பேக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தடயவியல் அதிகாரிகள் அதைச் சோதனை செய்து வருகின்றனர். ரவுடி விகாஸ் தூபேவை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர் பிடிபடும் வரை சிறப்புப் படை ஓய்வெடுக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.
source https://www.vikatan.com/news/india/vikas-dubeys-closest-aide-shot-dead-by-up-special-task-force
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக