Ad

புதன், 8 ஜூலை, 2020

கொரோனா: சினிமா தியேட்டர் டு மீன் வியாபாரம்! - குடும்பத்தைக் காக்க போராடும் ஊழியர்கள்

கொரோனாவால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தஞ்சாவூரில் தியேட்டரில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு சம்பளம் கிடைக்காத நிலையில், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் சாலையோரத்தில் மீன் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சினிமா தியேட்டரில் மாரியப்பன்

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக அனைத்து திரையரங்கங்களும் மூடப்பட்டு 100 நாள்களை கடந்துவிட்டன. `தியேட்டரில் 100 நாள்கள் படங்கள் ஓடி பார்த்திருக்கிறோம். ஆனால், தியேட்டர் மூடி 100 நாள்கள் ஆனதை இப்பதான் பார்க்கிறோம்’ என சமூக வலைதளங்களில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது குறித்து மீம்ஸ் வெளியாகி வைரலானது.

நடிகர்கள் விஜய் நடித்த மாஸ்டர், சூர்யாவின் சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸுக்கு தயாரக இருந்த நிலையிலும் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறது. இதனால், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவிற்காக நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை.

மீன் வியாபாரம்

இந்நிலையில், தியேட்டர்கள் மூடப்பட்டதால் வருமானத்தை இழந்த அதன் உரிமையாளர்கள் தியேட்டரில் வேலை செய்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். பெரும்பாலான தியேட்டர்களில், அதில் பணி புரிந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை.இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தற்காலிகமாக வேறு வேலைகளையும் செய்துகொண்டிருக்கின்றனர். இதே போல் தஞ்சாவூரில் சினிமா தியேட்டரில் வேலை செய்த நான்கு பேர் தற்போது மீன் வியாபாரம் செய்துகொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து தியேட்டர் ஒன்றில் வேலை செய்த மாரியப்பன் (50) என்பவரிடம் பேசினோம்.``எனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். நான் 30 வருடத்திற்கு மேலாக சினிமா தியேட்டரில் டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறேன். ஒரு படம் வந்து நல்லா ஓடினா, அதன் நடிகர், தயாரிப்பாளரை விட நாங்கதான் ரொம்ப சந்தோஷம் அடைவோம்.

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால் மீன் கடை

விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால், படம் நல்லாயிருக்கு என எல்லோரிடமும் சொல்வோம். ஏன் என்றால் படத்தை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளது என்பதை உணர்ந்ததால் மவுத் டாக்கிற்காக இப்படி சொல்வோம்.

Also Read: நாகை: 100 நாள் வேலைத்திட்டம்; மண் அள்ளும் ஆசிரியர்கள்! - ஊரடங்கு அதிர்ச்சி

சினிமா தியேட்டரைத் தவிர வேறு எந்த வேலையும் எனக்கு தெரியாது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் 3 மாதத்திற்கு மேலாக தியேட்டர் மூடப்பட்டதால் சம்பளம் வருவதில்லை.அதான் வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டபடுகிற நிலை ஏற்பட்டது. ஏதோ ஒரு வேலைக்குச் சென்றால்தான், வீட்டில் அடுப்பெரிகிற நிலைக்குத் தள்ளப்பட்டேன். சினிமாவில் கதாநாயர்கள் ஒரு கஷ்டம் என்றால் உடனே ஓடிச் சென்று உதவி செய்வார்கள்.

தியேட்டர் ஊழியர்

அது போல் யாராவது பெரிய நடிகர்கள் தியேட்டரில் வேலை செய்த ஊழியர்களின் நிலையை அறிந்து நிஜத்தில் உதவ மாட்டார்களா என மனது கிடந்து தவித்தது. இதையடுத்து மொத்த விலைக்கு மீன்கள் வாங்கி அதனை சாலையோரத்தில் வைத்து விற்கத் தொடங்கினேன். மீன் விற்பனையில் ஓரளவிற்கு வருமானம் கிடைத்தது. என்னைப் பார்த்து என்னுடன் பணிபுரிந்த சைமன், கணேசன், மற்றொரு தியேட்டரில் உதவி மேலாளராக இருந்த ராஜா ஆகியோரும் மீன் விற்க வந்தனர்.

Also Read: ``எதிரிக்குக்கூட என் நிலைமை வரக்கூடாது...''- கண்ணீர்விடும் தொழிலாளி! | Emotional

சாலையில் நின்றுகொண்டு மீன் விற்பது முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது பின்னர் பழகிவிட்டது. தற்போதுள்ள நிலைமையில் தீபாவளிக்குத்தான் தியேட்டர்கள் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதுவரை எங்களுக்கு இந்த மீன் வியாபாரம் தான் எங்களுக்கு கைகொடுக்கப்போகிறது. எங்க குடும்பங்களை காக்கப்போகிறது’’ என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-theater-employees-sell-fish-due-to-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக