Ad

புதன், 8 ஜூலை, 2020

`இரவில் துன்புறுத்தல்; ரத்தக் கறை!’ - சாத்தான்குளம் பாணி சர்ச்சையில் துறையூர் போலீஸ்

துறையூரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றவரை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மறைக்க போலீஸார் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

போலீஸாரால் தாக்கப்பட்ட ரகுநாத்

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கொல்லம்பட்டியைச் சேர்ந்தவர் ரகுநாத். கேரளாவில் பணிபுரிந்து வந்த இவர், கொரோனா ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊர் திரும்பியுள்ளார். கடந்த ஜூன் 5-ம் தேதி வியாபாரிகளை மிரட்டியதாக ரகுநாத்தை துறையூர் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். காவல்நிலையத்தில் வைத்து அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அடி தாங்க முடியாமல் துடித்த ரகுநாத், காவல்நிலையத்திலிருந்த கொசுமருந்து பாட்டிலை எடுத்துக் குடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், ரகுநாத்துக்கு உப்பு சோப்பு கலந்த கரைசலைக் கொடுத்து வாந்தி எடுக்க வைத்துள்ளனர்.

Also Read: சாத்தான்குளம்: `ஒரு வருஷம் படிப்பு இருக்கு சார்!’ விசாரணையில் கலங்கிய தன்னார்வலர்கள்

பின்னர், ரகுநாதன் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால், தனியார் மருத்துவமனைக்கு ரகுநாத்தை அழைத்துச் சென்றுள்ளனர் காவல்துறையினர். இது வெளியில் தெரியாமல் இருக்க அவசர அவசரமாக மருத்துவர்களிடம் அறிக்கை பெற்றுக்கொண்டு நீதிபதியிடம் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று கையெழுத்து பெற்று சிறையில் அடைத்துள்ளனர்.

போலீஸாரால் தாக்கப்பட்ட ரகுநாத்.

சிறையிலிருந்து வெளியே வந்தவர் முதல்வர் தனிப்பிரிவுக்கும், மனித உரிமை ஆணையத்திற்குத் தகவல் புகார் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ரகுநாத்திடம் பேசினோம்.``ஜூன் 5-ம் தேதி வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவு 2 மணியளவில் துறையூர் போலீஸார், என்னை எழுப்பி காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் காலை இன்ஸ்பெக்டர் குருநாதன் என்னைக் கண்மூடித்தனமாக அடித்தார்.

Also Read: சாத்தான்குளம்: பென்னிக்ஸ் கையில் சிக்கிய செல்போன் ஆதாரம்? - பின்னணியில் முக்கியப் பிரமுகர்?

அடி தாங்க முடியாமல் காவல்நிலையத்திலிருந்த ஆல்அவுட் பாட்டிலை எடுத்து குடிச்சிட்டேன். சிகிச்சைக்குப் பிறகு துறையூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். முன்னிறுத்துவதற்கு முன்பு, `நீதிபதிகிட்ட போலீஸ்காரங்க அடிச்சாங்களான்னு கேட்டாங்கன்னா, இல்லன்னு சொல்லணும்’ என்று போலீஸார் மிரட்டினார்கள். `உண்மையை சொன்னா உன் மேலேயும் உன் குடும்பத்துல உள்ளவங்க மேலேயும் குண்டாஸ் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டினார்கள். அடிக்குப் பயந்து பொய் சொன்னோன். இன்று வரையிலும் என்னால் உட்கார முடியவில்லை" என்று வேதனையுடன் கூறினார்.

போலீஸார் அடித்ததில் காயம்

இதுகுறித்து துறையூர் காவல்நிலையத்தில் தொடர்புகொண்டு பேசினோம். ``ரகுநாத் சாதி சங்கத்தில் இருந்துகொண்டு கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து வியாபாரிகளை மிரட்டியதாகப் புகார் வந்தது. அதனால், வழக்குப்பதிவு செய்து விசாரித்தோம். மற்றபடி ரகுநாத் சொல்வது பொய்" என்று முடித்துக்கொண்டனர்.

டி.ஐ.ஜி ஆனி விஜயா

இதுகுறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் பேசினோம். ``இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, அதன் பிறகு நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று முடித்துக்கொண்டார். சாத்தான்குளம் சர்ச்சையைத் தொடர்ந்து தற்போது துறையூர் போலீஸார் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/thuraiyur-police-tortured-me-alleges-youth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக