புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ராணியார் அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தற்போது 200-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கும், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கும் இடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்வதில் கடும் சிரமம் இருந்து வந்தது.
இந்தச் சிரமத்தைப் போக்குவதற்காக, காவல்துறையினர் தாங்கள் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகளை அரசு மருத்துவமனைக்கு வழங்கி அசத்தியுள்ளனர். மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் நான்கு வாக்கி டாக்கிகளையும், மருத்துவக் கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரத்திடம் கொடுத்தார். தற்போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளுடன் வாக்கி டாக்கியில் உரையாடி வருகின்றனர். நோயாளிகளின் உடல் நிலை குறித்த தகவல்கள் செவிலியர்கள் மூலம் மருத்துவர்களுக்கு உடனுக்குடன் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கின்றன.
Also Read: கொரோனா தொற்று... வேலைக்குச் செல்வோர் கவனத்துக்கு
இதுபற்றி மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ``இந்த வாக்கி டாக்கிகள் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகளுக்கிடையேயான தொடர்பு மேம்படும். நோயாளி கூற விரும்பும் தகவல் எளிதில், மருத்துவரைச் சென்றடையும். நோயாளிகளின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி.
குறிப்பாக, நோயாளிகள் வாக்கி டாக்கிகளைத் தொடாமல் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலேயே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/walkie-talkie-introduced-in-pudukottai-government-hospital-to-communicate-with-patients
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக