Ad

திங்கள், 6 ஜூலை, 2020

பூ பூக்கும் ஓசையும் கேட்கிறது என்ற சீடனுக்கு குருவின் பதில்! - தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

`வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ என்பது அப்பர் பெருமான் திருவாக்கு. வாழ்க்கையை விட்டு அஞ்சி ஓடிய மக்களை நெறிப்படுத்த மணிவாக்காய் இந்தத் திருவாக்கைச் சொன்னார் அப்பர் பெருமான். இன்று நாம் சந்திக்கும் எவரிடமும் நலமா... என்று கேட்டால் `ஏதோ இருக்கிறேன், ஏதோ பிழைக்கிறேன்' என்றுதான் பதில் வரும். யாரும் நான் வாழ்கிறேன் என்று கூறுவதில்லை. வாழத்தானே வாழ்க்கை!

இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை. வாழ்க்கையின் எல்லா நலன்களையும் பொத்தான்களை (ரிமோட்) இயக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நிகழும் நிகழ்வை ஏற்றுக்கொண்டு எதிர்கொண்டு, வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

பொன்னம்பல அடிகளார்

எல்லாவற்றிலும் இயைந்தும் இசைந்தும் வாழ்வதே வாழ்க்கை. நம் வாழ்வைத் தவற விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதே பழி போடுகிறோம். மகாபாரதத்தில் ஒரு காட்சி.

போர் முடிந்து பஞ்ச பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு கண்ணபிரான் துவாரகைக்குத் திரும்ப யத்தனிக்கிறான். அப்போது கண்ணனிடம் குந்தி ஒரு வரம் கேட்கிறாள்.

``கண்ணா, என் வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் நீங்காமல் தொடர்ந்து வர வேண்டும்!" என்று வேண்டுகிறாள். கண்ணன் அதிர்ந்து போகிறான்.

``அத்தை, நீ பட்ட கஷ்டங்கள் போதாதா! எந்த ஒரு பெண்ணும் தாங்க முடியாத கஷ்டங்கள் பட்டாயே... இன்னுமா துயரங்கள் உன்னைத் துரத்த வேண்டும்" என்றான்.

``கண்ணா, எனக்குக் கஷ்டங்கள் வரும்போதெல்லாம் நான் யாரை எண்ணினேன்... யாரிடம் வேண்டினேன்... எனக்குத் துன்பம் என்றபோதெல்லாம் நீ ஓடோடி வந்தாய். என் துயர்துடைத்துக் காத்தாய். நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும். அதற்கு எனக்குக் கஷ்டங்கள் வர வேண்டும்” என்று விளக்கமளித்தாள் குந்தி.

மனக்கவலைகள் நீங்க மகேசன் அருள் நீடிக்க வேண்டும். மகேசன் அருள் கிடைத்தால் எல்லோருமே எப்போதுமே இன்புற்றிருக்கலாம்.

கிருஷ்ணர்

வாழ்க்கையே சலித்துப் போய்விட்டது என்று குறைபட்டுக் கொண்டிருந்த சீடனிடம் குரு ஒரு தேர்வு வைத்தார்.

``அருகிலிருக்கும் காட்டுக்குச் சென்று அங்கு நடைபெறும் அத்தனை நிகழ்வையும் பார்த்துவிட்டு வா!" என்றார்.

சீடனும் சென்று வந்தான். அங்கு என்ன பார்த்தாய் என்றதும், ``புலியின் உறுமலைக் கேட்டேன்; யானையின் பிளிறலைக் கேட்டேன்; சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டேன்” என்றான். இரண்டாம் முறை காட்டுக்கு அனுப்பி வைத்தார் குரு. இம்முறை

``பறவைகளின் ஒலியைக் கேட்டேன்; குரங்குகளின் சேட்டை ஒலி கேட்டேன்" என்றான். மூன்றாம் முறை வண்டுகளின் ரீங்கார ஒலியைக் கேட்டதாகக் கூறியதும் மீண்டும் மீண்டும் காட்டுக்குப் போய் கவனித்து வரச் சொன்னார் குருநாதர். நீண்ட நாள்களுக்குப் பிறகு திரும்பிய சீடன் அமைதியாக இருந்தான். குருநாதர் என்ன கேட்டாய் என்றதும்,

``ஆச்சர்யம் குருவே, என்னால் ஒரு பூ பூக்கும் ஓசையைக் கூடத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. எங்கும் ஓர் இன்பத்தின் நாதம் இருப்பதை உணர முடிகிறது” என்றான். அதற்கு குருநாதர் ``நீ தேர்ச்சி பெற்றுவிட்டாய்" என்று பாராட்டினார்.

ஜென் துறவி

நல்ல எண்ணங்களால் வாழ்க்கையை நிறைத்தால், குறைவில்லா நிறைவாய் குவலயம் போற்றும் வாழ்க்கை மலரும். அத்தகைய வாழ்க்கையை நாளும் வாழ்வோமாக. ஒவ்வொரு மனிதரும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலையை இந்த உலகம் கட்டாயம் பெறும் என்பது உறுதி.

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

சக்திவிகடன் வழங்கும் ஆன்மிக மாலை

வரும் 10.7.2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6 மணிக்கு சக்தி விகடன் ஆன்மிக மாலை என்னும் அருள் நிகழ்ச்சி ஒன்றை நேரலையாய் வழங்க இருக்கிறது. இந்த ஆன்மிக மாலை நிகழ்வில் `எல்லோரும் இன்புற்றிருக்க...’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். ஆன்மிக மாலை நிகழ்வில் அடிகளாரின் அருளுரையோடு ஆலய தரிசனமும் இடம்பெறக் காத்திருக்கிறது.

ஆன்மிக மாலை

ஆன்மிக மாலையில் அடிகளாரின் அருளாசிக்குப் பிறகு `திருமாந்துறை உச்சிஷ்டகணபதி’ ஆலய தரிசனத்தையும் அந்த ஆலயத்தின் சிறப்புகளையும் காணவிருக்கிறோம்.

விகடன் வாசகர்கள் தவறாமல் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு குருவருளும் திருவருளும் பெறுமாறு வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சென்று அதில் உள்ள படிவத்தை நிரப்பி நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

https://ift.tt/3f9dc0T


source https://www.vikatan.com/spiritual/news/thavathiru-kundrakudi-ponnambala-adigalar-explains-meaning-of-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக