Ad

திங்கள், 6 ஜூலை, 2020

"கொசுக் கடிச்சாகூட சொறிய முடியாது; சாகடிச்சுடுங்கனு அழுவேன்!"- லிங்கசெல்வியின் நம்பிக்கைக் கதை

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்தவர் லிங்கசெல்வி. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வணிகர் சங்க நிர்வாகியான இவரின் கணவர், சங்க நிகழ்ச்சிக்கான மெட்டல் பேனர் ஒன்றைத் தனது வீட்டில் பொருத்திக்கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாகச் சரிந்த பேனர், மின்சாரக் கம்பியில் மோதி, பால்கனி தடுப்புக் கம்பியில் உரசி மின்கம்பியில்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கே நின்றுகொண்டிருந்த லிங்கசெல்வியின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அந்தப் பெரிய விபத்தில் உயிர் தப்பியவருக்கு, இரண்டு கைகளும் நீக்கப்பட்டன. நம்பிக்கையுடன் போராடியவர், கேரளாவில் சிகிச்சை பெற்று ஓர் ஆணின் கைகளைத் தானமாகப் பெற்றுள்ளார். அந்த விபத்தால் முடங்கிப்போன அந்தக் குடும்பத்தில், லிங்கசெல்வியின் மகிழ்ச்சியால் தற்போதுதான் இயல்புநிலை திரும்பிவருகிறது.
லிங்கசெல்வி

ஒரு லாக்டெளன் பொழுதில் லிங்கசெல்வியைச் சந்தித்தோம். கைகளுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டே நிதானமாகப் பேசினார்.

“நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் படிப்புதான் முடிச்சிருக்கோம். எங்க வீட்டுக்குக் கீழே கூல் டிரிங்ஸ் கடை நடத்திவந்தோம். நடுத்தரக் குடும்பம். வாழ்க்கை நல்லா போயிட்டிருந்துச்சு. இந்த நிலையிலதான், நாலு வருஷத்துக்கு முன்னாடி அந்த மின்விபத்து நடந்துச்சு. என் கைகள் ரெண்டும் நீக்கப்பட்டு ஆஸ்பத்திரியில இருந்த காலங்கள் ரொம்பவே கொடுமையானது. பின்னர் கை இல்லாத வாழ்க்கையை என்னால ஏத்துக்கவே முடியலை. கொசு கடிச்ச இடத்தைத் தடவிவிடக்கூட இன்னொருத்தர் உதவி தேவை. எனக்கும், என்னால் பிறருக்கும் சிரமம். தினமும் வேதனைதான்.

கணவருடன் லிங்கசெல்வி

கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சவுடனே சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரிச்சோம். அங்கே கை மாற்று சிகிச்சைக்கான ஆரம்பக்கட்ட பணிகள்தான் நடந்துட்டு இருந்துச்சு. பிறகு, கேரளாவுல இந்த ஆபரேஷன் வெற்றிகரமா செய்யப்பட்டிருக்குன்னு தெரிஞ்சுது. அடுத்த சில நாள்கள்லயே கேரளாவிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அப்போ எனக்குச் சர்க்கரை பாதிப்பு இருந்துச்சு. 'ஆபரேஷன் செய்ய முடியுமா?’ன்னு கேட்டோம். ‘நிச்சயமா முடியும். ஆனா, விபத்து நடந்து ஒரு வருஷத்துக்குப் பிறகுதான் ஆபரேஷன் செய்ய முடியும்’னு ஆஸ்பத்திரியில சொன்னாங்க. சின்ன ஏமாற்றமா இருந்தாலும், அங்கிருந்து வரும்போது புது வாழ்க்கைக்கான நம்பிக்கை எங்களுக்கு அதிகமாச்சு” என்கிறார் லிங்கசெல்வி.

மனைவிக்கு மீண்டும் கைகள் கிடைக்கப் போராடிய லிங்கேஸ்வரன் நெகிழ்ச்சியாகப் பேசினார். “அந்த விபத்துக்குப் பிறகு மனைவி நடக்க முடியாம பெட்லதான் இருந்தாங்க. பல மாதங்களுக்குப் பிறகுதான் நடக்கப் பயிற்சி கொடுத்து தானா நடக்க வெச்சோம். அந்த மின் விபத்துல மனைவியின் தலை உச்சியில் துளை ஏற்பட்டு பெரிய காயம் ஏற்பட்டது. அதை சரிசெய்ய சிகிச்சை நடந்துச்சு. ஆனா, அந்த இடத்துல மண்டை ஓடு தெரிகிற மாதிரி தோல் பகுதி முழுமையா இல்லாமதான் இருந்துச்சு. அதனால மீண்டும் ஆபரேஷன் நடந்துச்சு. அதன் பிறகுதான் என் மனைவி முடியை வளர்த்தாங்க.

மின் விபத்துக்கு முன்பு லிங்கசெல்வி

விபத்து நடந்து ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் கேரளாவிலுள்ள அந்த ஆஸ்பத்திரிக்குப் போனோம். எல்லா டெஸ்டும் எடுத்துட்டு, பெயரைப் பதிவு செய்தோம். ஆபரேஷனுக்கு மட்டும் 20 லட்சம் ரூபாய் கட்டினோம். பொருந்துற மாதிரி கை, தானம் கிடைச்சதும், உடனடியா ஆபரேஷன் செய்றதுக்கு ஏதுவா ஆஸ்பத்திரிக்குப் பக்கத்திலேயே தங்கச் சொன்னாங்க. வாடகைக்கு வீடு பிடிச்சு தங்கினோம். மனைவியைக் கவனிச்சுக்க தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உதவியாளரை உடன் வெச்சேன். குளிப்பாட்டி விடுறது, சாப்பாடு ஊட்டிவிடுறது உட்பட எல்லாத் தேவைகளுக்கும் அவங்கதான் உதவியா இருந்தாங்க.

நானும் பசங்களும் விடுமுறை நாள்கள்ல கேரளாவுக்குப் போய் லிங்கசெல்வியைப் பார்த்துட்டு வருவோம். கை இல்லாத நிலை, குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கிற வெறுமையான உணர்வால் அவங்க ரொம்பவே விரக்தியாகிட்டாங்க. சீக்கிரமே கை தானம் கிடைக்கணும்னு எல்லோரும் ஆவலோடு காத்திருந்தோம். அதுவரைக்குமான ரெண்டு வருஷமும் எங்க குடும்பத்துக்கே தவமிருந்த காலம் மாதிரி இருந்துச்சு. அந்த நேரத்துல லிங்கசெல்வி தினமும் ஆஸ்பத்திரிக்குப் போய் மருத்துவர்களைச் சந்திச்சுப் பேசுவாங்க. அதனால, அந்த ஆபரேஷனுக்கான மன தைரியம் மனைவிக்கு அதிகரிச்சது.

கைகள் நீக்கப்பட்ட தருணத்தில் லிங்கசெல்வி

Also Read: மகனுக்காக 10 நாள் கொரோனா வார்டில் தங்கியிருந்த `ஆண் தேவதை’ மாதேஷ்!

2018-ல் ஆபரேஷன் நல்லபடியா நடந்தது. ஒரு வாரத்துக்குப் பிறகுதான் மனைவியைப் பக்கத்துல இருந்து பார்க்க அனுமதிச்சாங்க. ஒரு மாசத்துல டிஸ்சார்ஜ் ஆனாலும், தினமும் ஆஸ்பத்திரிக்குப் போய் பொருத்தப்பட்ட கையை இயங்க வைப்பதற்கான பயிற்சியை எடுத்துக்கிட்டாங்க. மூணு மாதத்துக்குப் பிறகு கையை லேசா அசைக்க முடிஞ்சது. ஆபரேஷனுக்குப் பிறகும் ஒரு வருஷம் கேரளாவுலயே இருந்த நிலையில, போன வருஷம்தான் வீட்டுக்கு வந்தாங்க. இப்ப தனது தேவையை அவங்களே ஓரளவுக்குப் பூர்த்தி செய்துகிறாங்க” என்கிறார் மெல்லிய புன்னகையுடன்.

கேரளாவைச் சேர்ந்த அருண் ராஜ் என்ற இளைஞர் 2018-ல் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தார். அவரின் கைகள், கண்கள், இதயம், சிறுநீரகம் உட்பட ஏழு உடல் உறுப்புகளைக் குடும்பத்தினர் தானமாகக் கொடுத்துள்ளனர். அருண் ராஜின் கைகள்தான் லிங்கசெல்விக்குப் பொருத்தப்பட்டது. அவரின் உருவப் படத்துக்கு பூ வைத்து தினமும் வணங்கிவருகிறார்கள், லிங்கசெல்வியின் குடும்பத்தினர்.
அருண் ராஜ் படத்துடன் லிங்கசெல்வி

தனது மடியிலுள்ள அருண்ராஜின் போட்டோவைப் பார்த்தபடி பேசும் லிங்கசெல்வி, “எனக்கு ஆபரேஷன் முடிஞ்சு சில மாதத்துக்குப் பிறகு, அந்த ஆஸ்பத்திரியில அருண்ராஜின் குடும்பத்துக்கு நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்துச்சு. உடல் உறுப்புகளை தானம் பெற்றுப் பயனடைந்த குடும்பத்தினரின் சார்பில் அருண்ராஜின் கரங்களாலேயே அவரின் குடும்பத்துக்கு நினைவுப் பரிசு வழங்க ஏற்பாடு செய்தாங்க. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் கலந்துகிட்ட அந்த நிகழ்ச்சியில் நாங்க கலங்கிட்டோம்.

அப்போதுதான் அருண் குடும்பத்தினரை நேரில் பார்த்து நன்றி சொன்னோம். பிறகு, போன வருஷம் பொங்கல் பண்டிகையின்போது அருண் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கோம். அருண் எங்களுக்குக் கடவுள்போல. அந்த மின்விபத்தால் கைகள் நீக்கப்பட்ட பிறகு எனக்கு வாழவே பிடிக்கலை. ‘என்னைச் சாகடிச்சுடுங்க’னு சொல்வேன். என்னால முடிஞ்சவரை கை தானம் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடன் சுமையிலுள்ள என் குடும்பத்தினருக்கு ஊக்கம் கொடுக்கவும் இப்ப நல்லபடியா வாழ ஆசைப்படறேன். இதுவரை தமிழ்நாட்டில் எனக்கும், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கும்தான் கை மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கு. ஆனா, கை தானம் கேட்டு நூற்றுக்கணக்கானோர் பதிவு செய்து காத்திருக்காங்க. மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கைகளையும் இன்னொருத்தருக்குத் தானம் செய்ய முடியும்.

இதுபோன்ற உடலுறுப்பு தானங்கள் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரை வாழ வைக்க முடியும். அல்லது, எனக்குக் கிடைச்ச கை தானம்போல, பலருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். இதனால தானம் கொடுத்த, தானம் பெற்ற குடும்பத்தினருக்குப் பெரிய மனநிறைவு கிடைக்கும். எனவே, கை தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமானா, எங்களைப்போல நிறைய குடும்பங்கள் பயன்பெறும். இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நான் பேசினேன். இந்த ஆபரேஷன் பத்தின விழிப்புணர்வு நிறையவே அதிகரிக்கணும். குறிப்பா, இப்ப கை மாற்று அறுவை சிகிச்சையை தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாவே செய்துக்க முடியும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

“என் மனைவியின் ஆபரேஷனுக்கு பணம் திரட்ட நாங்க தவிச்சப்போ, நண்பர்கள், உறவினர்கள் பலரும் கேட்காமலேயே பண உதவி செய்தாங்க. அவங்களுக்கெல்லாம் திருப்பி கைமாறு செய்யணும். இப்போ பல்வேறு கடைகளுக்கு அக்கவுன்ட்ஸ் எழுதுற வேலையைச் செய்றேன். ஐ.டி வேலைக்குப் போகும் பெரிய பையன் கணேஷ், சின்ன வயசுலயே குடும்ப பொறுப்புகளை நம்பிக்கையுடன் சுமக்கிறான். கை மாற்று அறுவை சிகிச்சை உட்பட அந்த மின்விபத்துக்குப் பிறகான மொத்த சிகிச்சைக்கும் இதுவரை ஒரு கோடி ரூபாய்வரை செலவாகியிருக்கு.

குடும்பத்துடன் லிங்கசெல்வி

அதுல, 50 லட்சம் ரூபாய் கடன் சுமை இருக்கு. மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய்வரை வட்டி கட்டறோம். பொருளாதார ரீதியா பெரிய சுமைதான் எங்களுக்கு. ஆனா, என் மனைவியின் முகத்துல சந்தோஷத்தைப் பார்த்துகிட்டே, கூடுதலா உழைச்சு நிச்சயம் எல்லாக் கடனையும் அடைச்சுடுவோம்னு நம்பிக்கையிருக்கு” என்கிற லிங்கேஸ்வரனின் மடியில் ஏறிக்கொண்டது வீட்டின் ஐந்தாவது உறவான வளர்ப்பு நாய்!



source https://www.vikatan.com/lifestyle/women/the-inspirational-story-of-lingaselvi-who-lost-her-hands-but-fought-back-hard

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக