Ad

வியாழன், 2 ஜூலை, 2020

கொரோனா: `முடிவுகள் கொடுப்பதில் தாமதம்' -தேனி நிர்வாகத்தைச் சுற்றும் சர்ச்சை

தேனி மாவட்டத்தில், இதுவரை 801 நபர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதில், 191 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 606 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்காக தேனி மாவட்டத்தில் உள்ள கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தவிர்த்து, மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம், போடி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓடைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Periyakulam GH

நேற்று, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்த நபர்கள், திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தாங்கள் கொரோனா சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் கடந்த நிலையில், இன்னும் எங்களுக்கான மருத்துவ முடிவுகளைக் கொடுக்காதது ஏன்?’ என்பதே அவர்கள் வைத்த குற்றச்சாட்டு. மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் இல்லை. தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. உடனடியாக, அவர்களுக்கான மருத்துவ சோதனை முடிவுகள் கொடுக்கப்பட்டது. அதில், நெகட்டிவ் என ரிசல்ட் வந்த 9 பெண்கள், 7 ஆண்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

Also Read: ``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்

முடிவுகள் வெளியாக ஏன் காலதாமதம் என விசாரித்தோம். நம்மிடையே பேசிய மருத்துவ அதிகாரி ஒருவர், “கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் வேலை செய்யும் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால்தான் முடிவுகள் வர தாமதமானது.” என்றார்.

”மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுகே இந்த நிலை என்றால், கொரோனா அறிகுறியோடு தாமாக முன்வந்து மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் நபர்களுக்கும், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும், தாமதமாகவே முடிவுகள் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு 3 நாட்கள் கூட ஆகிறது. அதுவரை அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. தங்களது அன்றாடப் பணியினை மேற்கொள்கிறார்கள். இதனால், தேனியில் சமூகத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். தேனியில் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது? சென்னைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில்தான் அதிக பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என மார்தட்டிக் கூறும் மாவட்ட நிர்வாகம், ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறது” என்கின்றனர் சமூக ஆர்வலகர்கள்.

தேனி கலெக்டர் அலுவலகம்

மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, “24 மணி நேரமும் 30 நபர்கள் கொண்ட குழு இரவு பகல் பாராமல் வேலை செய்துவருகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், முடிவுகள் அறிவிக்கப்படுவதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படலாம். தானியங்கி முடிவுகளை அறிவிக்கும் பி.சி.ஆர் கருவி இன்னும் சில நாட்களில் இங்கே வர உள்ளது. அதன் பின்னர், முடிவுகளை அறிவிப்பதில் எந்த காலதாமதமும் ஏற்படாது” என்றனர்.

Also Read: கொரோனா பரவல்: அடுத்தடுத்து மூடப்படும் தேனி காவல்நிலையங்கள், அரசு அலுவலகங்கள்



source https://www.vikatan.com/news/tamilnadu/theni-district-administration-has-been-accused-of-delaying-the-release-of-corona-virus-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக