Ad

புதன், 22 ஜூலை, 2020

கடன் தருவதாகப் பணம் பறிக்கும் கும்பல் - கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி நூதன மோசடி!

வங்கியின் பெயரில் தனி நபர்கள் நடத்தும் மோசடிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அப்பாவி மக்களை ஏமாற்றி வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, ஏ.டி.எம் அட்டையின் எண் மற்றும் சிவிவி எண் போன்றவற்றைப் பெற்று மோசடி நடக்கிறது. 

மோசடி

தற்போது, தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடும் விவரம் தெரியவந்துள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த செந்தில் என்பவர் அந்தக் கும்பலிடம் ஏமாந்ததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Also Read: மோசடி நிதி நிறுவனங்கள்... இனி ஏமாற்ற முடியாது!

ஏமாற்றப்பட்டவர் அளித்த புகார் தொடர்பாக நெல்லை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். இதுகுறித்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையரான சரவணன் கூறுகையில்,``கொரோனா ஊரடங்கின் காரணமாக மக்கள் வேலை வாய்ப்பு இல்லாததால் பணத் தேவையில் இருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகச் சொல்லும் அவர்கள், `உங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் தனிநபர் கடனாக 4 லட்ச ரூபாய் தருவதற்கு எங்கள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது’ என ஆசை வார்த்தை காட்டி, தூண்டில் போடுகிறார்கள்.

Also Read: லட்சக்கணக்கில் மோசடி... தூத்துக்குடி இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி! | Shocking

தற்போது பெரும்பாலான மக்கள், பணத் தேவையில் இருக்கிறார்கள். குறைந்த வட்டிக்குக் கடன் கிடைத்தால் அதைப் பெற்றுக்கொண்டு, குழந்தைகளில் கல்வித் தேவைக்கும் தொழில் தேவைக்கும் பயன்படுத்தும் மனநிலையில் இருக்கிறார்கள். பணத் தேவையில் இருப்பவர்கள், நூதன மோசடிக் கும்பலின் வார்த்தையை எளிதில் நம்பிவிடுகிறார்கள். 

துணை ஆணையர் சரவணன்

அந்த மோசடிக் கும்பல் முதலில் டாக்குமென்ட் செலவு, பதிவுக் கட்டணம், ப்ராசஸிங் கட்டணம் என ஒரு குறிப்பிட்ட தொகையைக் கேட்கிறது. அதன் பின்னர் கடன் தொகையில் 5 சதவிகிதம் கட்டச் சொல்கிறது. பணத்தைக் கட்டியதும் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுகிறார்கள். கையில் இருந்த பணத்தையும் இழந்துவிட்டு அப்பாவி மக்கள் தவிக்கிறார்கள். 

நெல்லை மாநகரில் மட்டும் இதுபோல பத்துக்கும் அதிகமானோர் ஏமாந்திருக்கிறார்கள். பலர் புகார் கொடுக்கக்கூட கூச்சப்பட்டு யாரிடமும் சொல்லாமல் சோகத்தில் இருக்கிறார்கள். கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி நூதன மோசடி செய்யும் கும்பலிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/nellai-police-alerts-people-over-loan-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக