Ad

புதன், 22 ஜூலை, 2020

கேரளா: அன்று நூற்றுக்கணக்கானோர்; இன்று 8 பேர்! -இறந்த பிறகும் வாழ்வளித்த இளைஞர்

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் சக மாணவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அதேசமயம் அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி தண்டவாளத்தில் ஓடினார். சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ஓடிச் சென்று ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை கொடுத்தார்.

ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்துகொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இது நடந்தது 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி. மறுநாள் செப்டம்பர் 1-ம் தேதி வெளியான அனைத்து பத்திரிகைகளிலும் அனுஜித்தும் அவரது சிவப்பு நிற பேக்கின் புகைப்படமும் நிறைந்திருந்தது.

அனுஜித்தின் இதயம் எடுத்துச்செல்லப்பட்ட பரபரப்பு நிமிடங்கள்

17 வயதில் மாணவனாக இருக்கும்போது நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காத்த அனுஜித் தனது 27 வயதில் மரணமடைந்த பிறகும் 8 பேருக்கு வாழ்வளித்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்துவந்தார் அனுஜித். லாக்டெளன் காரணமாக டிரைவர் வேலைக்கு செல்லமுடியாததால் கொட்டாரக்கரையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சேல்ஸ்மேனாக பணி செய்து வந்தார். கடந்த 14-ம் தேதி கொட்டாரக்கரைக்கு அருகில் பைக்கில் அனுஜித் சென்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உயிரை காக்க மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் கடந்த 17-ம் தேதி அனுஜித் மூளைச்சாவு அடைந்தார்.

Also Read: உடல் உறுப்பு தானம்! - தொடர்ந்து நான்காவது முறையாகத் தமிழகம் முதலிடம்

இரண்டுமுறை டெஸ்ட் எடுத்து அவரது மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர், மனைவி பிரின்ஸி, சகோதரி அஜல்யாவும் உடல் உறுப்புதானம் செய்வதற்கு சம்மதித்தனர். கேரள முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பல துறைகளுடன் ஆலோசித்து உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. அனுஜித்தின் இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கை எலும்புகள், சிறுகுடல் உள்ளிட்ட உறுப்புகள் எட்டு பேருக்குப் பொருத்தப்பட்டன.

திருப்பூணித்துறையைச் சேர்ந்த சன்னி தாமஸ் (55) என்பவருக்கு இதயம் பொருத்தப்பட்டது. எர்ணாகுளத்தில் சிகிச்சையில் இருந்த சன்னி தாமஸுக்கு இதயத்தை பொருத்துவதற்காக மாநில அரசு வாடகைக்கு எடுத்துள்ள ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இதற்காக கேரள முதல்வர் அனுமதி அளித்திருந்தார். மேலும் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இதற்காக பெரும் முயற்சி எடுத்தனர்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர்

துக்கத்திலும் பிறருக்கு உதவிய அனுஜித்தின் பெற்றோருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் ஆறுதல் கூறிதுள்ளார். இதுபற்றி சைலஜா டீச்சர் கூறுகையில், "அனேகம்பேரை காப்பாற்றி முன்மாதிரியாக வாழ்ந்தவர் அனுஜித். அவரை பிரிந்து வருந்தும் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

அனுஜித்தின் மனைவி பிரின்ஸி தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். அம்மா விஜயகுமாரி, அப்பா சசிதரன்பிள்ளை ஆகியோர் அடங்கிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் அனுஜித்.

மறைந்த பின்னரும் பிறருக்கு வாழ்வளித்த அனுஜித்தை கேரளமே கொண்டாடி வருகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/kerala-27-year-old-youth-saves-8-peoples-life-after-his-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக