Ad

புதன், 22 ஜூலை, 2020

`எங்க இருக்கேன்னு தெரியல; புகாரை வாபஸ் வாங்குங்க!’ தஞ்சை நகைக்கடை அதிபர் கடத்தல்?

ஒரத்தநாடு அருகே வாக்கிங் சென்ற நகைக்கடை உரிமையாளர் ஒருவரை காணவில்லை. 24 மணி நேரத்துக்கு மேலாகியும் அவரைப் பற்றிய எந்த விபரமும் தெரியாததால், அவரின் குடும்பத்தினர் கலங்கியுள்ள நிலையில் பணத்துக்காகக் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்னைக்காகக் காணவில்லையா என போலீஸ் விசாரணை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணை

ஒரத்தநாடு அருகே உள்ள காடுவெட்டி விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சீமான் (50). இவர், குடும்பத்துடன் ஊரணிபுரத்தில் வசித்து வருவதுடன், அதே பகுதியில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு பாலசிவானி (7) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஊரணிபுரத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து கல்லணைக் கால்வாய் ஓரத்தில் அமைந்துள்ள சாலையில் வாக்கிங் சென்றவர், வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அவருடைய உறவினர்கள் சீமானைத் தேடியுள்ளனர் ஆனால், அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் எனத் தெரியவில்லை. பின்னர், இதுதொடர்பாக சீமானின் அண்ணன் ராமச்சந்திரன் திருவோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். `வாக்கிங் சென்றவரைக் காணவில்லை’ என்ற தகவல் அப்பகுதியில் தீயாகப் பரவியதுடன், வணிகர்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பின்னர், இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், சீமான் காணாமல் போனது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நகைக்கடை

இதுகுறித்து அப்பகுதியில் விசாரித்தோம். ``சீமான் ஊரணிபுரத்தில் பல வருடமாக நகைக் கடை தடத்தி வருகிறார். அவர் தினமும் நடைப்பயிற்சிக்குச் செல்வது வழக்கம். அதன்படி சென்றவரை காணவில்லை. ஆற்றங்கரையோரத்தில் உள்ள சாலையில் செல்வதால் ஆற்றுக்குள் விழுந்திருப்பாரா அல்லது அவரை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திவிட்டார்களா எனத் தெரியாமல் அவரின் குடும்பத்தினர் தவித்தனர்.

Also Read: `தங்கக் கடத்தல்' ஸ்வப்னாவுடன் பேசத் தனி பிளாட்! - அதிர்ச்சி கொடுத்த 9 மணிநேர விசாரணை

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் சீமானின் அத்தை மகன் ராஜா என்பவருக்கு சீமான் போன் செய்ததுடன், `நான் நலமாக இருக்கிறேன். ஆனால், எங்கு இருக்கிறேன் எனத் தெரியவில்லை. உடனே, போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்குங்க’ எனக் கூறியிருக்கிறார். அப்போது மற்றொரு நபர் போனை வாங்கி, `பணம் ரெடி பண்ணுங்க. அப்பதான் சீமான் திரும்பி வருவார்’ எனக் கூறியிருக்கிறார்.

எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய்

`சீமான் இல்லாமல் எப்படிப் பணம் ரெடி செய்ய முடியும். இதை அவரை சொல்லச் சொல்லுங்க’ என்று ராஜா கூறியிருக்கிறார். அதற்கு, `சீமான் சொன்னாதான் செய்வீங்களா?’ எனக் கேட்டதுடன் `எச்சரிக்கை செய்கிறேன். பணத்தை ரெடி பண்ணுங்க’ எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்திருக்கிறார்கள். இதையடுத்து பதற்றம் அடைந்த உறவினர்கள் போலீஸாரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றனர்’’ என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சீமான் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை செய்தார். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், ஆற்றங்கரையோர பகுதிக்குச் சென்றும் ஆய்வு செய்தார். இதில், `சீமானுக்கு எந்த முன்விரோதமும் இல்லை, தொழில் போட்டி மற்றும் சொத்து பிரச்னை என எதுவும் இல்லை. காணாமல் போய் 24 மணி நேரத்தைக் கடந்துவிட்டது. அவருக்கு என்னவாகியிருக்குமோ எனத் தெரியவில்லை. சீக்கிரம் அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்க சார்’ என சீமான் மனைவி எஸ்.பி-யிடம் தெரிவித்துள்ளார்.

Also Read: மந்திரித்த கயிறு, சொந்த நகைக்கடை... கொள்ளையர்கள் மாட்டிய பின்னணி! #TamilnaduCrimeDiary

போலீஸ் தரப்பிலோ, சீமானுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. அதற்காக யாரேனும் கடத்திச் சென்றார்களா அல்லது பணம் பறிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் யாரும் கடத்திச் சென்றார்களா என்பது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் ஆறு தனிப்படை அமைத்து சீமானை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/tanjore-jwellery-owner-missing-from-yesterday-morning-family-files-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக